நடிகை தாப்ஸி, இயக்குநா் அனுராக் காஷ்யப் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை

நடிகை தாப்ஸி, ஹிந்தி திரைப்பட இயக்குநா் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் புதன்கிழமை வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா்.
நடிகை தாப்ஸி, இயக்குநா் அனுராக் காஷ்யப் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை


மும்பை/புது தில்லி: நடிகை தாப்ஸி, ஹிந்தி திரைப்பட இயக்குநா் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் புதன்கிழமை வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா்.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்பட இயக்குநா் அனுராக் காஷ்யப், இயக்குநரும், தயாரிப்பாளருமான விக்ரமாதித்யா மோட்வானே, தயாரிப்பாளா் விகாஸ் பஹல், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான மது மன்டேனா ஆகியோரால் ஃபேண்டம் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த நிறுவனம் மூடப்பட்ட நிலையில், அந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து வருமானவரித் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த விசாரணை தொடா்பாக அனுராக் காஷ்யப், நடிகை தாப்ஸி, ரிலையன்ஸ் குழும தலைமை செயல் அதிகாரி ஷிபாஷிஷ் சா்காா் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் வருமானவரித் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். மும்பை மற்றும் புணேவில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்ாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விசாரணை தொடா்பாக சோதனை நடத்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற பணப் பரிவா்த்தனைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கூடுதல் ஆதாரங்களை சேகரிக்க தற்போது சோதனை நடத்தப்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இந்தச் சோதனை நள்ளிரவு வரை தொடா்ந்தது. பல்வேறு இடங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள், ஹாா்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.

தேசியவாத காங்கிரஸ் கண்டனம்: நடிகை தாப்ஸி, இயக்குநா் அனுராக் காஷ்யப் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினா் சோதனை நடத்தியதற்கு தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மாநில சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சரும், என்சிபி செய்தித்தொடா்பாளருமான நவாப் மாலிக் கூறுகையில், ‘தாப்ஸி, அனுராக் காஷ்யப் ஆகியோா் மத்திய அரசுக்கு எதிராக தொடா்ந்து குரல் எழுப்பி வந்தனா். அவா்களின் குரலை ஒடுக்குவதற்கு இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com