சந்தோஷமா போய்ட்டு வாங்க: நடிகை ப்ரியா பவானி சங்கர் உருக்கம்

உன்னை உன் அப்பா தைரியமான பெண்ணாக வளர்த்துள்ளார். என் பெண்ணை நீ நன்றாகப் பார்த்துக்கொள்வாய்...
சந்தோஷமா போய்ட்டு வாங்க: நடிகை ப்ரியா பவானி சங்கர் உருக்கம்

சமீபத்தில் இறந்து போன தனது தாத்தாவின் நினைவுகளைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் நடிகை ப்ரியா பவானி சங்கர். 

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா பவானி சங்கர், பிறகு விஜய் தொலைக்காட்சியின் கல்யாணம் முதல் காதல் வரை நாடகத்தில் நடித்துப் புகழ் பெற்றார். பட வாய்ப்புகளை முதலில் மறுத்து வந்த ப்ரியா, மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் அடுத்து நடித்தார்.

இந்தியன் 2, ருத்ரன், பொம்மை, ஹாஸ்டல், குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, கசட தபற, இயக்குநர் ஹரி - அருண் விஜய் படம் போன்ற ஏராளமான படங்களில் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.

இந்நிலையில் ப்ரியா பவானி சங்கரின் தாத்தா சமீபத்தில் காலமானார். இதையடுத்து இன்ஸ்டகிராமில் அவர் எழுதியதாவது:

தாத்தா! 

வியாபாரத்தில் வெற்றி கண்டவர். தனி மனிதராக ஒன்றுமே இல்லாமல் வாழ்க்கையை ஆரம்பித்து ஐந்து பிள்ளைகளையும் அமோகமாகப் படிக்க வைத்து 10 பேரப் பசங்களில் 8 பேரை மருத்துவர்களாக்கி அவர்களையும் மருத்துவர்களுக்குக் கட்டிக்கொடுத்து தான் உருவாக்கின ஒரு சிறிய மருத்துவர்கள் சூழ் உலகத்தில் பெருமையாக வாழ்ந்தவர்.

நேற்று இறந்து போய் அசையாமல் இருந்த தாத்தாவைப் பார்க்கும்போது மூளையின் ஓரத்தில் எங்கேயோ எப்போதோ புதைந்து மறந்துபோன ஒரு கோடி ஞாபகம். என் தாத்தாவின் மருத்துவக் கல்லூரி செல்லாத ஒரே பேத்தி நான். போன வாரம் கடைசியாக அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, உன்னை உன் அப்பா தைரியமான பெண்ணாக வளர்த்துள்ளார். என் பெண்ணை நீ நன்றாகப் பார்த்துக்கொள்வாய் எனத் தெரியும் என்றார். எங்கள் தாத்தா எங்களுக்கு எந்தச் சொத்தும் எழுதிவைத்துவிட்டுப் போகவில்லை. ஆனால், என்னுடைய முதல் சம்பளத்தில் 1950-ல் அன்றைய காசு 24 ரூபாய்க்கு என்னோட அம்மாவுக்காக வாங்கின தோடு, இதை இனிமேல் நீ வைத்துக்கொள் என என்னிடம் கொடுத்தார். என் தாத்தாவால் பாராட்டப்பட்டதாக நான் உணர்ந்தேன். உங்கள் அம்மாவின் தோடையும் உங்கள் பெண்ணையும் மாப்பிளையையும் என் உயிரை விடவும் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன் தாத்தா. சந்தோஷமா போய்ட்டு வாங்க என நீண்ட பதிவொன்றை எழுதியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com