ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் கதையில் செய்த மாற்றங்கள் என்ன?: கே.எஸ். ரவிகுமார் விளக்கம்

முதல் பாதியை நான் பார்த்தபோது படம் மெதுவாகச் செல்வது போல இருந்தது...
ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் கதையில் செய்த மாற்றங்கள் என்ன?: கே.எஸ். ரவிகுமார் விளக்கம்

ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் தமிழ் ரீமேக்கில் செய்த மாற்றங்கள் குறித்து இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

2019-ல் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படமான ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25. ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. சுராஜ், செளபின் போன்றோர் நடித்திருந்தார்கள்.

தெனாலி படத்துக்குப் பிறகு ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் என்கிற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கைத் தயாரிக்கிறார் பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார். ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படம் தமிழில் கூகுள் குட்டப்பன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதியவர் வேடத்தில் கே.எஸ். ரவிகுமார் நடிக்கிறார். தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு போன்றோரும் நடிக்கிறார்கள். கே.எஸ். ரவிகுமாரின் உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணன் கூகுள் குட்டப்பனை இயக்குகிறார்கள். இசை - ஜிப்ரான். நேற்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பிப்ரவரி 15 முதல் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 

செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் பேசியதாவது:

கூகுள் குட்டப்பன் படத்தை திரையரங்குகளில் வெளியிடுகிறோம். இது ஓடிடிக்காக எடுக்கும் படமல்ல. படம் திரையரங்குகளில் வெளியான பிறகுதான் ஓடிடியில் வெளியாகும். 

மலையாளப் படத்தில் உள்ள அடிப்படைக் கதை தான் கூகுள் குட்டப்பனில் இருக்கும். எனக்கு மலையாளம் தெரியாது. ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தின் முதல் பாதியை நான் பார்த்தபோது படம் மெதுவாகச் செல்வது போல இருந்தது. இதனால் சில பகுதிகளை மாற்றியுள்ளோம். யோகி பாபுவை நண்பராக நடிக்க வைத்து நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கியுள்ளோம்.  படத்தின் மையக்கதை அதே தான். அதில் மாற்றம் இருக்காது. மலையாளப் படங்களில் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும். தமிழிலும் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் உள்ளன. 

ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் தமிழ் ரீமேக் படத்துக்குப் பெயர் வைக்கும்போது முதலில் (கூகுள்) குள்ளமணி என வைக்கலாம் என நினைத்தோம். குள்ளமணி என்றால் மென்மையாக உள்ளது. ஜாலியான காட்சிகளில் குட்டப்பா எனக் கூப்பிடுவதை விடவும் கடைசிக் காட்சியில் குட்டப்பா எனும்போது ஓர் உணர்வு வரும். குள்ளமணி என்றால் அந்த உணர்வு குறைந்து விடுகிறது. இன்னும் நிறைய தலைப்புகளை யோசித்துப் பார்த்தோம். கட்டப்பா என இருக்கும்போது குட்டப்பாவை ஒப்புக்கொள்ள மாட்டீர்களா? கட்டப்பா என இங்கு யாரும் அழைப்பதில்லை. ஆனால் பாகுபலி பார்த்த பிறகு கட்டப்பா எவ்வளவு புகழ் அடைந்தது! அதுபோல இதுவும் ஆகுமே எனப் பெயர் வைத்துள்ளோம். இந்தத் தலைப்பு தான் சரியாக இருந்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com