கேரளத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறப்பு: முதலில் வெளியாகிறது விஜய் நடித்த மாஸ்டர் படம்

கேரளத்தில் அடுத்த மூன்று வாரங்களுக்கு விஜய் நடித்த மாஸ்டர் படம் தான் திரையரங்குகளில் ஆதிக்கம் செலுத்தப் போகிறது...
கேரளத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறப்பு: முதலில் வெளியாகிறது விஜய் நடித்த மாஸ்டர் படம்

கேரளத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. முதல் படமாக விஜய் நடித்த மாஸ்டர் படம் 350 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த மாா்ச் மாதம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. பொதுமுடக்கத் தளா்வுகளில், திரைத்துறையினரின் தொடா் கோரிக்கைகளைத் தொடா்ந்து, படப்பிடிப்பு, 50 சதவீதப் பாா்வையாளா்களுடன் திரையரங்கம் திறப்பு எனப் படிப்படியான அனுமதிகள் வழங்கப்பட்டன.

கேரளத்தில் கடந்த பத்து மாதங்களாகத் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நாளை முதல் கேரளத்தில் திரையரங்குகள் மீண்டும் இயங்கவுள்ளன. கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் படங்களைத் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளத்தில் பத்து மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்குகளில் முதலில் எந்தவொரு மலையாளப் படமும் வெளியாகப் போவதில்லை. பதிலாக தமிழ்ப் படமான விஜய் நடித்த மாஸ்டர், கேரளாவில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த மாதம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்களின் மலையாளப் படங்கள் எதுவும் வெளியாகப் போவதில்லை. மாஸ்டர் படம் எப்படி ஓடுகிறது, ரசிகர்கள் எந்தளவுக்குத் திரையரங்குகளுக்கு வருகிறார்கள் என்கிற தகவல்களை அறிந்த பிறகே மலையாளப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளன. தற்போதைக்கு 80 மலையாளப் படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. கேரளாவில் நாளை முதல் திரையரங்குகள் இயங்கத் தொடங்கினாலும் புதிய மலையாளப் படங்கள் அடுத்த மாதம் தான் ஒவ்வொன்றாக வெளிவரவுள்ளன. மம்மூட்டி நடித்த ஒன் படமும் முதலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த மூன்று வாரங்களுக்கு கேரளாவில் விஜய் நடித்த மாஸ்டர் படம் தான் திரையரங்குகளில் ஆதிக்கம் செலுத்தப் போகிறது. எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாததால் கேரளாவில் 350 திரையரங்குகளில் மாஸ்டர் படம் திரையிடப்படுகிறது. கேரளாவில் விஜய் படங்கள் அதிக வசூலை அள்ளும் என்பதால் மாஸ்டர் படமும் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் எனப் படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது. 

பத்து மாதங்கள் கழித்து திரையரங்குகள் திறக்கப்படுவதால் சில சலுகைகளை கேரள அரசு வழங்கியுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான கேளிக்கை வரியை ரத்து செய்துள்ளது. மேலும் மின்சாரக் கட்டணத்திலும் 50 சதவீத சலுகை வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com