பிறந்த நாள் ஸ்பெஷல்: விஜய்யின் திறமையை முதல்முதலாகக் கண்டறிந்த இயக்குநர்!

அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான், எழுதிவைத்துக் கொள்ளுங்கள் என்றேன்...
பிறந்த நாள் ஸ்பெஷல்: விஜய்யின் திறமையை முதல்முதலாகக் கண்டறிந்த இயக்குநர்!

நடிகர் விஜய்க்கு முதல் சூப்பர் ஹிட் படத்தை அளித்தவர், இயக்குநர் விக்ரமன். 1996 பிப்ரவரி 15 அன்று வெளியான பூவே உனக்காக, விஜய்க்குப் பெரிய பேரும் புகழையும் அளித்தது. அதுமட்டுமல்லாமல் விஜய்யின் முழுத் திறமைகளையும் கண்டறிந்தவர் என்றும் விக்ரமனைச் சொல்லலாம்.

டூரிங் டாக்கீஸ் என்கிற யூடியூப் தளத்தில் இயக்குநர் விக்ரமன் அளித்த பேட்டியில் விஜய்யைப் பற்றி கூறியதாவது:

இன்றைக்கு என்ன திறமை உள்ளதோ அதே திறமை அப்போதே விஜய்க்கு இருந்தது. எல்லாத் திறமைகளையும் உள்ளடக்கிய தலைசிறந்த நடிகராக இருந்தார். நான் உண்மையிலேயே வியந்துவிட்டேன். அதற்கு முன்பு விஜய் நடித்த படங்களை நான் பார்த்ததில்லை. தேவா போன்ற படங்களில் இருந்த பாடல்களைத் தொலைக்காட்சியில் பார்த்து, நன்றாக நடனமாடுகிறார், சுறுசுறுப்பாக இருக்கிறார் என்பதால் இவரை நடிக்க வைக்கலாமே என்று பூவே உனக்காக படத்துக்காகத் தேர்வு செய்தேன்.

பூவே உனக்காக படப்பிடிப்பில் முதல் நாள், நீண்ட வசனம் உள்ள ஒரு காட்சி இருந்தது. ஆனால் அக்காட்சி படத்தில் இடம்பெறவில்லை. பூதபாண்டி என்கிற கோயிலில் அக்காட்சியை எடுத்தேன். நீளமான காட்சிக்கான வசனத்தை நான் அவரிடம் சொன்னேன். கண்ணை மூடிக்கொண்டு வசனங்களைக் கேட்டார். ஓகே சார், டேக் போலாம் என்றார். என்னை நக்கல் பண்ணுகிறாரா என்றுதான் நான் நினைத்தேன். அந்த வசனத்தை ஒரு தடவை தான் அவருக்குச் சொன்னேன். டேக் போலாம் என்கிறாரே... சரி, பார்த்துருவோமே என்று பார்த்தால் அசத்திவிட்டார். அந்த வசனங்களில் ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்கள் இருந்தன. அனைத்தையும் அப்படியே சொன்னார். நான் வியந்துவிட்டேன். பெரிய ஆளாக இருப்பார் போலிருக்கிறது, எங்கேயோ போகப்போகிறார் என எண்ணினேன். அன்றைக்கு முழுப் படப்பிடிப்பிலும் அவர் நடித்த எந்தக் காட்சியும் இரண்டாவது டேக்குக்குச் செல்லவில்லை. விஜய்யைப் பொறுத்தவரை 2-வது டேக் கிடையாது. நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதைவிட சிறப்பாக நடித்துக் கொடுப்பார்.

பூவே உனக்காக படத்தில் விஜய்யைத் தேர்வு செய்தபோது, அந்தப் படத்தில் நடித்த ஒரு மூத்த நடிகர் என்னிடம் சொன்னார் - அருமையான கதை இது, ஆனால் இந்தப் பையனைக் கதாநாயகனாகப் போடுகிறீர்களே, இதெல்லாம் குருவி தலையில் பனங்காய் வைப்பது போல. இந்தப் பையனால் இந்தக் கதாபாத்திரத்தின் கனத்தைத் தாங்க முடியுமா? தவறு செய்கிறீர்கள். கார்த்திக் போல வேறு கதாநாயகனைத் தேர்வு செய்யுங்கள். ஜமாய்த்துவிடுவார். வருஷம் 16-ல் எப்படி அசத்தினார்? இந்தக் கதைக்கு கார்த்திக் போல ஒரு கதாநாயகன் இருந்தால் கலக்கிவிடுவார் என்றார். இல்லை சார், இந்தப் பையன் சரியாக இருப்பார் என்று எனக்குத் தோன்றியது என்று அவரிடம் சொன்னேன். 

படப்பிடிப்புக்கு அந்த நடிகர் சென்னையிலிருந்து இரு நாள்கள் கழித்து வரவேண்டும். முதல் நாள் படப்பிடிப்பு முடிந்தபிறகு எஸ்டிடி போட்டு அந்த நடிகருக்கு போன் செய்து சொன்னேன் - சார், குருவி தலையில் பனங்காய் வைப்பது போல என்று இவரைச் சொன்னீர்கள் அல்லவா, இந்தக் குருவி தலையில் பாறாங்கல்லை வைத்தாலும் தாங்கும் சார். அப்பேர்ப்பட்ட திறமைசாலி அந்தப் பையன். இதுவரை நான் ஐந்து படங்களை இயக்கியுள்ளேன். உதவி இயக்குநராக ஆறேழு படங்களில் வேலை செய்துள்ளேன். இவர் தலைசிறந்த நடிகன், திறமைசாலி, நன்றாக நடனமாடுகிறார், சண்டை போடுகிறார், குதிரையேற்றம் தெரியும் எனச் சகல திறமைகளையும் உள்ளடக்கிய சகலகலா வல்லவன். இவருடைய திறமைகள் எப்படி வெளியே தெரியாமல் இருந்தது? மிகப்பெரிய நட்சத்திரமாக வருவார். அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான், எழுதிவைத்துக் கொள்ளுங்கள் என்றேன் அவரிடம்.

பிறகு சென்னைக்கு வந்து எல்லாத் தயாரிப்பாளர்களுக்கும் போன் செய்தேன். நீங்கள் வேண்டுமானால் லட்சுமி மூவி மேக்கர்ஸிடம் இதுபற்றி கேட்டுப் பார்க்கலாம். விஜய் என்கிற எஸ்.ஏ.சி-யின் பையனை உடனடியாக ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். பெரிய நட்சத்திரமாக வரப்போகிறார் என்று அனைவரிடம் சொல்லி. விஜய்க்கு ஒரு பிஆர்ஓ போல இருந்தேன். சொன்னதுபோலவே பல வெற்றிப் படங்களில் நடித்து இன்று சூப்பர் ஸ்டாராக விஜய் உள்ளார்.

என் படங்களில் அதிக நாள் ஓடியது பூவே உனக்காக தான். 270 நாள்கள் ஓடியது. தீபாவளி வராமல் இருந்திருந்தால் ஒரு வருடம் ஓடியிருக்கும். கோவையில் வெளியிட்ட திருப்பூர் சுப்ரமணியன் என்னிடம் இந்தப் படம் ஒரு வருடம் ஓடும், கோவை கேஜி காம்ப்ளெக்ஸில் பாட்ஷா ஒரு வருடம் ஓடியது, அதுபோல இந்தப் படமும் ஓடும் என்றார். தீபாவளிக்காகத்தான் இந்தப் படத்தை நீக்கினார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com