சிக்கல் தீர்ந்தது: திட்டமிட்டபடி நாளை வெளியாகவுள்ள செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை!

நெஞ்சம் மறப்பதில்லை படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகவுள்ளது. 
சிக்கல் தீர்ந்தது: திட்டமிட்டபடி நாளை வெளியாகவுள்ள செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை!

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகவுள்ளது. 

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் - நெஞ்சம் மறப்பதில்லை. நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்துள்ள படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தணிக்கையில் யு/ஏ பெற்றுள்ளது. 

2017-ம் ஆண்டு வெளியாக வேண்டிய இந்தப் படம் பல தடங்கல்களால் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் நாளை இப்படம் வெளிவரத் தயாராகியுள்ளது.

நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் இடைக்காலத் தடை விதித்தது.

இப்படத்தைத் தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் ரூ. 1.24 கோடி கடன் வைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம், எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்துக்காக ரூ. 2.42 கோடி கடன் கேட்டது. படத்தை வெளியிடுவதற்கு முன்பு ரூ. 1.75 கோடியைத் திருப்பிச் செலுத்தியது. மீதமுள்ள ரூ. 1.24 கோடியைத் திருப்பிச் செலுத்தாமல் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை வெளியிடவுள்ளார்கள். இதனால் கடன் நிலுவைத் தொகையை வட்டியுடன் செலுத்தும்படி ரேடியன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. 

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ரூ. 60 லட்சத்தைத் திருப்பிச் செலுத்தி விட்டதாகவும் மீதமுள்ள ரூ. 81 லட்சத்தை வட்டியுடன் ஜூலை மாதத்துக்குள் திருப்பிச் செலுத்தவுள்ளதால் தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ரேடியன்ஸ் நிறுவனம் சார்பிலும் ரூ. 60 லட்சத்தைப் பெற்றுக்கொண்டதால் படத்தை வெளியிட ஆட்சேபனை இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால் நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்பட்டுள்ளது.

இதனால் நெஞ்சம் மறப்பதில்லை படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com