
கடந்த 1990களில் பண்டிட்டுகள் காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜக தலைவர்கள் பரும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை பாராட்டி வருகிறார்கள். மற்றொருபுறம் இந்தப் படத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதையும் படிக்க | பா.ரஞ்சித் வழங்கும் 'குதிரைவால்' - திரை விமர்சனம் : கனவு துரத்தினால் ?
இந்த நிலையில் இந்தப் படம் குறித்து காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, ''இந்தப் படம் பொய்களால் நிறைந்துள்ளது. கட்டுக்கதையாக உள்ளது.
ஃபரூக் அப்துல்லா ஆட்சியின்போது, காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறியிருப்பதாக காட்டியிருப்பது மிகப்பெரிய பொய். அது, ஆளுநர் ஆட்சியில் நடந்தது. பா.ஜ.கவின் ஆதரவுடன் நடந்த வி.பி.சிங் ஆட்சியின்போது நடந்தது.
மேலும் அச்சமயத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்களும் கொல்லப்பட்டனர். அவர்களும் காஷ்மீரிலிருந்து புலம்பெயர வேண்டியிருந்தது.
இன்னும் அவர்கள் காஷ்மீருக்கு திரும்பி வரவில்லை. இந்தப் படத்தை எடுத்தவர்கள் காஷ்மீர் மக்கள் அனைவரும் அடிப்படைவாதிகள் போல சித்தரித்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.