
பட வெளியீட்டுக்கு முன்பு மாஸ்டர் படக் காட்சிகள் இணையத்தில் கசிந்த நிலையில் அதற்காக நஷ்ட ஈடு கேட்டு மாஸ்டர் பட தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியானது.
மாஸ்டர் படத்தைச் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் இணையத்தளங்களில் கசிய விடப்பட்டன. இதையடுத்து மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் தெரிவித்ததாவது: ஒன்றரை வருடப் போராட்டத்துக்குப் பிறகு மாஸ்டர் படத்தை உங்களுக்கு வழங்கவிருக்கிறோம். நீங்கள் திரையரங்குகளில் படத்தை ரசிப்பதற்காகத்தான் அத்தனையும் செய்துள்ளோம். கசிய விடப்பட்டுள்ள மாஸ்டர் படக்காட்சிகளைச் சமூகவலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்றார்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் காட்சிகள் கசிந்தது குறித்து தயாரிப்பு நிறுவனம் விசாரணை செய்தது. அதன்படி மாஸ்டர் படத்தின் இறுதிகட்டப் பணிகளில் ஈடுபட்ட முன்னணி நிறுவனத்தால் இந்த நிலை ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சில வகை புரொஜக்டர்கள் உள்ள திரையரங்குகளுக்குப் படத்தை ஒரு நிறுவனத்தின் மூலமாகவே அனுப்ப முடியும். அப்படி அனுப்புவதற்கு முன்பு படத்தை முழுமையாகத் திரையிட்டுப் பார்ப்பார்கள். அப்போது ஒருவர் செல்போனில் படக்காட்சிகளைப் படம்பிடித்து வெளியே கசிய விட்டுள்ளார்.
இந்நிலையில் சட்டவிரோதமாக மாஸ்டர் படக்காட்சிகளை வெளியிட்டதற்காக குறிப்பிட்ட நிறுவனத்திடம் ரூ. 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு மாஸ்டர் தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.