
சூர்யா முதன்மை வேடத்தில் நடிக்க வெற்றிமாறன் இயக்கி வரும் 'வாடிவாசல்' படத்தின் ஒத்திகை நேற்று (மார்ச் 20) துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படம் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் ஒலிப்பதிவு செய்து வெற்றிமாறனிடம் கொடுத்துவிட்டதாக ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்தார். இந்தப் படத்தில் நடிகர் கருணாஸ் உதவி இயக்குநராக பணிபுரியவிருக்கிறார்.
இதையும் படிக்க | கோவையில் மோசடியில் ஈடுபட்ட பிரபல நடிகரின் சகோதரர் கைது
இந்தப் படத்தின் ஒத்திகையில் நடிகர் சூர்யா மற்றும் சூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் 'ஜெய் பீம்' படத்தில் குருமூர்த்தி என்ற வேடத்தில் மிரட்டிய தமிழ் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ''அண்ணன் வெற்றிமாறனின் வாடிவாசல் பணிகள் துவங்கியது. களத்தில் தம்பிகள் நாங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்தவர். தற்போது விக்ரம் பிரபு நடித்துள்ள 'டாணாக்காரன்' என்ற படத்தை தமிழ் இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வாடிவாசல் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து, ''அண்ணன் வெற்றிமாறன் - அண்ணன் சூர்யா மிரட்டும் வாடிவாசலின் டெஸ்ட் ஷுட். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம் மண்ணின் பாராம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம். வாடிவால் திறக்க நானும் காத்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.