என்.டி. ராமாராவைவிட அதிக சம்பளம் வாங்கிய  பாடலாசிரியர்!

என்.டி.ராமராவ் என்னும் கதாநாயகனை விட அதிக சம்பளம் வாங்கிய திரைப்படப் பாடலாசிரியர் தஞ்சை ராமையாதாஸ்.
என்.டி. ராமாராவைவிட அதிக சம்பளம் வாங்கிய  பாடலாசிரியர்!

நண்பர் ஒருவர் "பரோட்டா தமிழகத்திற்கு எப்போது அறிமுகமானது என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று என்னிடம் கேட்டார், குற்றால அருவியில் குளித்துவிட்டு, பார்டர் கடை பரோட்டா கடையில் நானும், அவரும், குடும்பம் சகிதமாக சால்னாவில் பரோட்டாகளை மூழ்கடித்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது...

அதைப்பற்றிய தேடுதலில் நான் இறங்கியபோது, எனக்குக் கிடைத்தது ஒரு திரைப்படப் பாடல்! அதை எழுதியவரும் நம்ம பக்கத்தைச் சார்ந்த, அதாவது தஞ்சை நகரத்தைச் சார்ந்த ராமையாதாஸ் அவர்கள்தான்!

‘ஒரு ஜான் வயிறே இல்லாட்டா…
இந்த உலகில் ஏது கலாட்டா?
 உணவுப் பஞ்சமே வராட்டா…
நம்ம உயிரை வாங்குமா பரோட்டா?’ 

-என்ற இந்தப் பாடலை 1951-இல் வெளியான ‘சிங்காரி’ படத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் – ராகினி ஜோடி ஆடிப்பாடுவார்கள். 

இரண்டாம் உலகப்போருக்குப் பின்பாக ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தில் தமிழகத்துக்கு மைதா மாவு அரசாங்கத்‌தால் அறிமுகம் செய்யப்பட்டு அதிலிருந்து பரோட்டா சாப்பிடும் பழக்கம் உருவானது என்கிறார்கள். இன்றைக்கு தமிழகத்தில் ஒருநாள் பரோட்டா கிடைப்பது நின்று போனால் பெரிய போராட்டங்களும் கொந்தளிப்புகளும் உருவாகிவிடும். 
எந்த ஊருக்குப் போனாலும் இரவு உணவகக் கடைகளில் பரோட்டா சக்கைப்போடு போடுகிறது. தமிழர்களின் முக்கிய இரவு உணவு வீடுகளிலேயே இன்று பரோட்டாதான். எனவே நண்பரிடம் சொன்னேன்: "1950களில் பரோட்டா தமிழ்நாட்டில் ஊடுருவி இன்று விரட்டியடிக்க முடியாதபடி நின்று நிலைத்து விட்டது!"

தமிழ் திரைப்படத்துறையில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ் ஆட்டு மந்தைத் தெருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில்  ஆசிரியராக இருந்தவர்.

இவர் தஞ்சாவூர் மானம்பூச்சாவடி என்ற பகுதியில் 1914  ஜூன் மாதம் ஐந்தாம் தேதி இதேநாளில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ராமையா. இவர் தந்தை பெயர் நாராயணசாமி நாயனார். தஞ்சை கரந்தை தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து புலவர் பட்டம் பெற்றார்.

பள்ளி ஆசிரியராக ராமையா இருந்த போதே பல நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதினார். பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று எண்ணிய இவர், வேலையை விட்டுவிட்டு சேலத்தில் இருந்த ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து பல நாடகங்கள் எழுதினார். அப்போது இவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர்தான் ராமையாதாஸ்.

அன்றைய காலத்தில் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பெண்கள் என்றால் 'தேவி'யென்றும் ஆண்கள் என்றால் 'தாஸ்' என்றும் தங்கள் பெயருக்குப் பின்னால் வைத்துக் கொள்வார்கள்.

அதன் பிறகு, தானே ஒரு நாடகக் கம்பெனியைத் தொடங்கி முதலில் சிறுவர்களை வைத்தும் அதன் பின்னர் இளைஞர்களை வைத்தும் நாடகங்கள் நடத்தினார். அதில் ஒரு நாடகம், "மச்சரேகை'. இந்த நாடகத்தின்போது தான், பின்னாளில் பல படங்களை எழுதித் தயாரித்து இயக்கிய ஏ.பி. நாகராஜன் தஞ்சை ராமையாதாசிடம் உதவியாளராகச் சேர்ந்தார். ஏ.பி. நாகராஜன் பள்ளிக்கூடத்திற்கேப் போனதில்லை.

எல்லாம் அனுபவப் படிப்புத்தான். இவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து இவரைச் சிறந்த முறையில் உருவாக்கிய நாடக ஆசிரியர் ராமையாதாஸ்தான்.

ராமையாதாஸ் நடத்திய நாடகங்களில் வில்லன் வேடங்கள் பல ஏற்று நடித்துப் புகழ்பெற்றவர் ஏ.பி. நாகராஜன் என்பது இன்றைய ரசிகர்கள் பலருக்குத் தெரியாது.

சேலத்தில் நடந்த ராமையாதாசின் நாடகங்களைப் பார்த்தவர்கள் பாடல்களைக் கேட்டவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரத்திடம் சொல்ல, அவர் தலைமறைவாகச் சென்று நாடகத்தைப் பார்த்து இருக்கிறார்.

பின்னர் ராமையாதாசை அழைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்ற படத்தில் ஒரு பாடல் எழுத வைத்தார். இது 1947-இல் வெளிவந்த படம். வி.என்.ஜானகி கதாநாயகியாக நடித்த படம்."வச்சேன்னா வச்சதுதான் - புள்ளி வச்சேன்னா வச்சதுதான்'' இது தான் அந்தப் படத்தில் ராமையாதாஸ் எழுதிய பாடல். அவர் எழுதிய முதல் திரைப்பாடலும் இதுதான்.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த நம்பியார் 9 வேடங்களில் நடித்த மன்னார்குடியிலும் படமாக்கப்பட்ட 'திகம்பர சாமியார்' என்ற படத்தில் இவர் எழுதிய"ஊசிப் பட்டாசே வேடிக்கையாய்த் தீ வச்சாலே வெடி டபார் டபார்''என்ற பாடல்தான் இவரை ஜனரஞ்சகமான பாடலாசிரியர் என்று ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இது இந்தி மெட்டுக்கு எழுதிய பாடல். இந்தி மெட்டுக்கு இவர் வார்த்தைகள் போட்ட இலாகவத்தைப் பார்த்து டி.ஆர். சுந்தரம் அசந்து விட்டாராம்.

'திகம்பர சாமியார்'படத்துக்குப் பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த 'மாரியம்மன்' என்ற படத்திற்கு கதை வசனம் பாடல்களை எழுதினார் ராமையாதாஸ். முதன்முதல் அவர் கதை வசனம் பாடல்கள் எழுதிய படமும் இதுதான். அந்தச் சமயத்தில், சேலத்தில் ராமையாதாஸ் எழுதிய 'மச்சரேகை' என்ற நாடகம் நடந்தது. அதைப் பார்த்த நடிகர் டி.ஆர். மகாலிங்கம், அதைத் தானே தயாரிக்க விருப்பம் கொண்டு ராமையாதாசிடம் கேட்க, அவரும் மனமுவந்து ஒப்புக்கொண்டு கதை வசனம் பாடல்களை எழுதிக் கொடுத்தார். மிகப்பெரிய வெற்றிப் படமாக அது அமையாவிட்டாலும் ஓரளவு வெற்றி பெற்றது.

சுகுமார் புரொடக்ஷன் சார்பில் டி.ஆர். மகாலிங்கம் தயாரித்து நடித்த முதல் படம் இதுதான். 

1950-இல் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த 'பாதாள பைரவி' என்ற படத்திற்கு வசனம் பாடல்களை எழுதினார் தஞ்சை ராமையாதாஸ். இது மிகப்பெரிய வெற்றிப்படம். இந்தப் படத்திற்கு வசனம், பாடல் எழுதுவதற்கு மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்திற்கு ராமையாதாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில் கதாநாயகனாக நடித்த என்.டி.ராமராவ், மாதம் முந்நூறு ரூபாய் சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com