மூன்று வாரங்களுக்கு வேறு படம் திரையிடக்கூடாது: புதிய நிபந்தனைகளுடன் வெளியாகும் மரைக்காயர்

மூன்று வாரங்களுக்கு வேறு படம் திரையிடக்கூடாது: புதிய நிபந்தனைகளுடன் வெளியாகும் மரைக்காயர்

கேரளத்தில் மூன்று வாரங்களுக்கு வேறு படங்கள் எதையும் திரையிடக்கூடாது என்கிற புதிய நிபந்தனைகளுடன்...

கேரளத்தில் மூன்று வாரங்களுக்கு வேறு படங்கள் எதையும் திரையிடக்கூடாது என்கிற புதிய நிபந்தனைகளுடன் மோகன் லால் நடித்த மரைக்காயர் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கிய மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிம்ஹம் என்கிற மலையாளப் படத்தில் மோகன்லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். (இந்தப் படம் தமிழில், மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் என்கிற பெயரில் வெளிவருகிறது.)

2019-ம் ஆண்டிற்கான சிறந்த தேசிய திரைப்படமாக மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிம்ஹம் படம் தோ்வு செய்யப்பட்டது. சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஆடை வடிவமைப்பு என மொத்த மூன்று தேசிய விருதுகளை அள்ளியது.

மரைக்காயர் படம் முதலில் 2020, மார்ச் 26 அன்று வெளியாகவிருந்தது. எனினும் கரோனா பரவல் காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு ஆகஸ்ட் 12 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பிறகு கரோனா சூழல் காரணமாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

எனினும் மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிம்ஹம் படம் திரையரங்குகளில் ஏற்கெனவே திட்டமிட்ட தேதியில் வெளியாகும் என மோகன்லால் அறிவித்தார். ஓணம் வெளியீடாக ஆகஸ்ட் 12 அன்று திரையரங்குகளில் மரைக்காயர்: அரபிக்கடலின்டே சிம்ஹம் படம் வெளியாகும் என ட்வீட் செய்தார். 

இந்நிலையில் மரைக்காயர் படம் கேரளத் திரையரங்குகளில் வெளியாவது தொடர்பாக கேரளத் திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்துக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 12 அன்று கேரளத்தில் உள்ள 600 திரையரங்குகளில் மரைக்காயர் படம் வெளியாகும். இதனால் ஆகஸ்ட் 12 முதல் அடுத்த மூன்று வாரங்களுக்கு வேறு புதிய படங்கள் எதையும் திரையரங்குகள் திரையிடக்கூடாது என்கிற புதிய நிபந்தனை இரு தரப்பினருக்குமிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகப் பொருட்செலவில் உருவான படம் என்பதாலும் வெளியீட்டுக்காக இரண்டு வருடங்கள் காத்திருப்பதாலும் மரைக்காயர் படத்தைத் திரையரங்குகளில் பிரதேயகமாக வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் வேறு எந்தப் படமும் வெளியாகத் தயாராக இல்லாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவது தொடர்பான எந்த முடிவையும் மாநில அரசு இதுவரை எடுக்கவில்லை. எனினும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகள் செயல்படுவதற்காக வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் மரைக்காயர் படம் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com