மாதுரி தீட்சித் பங்கேற்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியைச் சேர்ந்த 18 பேருக்கு கரோனா பாதிப்பு

லைட்மேன், கேமரா உதவியாளர்கள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநரின் உதவியாளர்கள்...
படம்: www.colorstv.com
படம்: www.colorstv.com

நடிகை மாதுரி தீட்சித் நடுவராகப் பங்கேற்கும் டான்ஸ் தீவானே என்கிற நடன நிகழ்ச்சியின் குழுவைச் சேர்ந்த 18 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பிரபல நடிகையான மாதுரி தீட்சித், கடைசியாக 2019-ல் வெளியான கலான்க் என்கிற படத்தில் நடித்தார். 2018 முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் தீவானே என்கிற நடன நிகழ்ச்சியின் நடுவராகப் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியின் 3-வது பருவம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்நிலையில் டான்ஸ் தீவானே படப்பிடிப்பில் பங்கேற்ற 18 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு வாரமும் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு குழுவினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் கரோனா இல்லை என உறுதியான பிறகு படப்பிடிப்பில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 18 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதர ஊழியர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 

எஃப்டபிள்யூஐசிஈ என்கிற திரைப்பட ஊழியர்கள் அமைப்பின் பொதுச்செயலாளர் அசோக் டூபே கூறியதாவது:

டான்ஸ் தீவானே நிகழ்ச்சியைச் சேர்ந்த 18 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாதுரி தீட்சித் உள்ளிட்ட நடுவர்கள் அனைவரும் நலமாக உள்ளார்கள். அரங்க ஊழியர்கள், லைட்மேன், கேமரா உதவியாளர்கள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநரின் உதவியாளர்கள், சில போட்டியாளர்கள் ஆகியோர் தான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நிகழ்ச்சியின் அடுத்த படப்பிடிப்பு ஏப்ரல் 5 அன்று திட்டமிட்டபடி தொடங்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com