1989-ல் பொன்னியின் செல்வனுக்காக கமல் வைத்திருந்த திட்டம்  என்ன தெரியுமா?

1989-ல் பொன்னியின் செல்வனுக்காக கமல் வைத்திருந்த திட்டம் என்ன தெரியுமா?

கடந்த 1989 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க கமல்ஹாசன் திட்டமிட்டிருந்தார். 

கடந்த 1989 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க கமல்ஹாசன் திட்டமிட்டிருந்தார். 

பொன்னியின் செல்வன் பட முதல் பாகம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 6) இசை மற்றும் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படம் பாகுபலி, ஆர்ஆர்ஆர், விக்ரம் போன்ற பெரிய வெற்றியைப் பதிவு செய்யுமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்துவருகிறது. 

பொன்னியின் செல்வன் நாவலை எம்ஜிஆர் துவங்கி கமல்ஹாசன் உள்ளிட் பலர் திரைப்படமாக எடுக்க முயற்சித்தனர். இயக்குநர் மணிரத்னம் கூட கடந்த 2010 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் நாவலை விஜய், மகேஷ் பாபு நடிப்பில் திரைப்படமாக இயக்க திட்டமிட்டார். பின்பு அந்த முடிவு கைவிடப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த 1989 ஆம் ஆண்டு கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க திட்டமிட்டிருந்தார். இதுகுறித்து அவர் கல்கி இதழுக்கு அளித்த பேட்டி தற்போது வெளியாகியுள்ளது. 

அதில் கமல் குறிப்பிட்டிருப்பதாவது, ''பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் யோசனையை மணிரத்னம் என்னிடம் சொன்னார். நான் அதனைப் படித்திருக்கிறேன். அதனை படமாக்குவதில் உள்ள சிக்கல்களை யோசித்தேன். 

பாய்மரக் கப்பலில் மின்னல் வெட்டியது என்று காட்சியை மிக சுலபமாக எழுத்தில் கொண்டுவந்துவிட்டார் கல்கி. ஆனால் அதனை அப்படியே திரையில் காட்ட வேண்டுமானால் மேலை நாட்டு நிபுணர்களை வரவழைத்து தந்திர காட்சிகள், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எல்லாம் அமைக்க வேண்டும். 

கதையில் ஒவ்வொரு பெண் கதாப்பாத்திரங்களையும் அத்தனை அழகாகப் படைத்திருக்கிறார் கல்கி. அவற்றுக்குப் பிரபல நடிகைகளைப் போட்டால் அவர்களுடைய இமேஜ் அந்தந்த பாத்திரங்களின் தன்மையைப் பின்னுக்கு தள்ளிவிடும் அபாயமும் இருக்கிறது. 

சில விளம்பரங்களில் தென்படும் சில முகங்கள் பளிச்சென்று பொன்னியின் செல்வனின் சில பாத்திரங்களுக்குப் பொருத்தமாய் இருப்பதாகபடுகிறது. அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன். 

திரையுலகில் உள்ள எனது நண்பர்கள் எனது இந்த முயற்சிக்கு மிகுந்த உற்சாகமூட்டுகிறார்கள். சத்யராஜ், பிரபு போன்றவர்களெல்லாம் நான் சொல்கிற பதா்திரத்தில் நடிபப்தற்கு தயாராய் இருக்கிறார்கள். 

இளையராஜாவும் பொன்னியின் செல்வனுக்காகப் பிரத்யேக முயற்சி எடுத்துக்கொண்டு இசையமைத்துக்கொடுப்பார். நான் சொன்னால் போதும் எந்த வேலையையும் நிறுத்தி வைத்துவிட்டுப் பொன்னியின் செல்வனைப் படமாக்க வந்துவிடுவார் கேமரா மேன் ஸ்ரீராம். இந்தப் படத்தை இயக்குவதற்கான சரியான இயக்குநர் மணிரத்னம்தான் என்பது எனது கணிப்பு. வந்தியத்தேவனாக யார் நடிப்பது என நான் சொல்லத்தேவையில்லை . நீங்களே இந்நேரம் புரிந்துகொண்டிருப்பீர்கள்'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com