தனி நீதிபதியின் கருத்து என்னை புண்படுத்தின : நடிகர் விஜய் வருத்தம்

தனி நீதிபதியின் கருத்து என்னை புண்படுத்தின : நடிகர் விஜய் வருத்தம்

தனி நீதிபதியின் கருத்து தன்னை மிகவும் புண்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பு பதில் அளித்துள்ளது. 

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான நுழைவு வரி அதிகமாக உள்ளதால் வரியை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம், மிகவும் புகழ்பெற்ற நடிகரான அவர், நுழைவு வரியை முறையாக செலுத்தி இருக்க வேண்டும். 

தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வரிதான் முதுகெலும்பாக உள்ளது. வரி தெலுத்துவது என்பது கட்டாயமாகும். தனி நபரின் விருப்பத்தின் அடிப்படையில் வரி செலுத்துவதற்கு இது நன்கொடை இல்லை. 

திரைப்பட நடிகர்களை மக்கள் உண்மையான நாயகர்களாக பார்க்கின்றனர். இவர்கள் போலியான நாயகர்களாக இருக்கக்கூடாது. வரி ஏய்ப்பு என்பது தேச துரோகச் செயல் என கடுமையாக விமர்சித்திருந்தார். 

இந்த நிலையில் விஜய் தரப்பில் இருந்து நீதிபதி தெரிவித்த கருத்தை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் கண்டன கருத்துகள் அடங்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டனர். 

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (அக்டோபர் 25) விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில், இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதி பதி சொன்ன கருத்து என்னை புண்படுத்தியுள்ளன.

கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமரிசித்திருப்பது தேவையற்றது. நிலுவை வரித்தொகையாக ரூ.32.30 லட்சத்தை ஆகஸ்ட் 7 ம் தேதி செலுத்தி விட்டோம். என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com