Enable Javscript for better performance
பொன்னியின் செல்வன் பிளஸ் என்ன? ஏமாந்தவர்கள் யார்?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பொன்னியின் செல்வன் பிளஸ் என்ன? ஏமாந்தவர்கள் யார்?

    By DIN  |   Published On : 01st October 2022 03:07 PM  |   Last Updated : 03rd October 2022 08:31 AM  |  அ+அ அ-  |  

    WhatsApp_Image_2022-09-20_at_5


    புத்தகப் பிரியர்களின் அதீத காதலுக்குச் சொந்தமான கல்கியின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் பொன்னியின் செல்வன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியாகியுள்ளது.

    முதல்நாளே திரைப்படம் பார்க்க வேண்டும் என்று பலரும் ஆவலோடு திரையரங்குகளில் குவிந்தனர். நாவலை படித்தவர்களும் படிக்காதவர்களும் என ஒரு கலவையான ரசிகர்கள் கூட்டமே முதல் நாள் திரையரங்குகளை நிறைத்திருந்தனர்.

    இதையும் படிக்க.. பொன்னியின் செல்வன் - கதையும் பாத்திரங்களும்!

    அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி

    காலை 4 மணிக்கே படம் திரையிடப்பட்டது. முதல் காட்சியிலேயே படத்தை பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர ஆரம்பித்துவிட்டனர். இதனால் எதிர்பார்ப்பு இரண்டு மடங்கானது.

    பொதுவாக ஒரு படம் வரும் போது அதில் கதை சஸ்பென்ஸாக இருக்கும். ஆனால் பொன்னியின் செல்வனில் கதை பலருக்கும் தெரிந்ததுதான். அதைக் காட்சிப்படுத்துவது மட்டுமே சஸ்பென்ஸ்.

    இதையும் படிக்க.. எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா பொன்னியின் செல்வன்? திரை விமர்சனம்

    ஆதித்த கரிகாலனாக விக்ரம்

    படத்தின் பிளஸ் என்ன?

    படத்தின் பிளஸ்.. மிக முக்கிய பிளஸ் கதாப்பாத்திரங்களின் தேர்வு. படத்தில் யார் யார் என்னென்ன பாத்திரங்களை ஏற்றிருக்கிறார்கள் என்பது ஏற்கனவே வெளியான தகவல்தான். அப்போதே, ஒரு சிலர், இவருக்கு இந்த கதாபாத்திரமா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.  ஆனால் படத்தைப் பார்க்கும் போது ஒவ்வொருவரும் தங்களது கதாப்பாத்திரத்தில் கனக்கச்சிதமாக பொருந்தியிருந்தது பலருக்கும் பிடித்திருக்கும்.

    குந்தவையாக திரிஷா

    ஒற்றன் என்று தன்னை பறைசாற்றிக் கொள்ளும் வந்தியதேவனை விடவும், சோழ அரசின் நம்பிக்கைக்குரிய ஒற்றன் முன்குடுமி வைஷ்ணவனான ஆழ்வார்க்கடியான் நம்பி, பல தகவல்களை மக்களோடு மக்களாகப் பயணித்து திரட்டுவதும், தான் ஒரு ஒற்றன் என்பதை நந்தினியிடமே அப்பட்டமாக வந்தியதேவன் கூறுவது போல அல்லாமல், அப்பிராணி போல வந்தியதேவனிடம் அடிவாங்குவதிலும் ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தை அடித்துக்கொள்ள ஆளேயில்லை. தலை பத்திரம் என்று வந்தியதேவனை எச்சரிக்கும் அந்த நொடி சிரிப்பலைதான்.

    அடுத்து.. கேமரா..
    படத்தின் காட்சிகளை மிகச் சிறப்பாக சுழன்று சுழன்று காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமை.  காட்சிப்படுத்தப்பட்ட கோட்டைகள் எதுவும் வெறும் பிரமாண்டத்துக்காக மட்டும் மிகைப்படுத்தப்படாமல், அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததும், பொன்னியின் செல்வன் நாவலைப் படித்த ரசிகர்களின் கற்பனை என்ற குதிரையில் படம் ஏறி அமர வசதியாகவே இருந்தது.

    பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து பாகங்கள், 292 அத்தியாயங்கள். பல நூறுகளில் பக்கங்கள். இதனை ஒரு திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் திரைப்படத்துக்குள் கதையை சுருக்க வேண்டும் என்பது படக்குழுவுக்கு மிகப்பெரிய சவால். பல இடங்களில் படம் கட்-ஷாட் செய்யப்பட்டிருப்பதை உணர முடிந்தாலும், அதனை திரைப்படத்துக்குள் அடக்கியிருப்பதே மிகச் சிறப்புதான்.

    வந்தியத் தேவனாக கார்த்தி

    பொன்னியின் செல்வன் படத்தின் நாயகன்  வந்தியத்தேவன்தான். இவர் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனின் நண்பராக அறிமுகமாகி, போர் வீரர், ஒற்றன், குந்தவையின் காதலன் என பல பாத்திரங்களை தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டிருப்பவர்.  முழு படத்திலும் நிறைந்திருப்பவர், இவருக்கு எழுதப்பட்ட வசனங்கள் அருமை. அதுவும் குந்தவையுடனான வசனங்களை விடவும் நந்தினியின் இரண்டாம் சந்திப்பின்போதான வசனங்களை பலரும் ரசித்தனர்.

    காட்சி.. 

    சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ்

    சுந்தர சோழரிடம் வந்தியதேவன் அபாயம் என்று கூறும்போது பார்த்திபன் வந்து நிற்கும் காட்சியும், அதனை அபயம் என்று மாற்றுவதும் கைதட்டல் பெற்றன.

    பெரிய பழுவேட்டரையராக சரத்குமார்

    அரண்மனைக்கு வரும் குந்தவைக்கு வரவேற்பு அளிக்கும் காட்சியும் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது. நந்தினியை நிறுத்தி அவள் வரட்டும் என பெரிய பழுவேட்டரையர் கூறுவதும், நந்தினி தன்னை இறங்கி வந்து வரவேற்காமல், தான் செல்லக் கூடாது என்ற எண்ணத்தில், அங்கிருக்கும் குருக்களிடம், "மக்கள் என்ன சொல்கிறார்கள்?" என்று பேச்சுக்கொடுத்து தாமதிப்பதும் ஒரு நல்ல காட்சிப்படுத்துதலுக்காக சபாஷ் பெறும்.

    குறைகள் என்றால்.. 
    எல்லோரும் சொல்லும்.. வேறு வழியே இல்லாத கட்-ஷாட்கள்தான். ஒரு காட்சியின் துவக்கமும் முடிவும் கோர்வையாக இல்லாதது. நாவலில் இடம்பெற்ற மிக அருமையான காட்சிகள் இல்லாதது.. கதை பற்றியோ, பொன்னியின் செல்வன் நாவல் பற்றியோ எதுவுமே தெரியாமல் படத்தைப் பார்ப்பவர்களுக்கு கதாபாத்திரங்களில் புரிதலை ஏற்படுத்துவதில் தொய்வு போன்றவை இருப்பதாகத்தான் தெரிகிறது.

    ஏமாந்தவர்கள் யார்?
    படம்.. அதை ஒரு திரைப்படமாகப் பார்த்து ரசிக்கச் சென்றவர்களில் நாவலைப் படித்துவிட்டுச் சென்றவர்களுக்கு நிச்சயம் அவர்களது கற்பனையில் விரிந்தவை காட்சியாகப் பார்க்கும் போது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை.

    ஆனால், பிரமாண்ட திரைப்படம் என்ற ஒரே எண்ணத்தோடு சென்றவர்களும், பாகுபலி போன்ற பிரமாண்டம் என்ற எண்ணத்தோடு சென்றவர்களுக்கும் ஏமாற்றம் கிடைத்திருக்கலாம்.

    பொன்னியின் செல்வனை துல்லியமாக படித்துவிட்டு ஆறு வித்தியாசம் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று சென்றவர்களுக்கும் ஏமாற்றம். ஆறு அல்ல அதற்கும் மேல் கண்டுபிடிக்கலாம்.

    அவர்கள் எப்படி ஏமாந்தவர்கள் ஆனார்கள் என்றால், படத்தை ரசிக்க முடியாமல் குற்றம்தேடிக் கொண்டிருப்பதிலேயே இரண்டரை மணி நேரமும் கழிந்துவிட்டிருக்கும்.

    நந்தினியாக ஐஸ்வர்யா ராய்

    நாவலைப் படிக்காமல், கதையைக் கேட்காமல் சென்றவர்களுக்கு கதையின் போக்கையும் வசனங்களையும் ரசிக்க முடியாமல் போயிருக்கலாம். 

    முதல் பாதியிலேயே ஆளாளுக்கு ஒரு பாடலை வைத்து கதையை நீர்த்துப் போகச் செய்ததாகத் தோன்றியது. சில காட்சிகளை வேகப்படுத்தியிருக்கலாம். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், சிலருக்கு படம் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்பதிலேயே குழப்பம்?  என பிளஸ் - மைனஸ் இரண்டையுமே பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம்.

    பதற வைத்த இடங்கள்..

    நேரம் சென்று கொண்டிருக்கிறது. படம் முடியப்போகிறது என்ற எண்ணம் தோன்றும்போது எங்கே முடியப்போகிறது என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது. அலைகடல் சண்டைக் காட்சியிலா? எங்கே, என்ன டிவிஸ்டுடன் படம் முடியபோகிறது என்ற கேள்வி எழுகிறது.

    இரண்டு டிவிஸ்டுகளுடன் படம் நிறைவு பெறும் போது மட்டுமல்ல, பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு 2023ஆம் ஆண்டு என்ற அறிவிப்பைப் பார்க்கும் போது அவ்வளவு மாதங்கள் காத்திருக்க வேண்டுமா என்ற கவலையும் ஏற்படுகிறது.

     பார்க்க வேண்டிய படம். ஒரு முறை பார்த்தவர்களுக்கும் இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் படம்.


     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp