
சூர்யாவின் ஜெய் பீம் படம் இந்திய அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்திய அளவில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஜெய் பீம் படத்தைப் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சூர்யாவின் ஜெய் பீம் படத்தை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், சனாதன பிற்போக்குக் கருத்தியலின் மேலாதிக்கத்திலிருந்து மக்களை மெல்ல மெல்ல மீட்கும் வகையில் திரை ஊடகத்தை வெற்றிகரமாக கையாண்ட அரசியல் இயக்கம் இந்தியாவிலேயே திராவிட இயக்கம் தான் என்பது நாடறிந்த உண்மையாகும். குறிப்பாக பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் அதனை வெகு சிறப்பாக கையாண்டனர்.
மேலும் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ்.கே. போன்ற மகத்தான கலை ஆளுமைகளைப் பயன்படுத்தி சாதி, மதம் தொடர்பான மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பினர். திராவிட இயக்கத்தின் சமூக சீர்த்திருத்த கருத்துக்களை பொதுமக்களிடம் கொண்டுபோய் சேர்ந்ததில் எம்ஜிஆர், சிவாஜி முதலானோரும் மிகப்பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.
இதையும் படிக்க | பாமக பிரமுகர் மிரட்டல்: நடிகர் சூர்யாவுக்கு இந்திய அளவில் பெருகும் ஆதரவு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கடந்த 2006-ல் சட்டப் பேரவையில் எழுப்பிய கோரிக்கையின் விளைவாக அன்றைய திமுக ஆட்சியில் நரிக்குறவர் நல வராரியம் உருவாக்கப்பட்டது.
இத்திரைப்படத்தின் வருவாயிலிருந்து ஒரு கோடி ரூபாயை பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்திருப்பது நடிகர் சூர்யாவின் பரந்த உள்ளத்தை வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே அகரம் அறக்கட்டளையின் மூலம் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளின் கல்விக்காக உதவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. எளியோரின் மீதான இவரின் கனிவும் அக்கறையும் பாராட்டுதலுக்குரியதாகும்.
இதையும் படிக்க | ''சூர்யா போல அனைவரும் உணர்ந்தால் நல்லது'': 'ஜெய் பீம்' படம் குறித்து இயக்குநர் சேரன் கருத்து
அத்துடன் பொதுமக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற திரைக்கலைஞர், தனது புகழையும், செல்வாக்கையும் எவ்வாறு எளிய மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு நடிகர் சூர்யா ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்குவது போற்றுதலுக்குரியதாகும். கலைநாயகன் சூர்யா அவர்களின் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய தொண்டுள்ளத்தை தொழிலறத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளமாரப் பாராட்டுகிறோம் என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில், மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுத்துவது மகிகழ்ச்சி அளிக்கிறது. தங்கள் குறிப்படிருப்பதைப் போல தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவை தந்துள்ளது.
இதையும் படிக்க | 'திரௌபதி'யில் திருமாவளவன் அவமதிப்பு'': சுட்டிக்காட்டிய இளைஞரை பாராட்டிய திருமாவளவன்
பாதிக்கப்படும் மக்களின் பிரச்னைகளை அனைவரிடமும் கொண்டு செல்வது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்.