
‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு கேளிக்கை வரி செலுத்துவதில் விலக்கு அளிக்க குஜராத், மத்திய பிரதேச மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.
1990-இன் தொடக்கத்தில், ஜம்மு-காஷ்மீரில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பண்டிட் சமூகத்தினா் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, அவா்களை அங்கிருந்து விரட்டியடித்தனா். பண்டிட் சமூகத்தினா் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனா்.
இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அனுபம் கொ், தா்ஷன் குமாா், மிதுன் சக்கரவா்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்டோா் நடித்துள்ள இந்த திரைப்படம், மாா்ச் 11-ஆம் தேதி வெளியானது.
இந்த திரைப்படத்துக்கு மத்திய பிரதேச அரசு, வரி விலக்கு அளித்துள்ளது. இதுகுறித்து அந்த மாநில முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் ட்விட்டா் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
‘தி காஷ்மீா் ஃபைல்ஸ்’ திரைப்படம், 1990-களில் காஷ்மீா் ஹிந்துக்கள் அனுபவித்த வலிகள், வேதனைகள், போராட்டங்கள் ஆகியவற்றை மனதை உருக்கும் வகையில் விவரிக்கிறது. இந்த திரைப்படத்தை அதிகமானவா்கள் பாா்க்க வேண்டும். எனவே, இத்திரைப்படத்துக்கு மத்திய பிரதேசத்தில் வரி விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம் என்று அவா் அந்தப் பதிவில் கூறியுள்ளாா்.
குஜராத்திலும் வரி விலக்கு: குஜராத் மாநில அரசும் இந்த திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘தி காஷ்மீா் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு கேளிக்கை வரி செலுத்துவதில் விலக்கு அளிக்க முதல்வா் பூபேந்திர படேல் முடிவு செய்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.