ஷ்ரேயா கோஷல் பிறந்த நாள்: இந்தியாவின் அழகிய பாடகி!

தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. 
ஷ்ரேயா கோஷல் பிறந்த நாள்: இந்தியாவின் அழகிய பாடகி!

மேற்கு வங்கத்தில் பிறந்தவர் ஷ்ரேயா கோஷல். ராஜஸ்தானில் பள்ளிப் படிப்பு. சிறுவயது முதல் பாரம்பரிய இசையைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததால், 11 வயதில் அகில இந்திய அளவிலான பாட்டுப் போட்டியில் வெல்கிறார். பிறகு தந்தைக்கு மும்பைக்கு மாற்றலாகி விட, அங்கு வந்து கல்லூரி படிப்பை முடிக்கிறார். 

16 வயதில் ஜீ  டிவியில் ஒளிபரப்பான சரிகமபா என்கிற தொலைக்காட்சி இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வெற்றி பெறுகிறார் ஷ்ரேயா கோஷல். அவருடைய குரலில் மயங்கிய பாலிவுட் பிரபலம் சஞ்சய் லீலா பஞ்சாலி உடனே தன்னுடைய படத்தில் பாட வாய்ப்பளிக்கிறார். இஸ்மாயில் தர்பார் - மாண்டி சர்மா இசையமைத்த தேவதாஸ் படத்தில் உள்ள பத்து பாடல்களில் ஐந்து பாடல்களைப் பாடும் வாய்ப்பு ஷ்ரேயாவுக்குக் கிடைக்கிறது. (பிரபல பாடகி கவிதா கிருஷ்ண மூர்த்தி நான்கு பாடல்களைப் பாடுகிறார்.) இதனால் ஒரே படத்தில் இந்தியா முழுக்கப் புகழ் பெறுகிறார். முதல் படத்திலேயே சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெறுகிறார். வளமான வாழ்க்கை அமைகிறது. 

2005-ல் மற்றொரு ஷாருக் கான் படத்தில் பாடியதற்காக 2-வது தேசிய விருது கிடைக்கிறது. பஹேலி என்கிற படத்தில் கீரவாணி இசையில் ஷ்ரேயா பாடிய Dheere Jalna பாடலுக்காக 2-வது தேசிய விருதைப் பெற்றார். 

207-ல் 3-வது தேசிய விருது கிடைக்கிறது. ஜப் வீ மெட் என்கிற படத்துக்காக பாடியல் Yeh Ishq Haaye பாடல். அதாவது பாட வந்த 5 வருடங்களில் 3 தேசிய விருதுகள்! இதன்மூலம் ரசிகர்களின் பாராட்டுகள், தேசிய விருதுகளின் அடிப்படையில்ளால் இந்தியாவின் சிறந்த பாடகியாக மதிப்பிடப்படுகிறார் ஷ்ரேயா. 

இதுபோதாது என்று அடுத்த வருடமே, 2008-ல் நான்காவது தேசிய விருது ஷ்ரேயாவைத் தேடி வருகிறது. இந்தமுறை பெங்காலி, மராத்தி படங்களில் பாடிய பாடல்களுக்காகக் கிடைக்கிறது. எனினும் 2008-க்குப் பிறகு ஷ்ரேயாவுக்குத் தேசிய விருது மீண்டும் கிடைக்கவில்லை. 

ஷ்ரேயா கோஷல், குரலுக்காக மட்டுமல்லாமல் அழகுக்காகவும் அதிக ரசிகர்களைக் கொண்டவர். இதனால் அவருக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால் அவர் எந்தவொரு வாய்ப்பையும் ஏற்கவில்லை. அவருடைய எல்லாப் பேட்டிகளிலும் நடிப்பு வாய்ப்புகள் குறித்த கேள்விகள் இடம்பெறும். ஆனால் பாடுவது மட்டுமே எனது விருப்பம் என்று ஒரே பதிலையே எல்லாப் பேட்டிகளிலும் தெரிவித்துள்ளார் ஷ்ரேயா.

பிப்ரவரி 5, 2015-ல் திடீரென காதல் திருமணம் செய்துகொண்டு அவரது ஆண் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். ஷ்ரேயாவின் கணவர், தொழிலதிபர் ஷிலாதித்யா. 10 வருடக் காதல், திருமணம் வரைக்கும் வந்துள்ளது. 

2012-ல் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் புகழ்பெற்ற 100 நட்சத்திரங்கள் பட்டியலில் ஷ்ரேயாவும் இடம்பெற்றார். ஐந்து வருடங்கள் டாப் 50 பட்டியலில் அவருக்கு இடம் கிடைத்தது. 

இன்றைய பாலிவுட் இசையில், நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும் பாடல்களைத் தர யாரும் முயற்சிப்பதில்லை. யாருக்கும் காலத்தால் அழியாத பாடலை உருவாக்க விருப்பமில்லை. அந்த வாரத்தில், அதிகம் பேர் கேட்கும் பட்டியலில் இடம்பெறும் பாடலை உருவாக்கவே விரும்புகிறார்கள். எனவே சில பாடல்கள் மட்டுமே நிலைத்து நிற்கின்றன என 2015-ல் பேட்டியளித்தார் ஷ்ரேயா. 

அதிக பெண் இசையமைப்பாளர்கள் இல்லாததற்கு என்ன காரணம்? இதற்கு ஷ்ரேயாவின் பதில்: ஓர் இசையமைப்பாளராக இருப்பது மிகவும் கடினமானது. ஒரு பாடலுக்கு அனுமதி பெறுவதற்கு அதிகக் காலமும் சக்தியும் தேவைப்படுகின்றன. பாலிவுட், ஆண்களால் நிறைந்த உலகம். ஒரு பெண்ணால் பல துறையைச் சார்ந்த படைப்பாளிகளைச் சமாளிப்பது கடினம் என்கிறார்.

ஷ்ரேயா கோஷல் ஏராளமான தமிழ்ப் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். அவருக்குத் தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. 

2002-ல் முதல்முறையாக, ஆல்பம் படத்தில் இடம்பெற்ற செல்லமே செல்லம் என்றாயடா பாடலைப் பாடி முதல் பாடலிலேயே ஏராளமான தமிழ் ரசிகர்களைப் பெற்றார். அவர் பாடிய முக்கியமான தமிழ்ப் பாடல்கள்:

எனக்குப் பிடித்த பாடல் (ஜுலி கணபதி), இளங்காத்து வீசுதே (பிதாமகன்), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), காற்றில் வரும் கீதமே (ஒரு நாள் ஒரு கனவு), தாவணி போட்ட தீபாவளி (சண்டகோழி), பனித்துளி பனித்துளி (கண்ட நாள் முதல்), முன்பே அன்பே வா (சில்லுனு ஒரு காதல்), அய்யய்யோ (பருத்தி வீரன்), உருகுதே மருகுதே (வெயில்), ஒரு வெட்கம் வருதே (பசங்க), மன்னிப்பாயா (விண்ணைத் தாண்டி வருவாயா), உன் பேரை சொல்லும் போதே (அங்காடித் தெரு), கள்வரே (ராவணன்), காதல் அணுக்கள் (எந்திரன்), றெக்கை முளைத்தேன் (சுந்தரபாண்டி), வெளிச்ச பூவே (எதிர் நீச்சல்), கண்டாங்கி (ஜில்லா), பூக்களே சற்று ஓய்வெடுங்கள் (ஐ), வானே வானே (விஸ்வாசம்), அன்பே பேரன்பே (என்ஜிகே), சக்க சக்களத்தி (கலாட்டா கல்யாணம்), சார காற்றே (அண்ணாத்த).

படங்கள்: instagram.com/shreyaghoshal/
படங்கள்: instagram.com/shreyaghoshal/

கடந்த வருடம் மே 22 அன்று ஷ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தேவ்யான் எனக் குழந்தைக்குப் பெயரிட்டார். ஒரு வாரம் கழித்து குழந்தையின் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். பிறகு, 2-வது அலையின்போது கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். வீட்டில் தேவ்யான் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தபோது உடனடியாக வெளியே வந்து கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டேன். மருத்துவர்களின் பரிந்துரைப்படி புதிய தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com