
'பீஸ்ட்' படத்தில் செல்வராகவன் நடிப்பதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறத் துவங்கியுள்ளது. இந்தப் படத்தில் செல்வராகவன் முதன்மையான வில்லனாக நடிப்பதாகவும், இந்தப் படம் தங்கம் கடத்தல் தொடர்பான படம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இயக்குநர் செல்வராகவன் பீஸ்ட் படத்தில் அரசியல்வாதி வேடத்தில் நடித்துள்ளதாகவும், ஆனால் அவர் வில்லன் இல்லை எனவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது படத்தின் டீசர், டிரெய்லர் வந்தால் தெரிந்துவிடும்.
இதையும் படிக்க | பிக்பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராகும் பிரபல செய்தி வாசிப்பாளர்
பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இந்தப் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சாணிக்காயிதம் படத்தின் மூலம் இயக்குநர் செல்வராகவன் நடிகாரக அறிமுகமானார். இந்தப் படத்தை ராக்கி பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதனையடுத்து திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களின் இயக்குநர் மோகன்.ஜி இயக்கும் படத்தில் செல்வராகவன் நடிக்க விருக்கிறார். இதுமட்டுமல்லாமல் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தையும் செல்வராகவன் இயக்கி வருகிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.