சார்பட்டா பரம்பரை அரசியல்: கண்டித்த ஜெயக்குமார் , பாராட்டிய உதயநிதி

பா.ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை' படக் குழுவினருக்கு நடிகரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சார்பட்டா பரம்பரை அரசியல்: கண்டித்த ஜெயக்குமார் , பாராட்டிய உதயநிதி

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்த, 'சார்பட்டா பரம்பரை' படம் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 1970களில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த அரசியல் கருத்துக்கள் பெரிதும் விமரிசனத்துக்குள்ளாகியுள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''எம்ஜிஆர் விளையாட்டுத்துறைக்கு நிறைய நல்லது செய்துள்ளார். அவர் எதுவுமே செய்யாதது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மான் கொம்பு சண்டை, வாள் சண்டை, குத்துச் சண்டை, குதிரையேற்றம் ஒவ்வொரு படத்திலும் விளையாட்டு வீரராகவே வெளிப்படுத்திக்கொண்டவர் எம்ஜிஆர். 

முக்கியமாக குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே தலைவர் எம்ஜிஆர். நலிவடைந்த வீரர்களுக்கு அரசின் நிதி அளித்து சர்வதேச போட்டிகளில்  அவர்களை பங்கேற்க செய்து அழகு பார்த்தார். ஆனால் இத்திரைப்படம் முழுக்க முழுக்க திமுகவின் அரசியல் படமாகவே எடுக்கப்பட்டுள்ளது. அதிகார மைய இடத்தில் அடைக்கலமாக, எதிர்கட்சியின் மீது புழுதி வாரி தூற்ற வேண்டுமா ரஞ்சித் ?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை படம் குறித்து திமுக இளைஞரணி செயலாளரும்,  சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது சுட்டுரைப் பக்கத்தில், ''70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை' முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது.

கபிலனாக அசத்தியுள்ள நண்பர் ஆர்யா, கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக பசுபதி சார், டான்சிங் ரோஸாக ஷபீர் கல்லரக்கல், வேம்புலியாக ஜான் கொக்கேன், ஜான் விஜய் என வாழ செய்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித் ஆகிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com