கமல்ஹாசனின் பேச்சைக் கேட்டு வாழ்க்கையில் முன்னேறிய ரசிகர் : நெகிழ்ச்சி பேட்டி

கமல்ஹாசனின் பேச்சைக் கேட்டு வாழ்க்கையில் முன்னேறியதாக அவரது ரசிகர் தெரிவித்துள்ளார். 
கமல்ஹாசனின் பேச்சைக் கேட்டு வாழ்க்கையில் முன்னேறிய ரசிகர் : நெகிழ்ச்சி பேட்டி

பன்முகத் திறன் கொண்ட நடிகர் கமல்ஹாசன் முற்போக்குவாதியும் கூட. மாற்றுச் சிந்தனையுடைய அவரது படங்கள் பலவற்றில் முற்போக்குக் கருத்துகள் மேலோங்கி இருக்கும். என்றாலும் கூட அவர் மீதான எதிர்மறை விமர்சனங்களும் அதிகம்.

ஆனால், அவர் புகழின் உச்சியில் இருந்த 1980களிலேயே மற்ற நடிகர்களிலிருந்து எந்த அளவுக்கு வித்தியாசமானவர் என்பதை அவரது ரசிகர்கள் கூறி வியக்கின்றனர். இதுதான் அவருக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டாரத்தையும் உருவாக்கியிருக்கிறது. அக்கூட்டம் இன்றும் கலையாமல் நிலைத்து நிற்பது மட்டுமல்லாமல், அவரது அரசியல் வாழ்க்கையிலும் இணைந்து பயணிக்க வைத்திருக்கிறது.

நடிகர்கள் தங்களுக்கென ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொள்வது நீண்ட கால வழக்கமாக இருந்து வருகிறது. இதற்காகச் சில லட்சங்களைச் செலவு செய்து, மிகப் பெரிய அளவில் சிரத்தையும் எடுத்துக் கொள்வர். ரசிகர்கள் மூலம் தனக்கு கட் அவுட், பதாகை, சுவரொட்டி அமைப்பதில் முக்கியத்துவம் அளிப்பர்.

தனது கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் உள்ளிட்ட சகிக்க முடியாத பல அவலங்களும் நிகழ்வதுண்டு. இதன் உச்சகட்டமாக ஆட்டை பலி கொடுத்து, ரத்த அபிஷேகம் செய்யப்பட்ட நிகழ்வும் அண்மையில் நிகழ்ந்து, அது பெரும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது. இவை எல்லாவற்றையுமே வெறுத்தவர் கமல்ஹாசன் என்கின்றனர் அவரது ரசிகர்கள் பெருமிதத்துடன். 

ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக அகில இந்திய கமல் ரசிகர் நற்பணி மன்றம் 1980 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. ஆனால், தன்னால் பல ரசிகர்கள் வீட்டைக் கவனிக்காமல், தங்களது வாழ்க்கையை வீணாக்குகின்றனர் என்பதை உணர்ந்த அவர் 1989 ஆம் ஆண்டில் ரசிகர் மன்றத்தைக் கலைத்தார். இந்தியாவிலேயே முதல் முதலாக ரசிகர் மன்றம் வேண்டாம் எனக் கலைத்த முதல் நடிகர் கமல்ஹாசன் என்கின்றனர் அவரது ரசிகர்கள். அதற்கு பதிலாக தமிழக கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தைத் தொடங்கினார் அவர். 

தன் ரசிகர்கள் சுய கெüரவத்துடன் வாழ வேண்டும் என அவர் விரும்பினார். ஒரு நாளைக்கு 10 ரூபாய் சம்பாதித்தால், அதில் ஒரு ரூபாயை நற்பணிக்குச் செலவிட்டு, மீதி 9 ரூபாயை வீட்டுக்குச் செலவிட வேண்டும் என அறிவுரை வழங்கினார். ரசிகர்கள் தங்களை கமல் ரசிகர் எனக் கூறுவதை விட, தங்களது தொழிலை அடிப்படையாகக் கொண்ட அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு சுய மரியாதையுடன் வாழ வேண்டும் என்பதையே அவர் விரும்பினார். சென்னையில் 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநில மாநாட்டில் அவர் பேசுகிறபோது இதையே மையப்படுத்தி பேசினார். 

அதுமட்டுமல்லாமல், அறிவைப் பெருக்கிக் கொள்ளும் விதமாகப் புத்தகங்கள் வாசிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். குறிப்பாக, இலக்கியம், நாவல்களைப் படிக்குமாறு அறிவுறுத்தினார். இதற்காகச் சில நாவல்களின் பெயர்களைக் கூறி இதையெல்லாம் படிக்குமாறு பரிந்துரை செய்தார். அதில், பாலகுமாரன், தி. ஜானகிராமன், பெரியார், கலைஞர், கண்ணதாசன், வைரமுத்து உள்ளிட்டோரின் நூல்களும் இடம்பெற்றிருந்தன. 

இந்த அறிவுரையே அவரது பெரும்பாலான ரசிகர்களை வாசிக்கத் தூண்டியது என்கிறார் கமல்ஹாசன் நற்பணி இயக்க அணியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலர் தரும. சரவணன். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சென்னை மாரீஸ் ஹோட்டலில் 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.

அப்போது, பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த எனக்கு வாசிப்புப் பழக்கம் கிடையாது. என்றாலும், கமல்ஹாசன் கூறியதால் நாவல்கள் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அவர் பரிந்துரைத்த தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள், கண்ணதாசனின் வனவாசம் உள்ளிட்ட நாவல்களைப் படிக்கத் தொடங்கினேன். அதன் பிறகு வாசிப்பு தீவிரமாகி பல நாவல்களைப் படித்தேன். இதன் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துள்ளேன். இந்த வாசிப்புப் பழக்கம் இப்போதும் தொடர்கிறது. 

உங்களுக்கு வாசிப்புப் பழக்கம் இருந்தால், அது எனக்குக் கெளரவம். சுயமாக வாழப் படியுங்கள். வாசிப்புப் பழக்கம்தான் நமக்கு அடையாளத்தைத் தரும் எனக் கூறியவர் கமல்ஹாசன். அவரால் பெரும்பாலான ரசிகர்கள் இலக்கியம் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். எங்களுக்கெல்லாம் இலக்கியத்தில் அறிமுகத்தை ஏற்படுத்தியவர் அவர்தான். இதுபோல எந்தத் நடிகரும் கூறியதில்லை. வாசிப்புப் பழக்கத்தை ரசிகர்களிடையே ஒரு இயக்கமாக மாற்றியவர் நடிகர் கமல்ஹாசன் மட்டுமே என்கிறார் தரும. சரவணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com