தென் கொரியாவின் திரைப்பட விழாவில் கமலின் ‘விக்ரம்’ திரையிடல்!

தென் கொரியாவின் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் திரையிட தேர்வாகியுள்ளது.
தென் கொரியாவின் திரைப்பட விழாவில் கமலின் ‘விக்ரம்’ திரையிடல்!

தென் கொரியாவின் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் திரையிட தேர்வாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூல் சாதனையைப் படைத்தது. அதனைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியானாலும் இன்னும் சில திரையரங்குகளில் விக்ரம் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு பெற்றது.  

இதுகுறித்து படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் சமீபத்தில் மிகப் பெரும் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல்கல்லாக இன்னொரு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கவிருக்கிறது. அக்டோபர் 5 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடப்படுகிறது. வணிக மற்றும் கலைப் படங்களின் சரியான கலவையாக அமைந்திருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாகச் செயல்படும் 'ஓப்பன் சினிமா' என்ற பிரிவில் விக்ரம் திரையிடப்படும்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனலின் தலைமை நிர்வாகி திரு. நாராயணன், "உலகெங்கிலும் விக்ரம் திரைப்படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியில் மூழ்கடிக்கிறது. பூஸான் சர்வதேசத் திரைப்பட விழா இந்தத் திரைப்படத்தின் கிரீடத்தில் சூட்டப்படும் இன்னொரு வைரக் கல், இந்தத் தேர்வு ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் கிடைத்திருக்கும் வெற்றி. உலகின் பல பகுதிகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுத் திரையிடப்படும் பல அற்புதமான திரைப்படங்களுடன் எங்கள் படமும் திரையிடப்படுவது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. ரசிகர்களின் அன்புக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி," என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com