கதாநாயகியாக நடிக்கும் லட்சியம் இல்லை: நடிகை தேவதர்ஷினி

காதல் காட்சிகளில் நடிப்பதற்கும் நடனமாடுவதற்கும் எனக்கு அச்சம் இருந்தது....
கதாநாயகியாக நடிக்கும் லட்சியம் இல்லை: நடிகை தேவதர்ஷினி

கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்கிற லட்சியம் எனக்குக் கிடையாது என நடிகை தேவதர்ஷினி கூறியுள்ளார்.

ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துப் புகழ்பெற்றவர் தேவதர்ஷினி. அமேசான் பிரைம் ஓடிடியில் சமீபத்தில் வெளியான ஃபேமிலி மேன் 2 இணையத்தொடரில் நடித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் தேவதர்ஷினி கூறியதாவது:

கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்கிற லட்சியம் எனக்குக் கிடையாது. திரைப்படங்களுக்காகக் காதல் காட்சிகளில் நடிப்பதற்கும் நடனமாடுவதற்கும் எனக்கு அச்சம் இருந்தது என நினைக்கிறேன். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தது அலுவலகத்துக்குச் சென்று வருவது மாதிரி இருந்தது. திருமணத்துக்குப் பிறகு, படங்களின் கதைகளைக் கேட்டு விட்டு முடிவெடுக்கச் சொன்னார் கணவர் சேத்தன். எனக்கு 20 உனக்கு 18 தான் நான் நடித்த முதல் படம். பிறகு பார்த்திபன் கனவு, காக்க காக்க படங்களில் நடித்தேன். திருமணத்துக்குப் பிறகு தான் இப்படங்களில் நடித்தேன். 

பெரிய நடிகர்களின் படங்களிலும் நல்ல குணச்சித்திரக் கதாபாத்திரங்கள் எழுதப்படுகின்றன. காக்க காக்க இதற்கு நல்ல உதாரணம். எனக்கு நல்ல கவனம் கிடைத்தது. 96 படம் ராம், ஜானு பற்றியதுதான். ஆச்சர்யமாக எனது கதாபாத்திரத்துக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. என் கதாபாத்திரத்தின் இளவயது வேடத்துக்கு என் மகள் நடித்தார். அப்போது என் மகளிடம் சொன்னேன், கதாநாயகி மீது கவனம் இருப்பதால் யாரும் உன்னைக் கவனிக்க மாட்டார்கள் என. ஆனால் என் மகள் நடித்ததையும் பலர் கவனித்துப் பாராட்டினார்கள். இதுவும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இன்று நல்ல கதாபாத்திரங்களை இயக்குநர்களும் கதாசிரியர்களும் எழுதுகிறார்கள். 

தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடரில் என்னைப் போன்ற தமிழ் நடிகையை நடிக்க வைத்தது சரியான முடிவாகவே பட்டது. இதற்கு முன்பு ஹிந்தி இணையத் தொடர்களில் தமிழ் நடிகர்கள் அவ்வளவாக நடிக்காததால் வித்தியாசமாக இருந்திருக்கும். எனக்கு அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு தமிழ்ப் படத்தில் நடிப்பது போன்றே இருந்தது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com