‘தர்மதுரை' விமரிசனம்: விஜய் சேதுபதியின் ராஜ்ஜியம்! 

தர்மதுரை - சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் உருவான இயல்பான திரைப்படம். வாரஇறுதியில் குடும்பத்தோடு சென்று பார்க்கத் தகுதியான அருமையான படைப்பு. 
‘தர்மதுரை' விமரிசனம்: விஜய் சேதுபதியின் ராஜ்ஜியம்! 

இயக்குநர் சீனு ராமசாமியின் நான்காவது திரைப்படம். இதற்கு முன்னர் வெளிவந்த ரஜினியின் ஒரு வணிகமசாலா திரைப்படத்தின் தலைப்பை நினைவுப்படுத்தும் ஒரே நெருடலைத் தவிர வேறு எந்த மசாலாத்தனமும் இதில் இல்லாதது பாராட்டுக்குரியது. வருங்கால முதல்வர் கனவுடன் பஞ்ச் டயலாக் பேசி சிரிக்க வைக்கும் ஆக்‌ஷன் நாயகன், டாஸ்மாக் பார் குத்துப் பாட்டு, வெளிநாட்டு டூயட், இயற்பியல் விதிகளை மீறி டாட்டா சுமோ ஜீப்புகள் வானத்தில் பறக்கும் சண்டைக் காட்சிகள், கவர்ச்சி நடனங்கள் என்று அபத்த ஜோடனைகள் எதுவுமில்லாமல் ஓர் எளிய, இயல்பான திரைப்படத்தைத் தந்து தன் குருவான பாலுமகேந்திராவின் பெயரைத் தொடர்ந்து காப்பாற்றும் விதத்தை இதிலும் கச்சிதமாகப் பின்பற்றியிருக்கிறார் சீனு ராமசாமி.

பெரும்பாலும் நெய்தல் நிலவெளிக் காட்சிகளின் பின்னணி, சிறுநகரத்து அல்லது கிராமத்து எளிய மனிதர்கள், எவ்வித முகச்சுளிப்பையும் ஏற்படுத்தாத இயல்பான, நெகிழவைக்கும் திரைக்கதை, பொருத்தமான நடிகர்கள், உணர்ச்சிகரமான சம்பவங்கள், இனிமையான இசை, சிறந்த ஒளிப்பதிவு போன்றவற்றின் கலவையை வைத்து தம் திரைப்படங்களை உருவாக்குவது சீனு ராமசாமியின் பாணி. இந்தத் திரைப்படத்திலும் அதே வசீகரமான முறையைப் பின்பற்றி ஒரு நல்ல திரைப்படத்தை தந்திருக்கிறார். ஆனால் இதிலுள்ள திரைக்கதை கோளாறுகளையும் குழப்பங்களையும் தேய்வழக்கு நாடகத்தனங்களையும் மீறி இதுவொரு ஃபீல் குட் திரைப்படமாக மிளிர்வதற்காக இயக்குநரைப் பாராட்டியாகவேண்டும்.

சிறுகதைகள் போல பல்வேறு இழைகள், நபர்கள், சம்பவங்கள் என அடுத்தடுத்து பயணிக்கும் திரைக்கதைதான் என்றாலும் இத்திரைப்படத்தை ஒரு சுவாரசியமான அனுபவமாக்கியிருப்பதற்கு முக்கியமான காரணம் விஜய் சேதுபதி. ஏறத்தாழ முழு திரைப்படத்தையும் அவர்தான் தாங்குகிறார் என்றாலும் கூட மிகையில்லை. புகழும் வெற்றியும் பெற்ற நடிகர்களின் பாணியைத் தெரிந்தோ அல்லது தன்னிச்சையாகவோ நகலெடுப்பது பொதுவாக இளம் நடிகர்களின் வழக்கமாக இருக்கும். அவ்வாறில்லாமல் தனக்கென்று ஒரு பிரத்தியேகமான இயல்பான நடிப்பை கையாள்வதில் விஜய் சேதுபதி தொடர்ந்து கவர்கிறார்.

அவரது நடிப்பை தோராயமாக எப்படி வர்ணிக்கலாம் என்றால், நீங்கள் வீட்டிலிருந்து புறப்படும்போது பள்ளிக்குச் செல்லும் பக்கத்து வீட்டுச் சிறுமியைப் பார்க்கிறீர்கள். ‘ஹேய்... குட்டி, எப்படி இருக்கே... ஸ்கூலுக்குக் கிளம்பிட்டியா... குட்... குட்... பார்த்துப் போ... நல்லாப்படி... என்ன...?!’ என்று சொல்லும் இயல்பான தொனியை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏறத்தாழ விஜய் சேதுபதி நடிப்பதில் உள்ள பொதுவான இயல்புதன்மையின் அழகு இப்படித்தான் இருக்கிறது. குறிப்பாக இத்திரைப்படத்தில் அவரின் நடிப்பு இன்னமும் கூட மெருகேறியிருக்கிறது எனலாம்.

'சுமார் மூஞ்சி குமாராக, துணை நடிகராக இருந்த தன்னை முதன்முதலில் நாயகனாக்கிய சீனு ராமசாமிக்குக் குருவணக்கம் செலுத்தும் விதத்தில் சில சச்சரவுகளையும் மீறி இதில் அவர் நடித்துத் தந்திருப்பது பாராட்டத்தக்கது. (ஆனால் - தர்மதுரை, உடம்பைக் குறை என்று சொல்ல வேண்டியிருக்கிறது!)

**
தர்மதுரை என்பவன் யார்?

தினமும் காலையில் எழுந்தவுடன் தவறாமல் தண்ணியடிப்பது, 'இவன்க உங்களை ஏமாத்திடுவாங்க. உஷாரா இருங்க' என்று சீட்டுத்தொழில் நடத்தும் தம் சகோதர்களைப் பற்றியே ஊர் மக்களிடம் போட்டுக் கொடுப்பது, சொந்த வீட்டிலேயே அலப்பறைகள் செய்வது, சகோதரர்கள் தம்மை அறையில் அடைத்து வைத்தாலும் விஜய் மல்லையா மாதிரி சாமர்த்தியமாக தப்பி அலப்பறையை வெளியில் தொடர்வது என்று தம் கிராமத்தில் ஒரு ரகளையான நபராக இருப்பவன் விஜய் சேதுபதி. இத்தனைக்கும் இவன் மருத்துவப் படிப்பு படித்தவன் வேறு.

சகோதரர்கள் இவனை எதிரியாகவும் மற்றவர்கள் பைத்தியக்காரனாகவும் பார்க்கும்போது அவனுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே ஜீவன், தமிழ் சினிமாவின் வழக்கம் போல அவனது தாயான ராதிகா மட்டுமே.

இவனுடைய தொல்லை தாங்காமல் அருமைச் சகோதரர்கள் ஒருநாள் இவனை 'ஏதாவது செய்து விடுவதற்காக' திட்டம் போட, 'எங்காவது போய் பொழச்சுக்கப்பா’ என்று அவனை சிறையிலிருந்து மீட்டு அனுப்புகிறார் ராதிகா. இரவில் கிளம்பும் விஜய் சேதுபதி, சகோதரர்கள் வைத்திருக்கும் சீட்டுப்பணத்தின் பையைத் தவறுதலாக எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார்.
டாக்டருக்குப் படித்தும் ஏன் இப்படி அலப்பறையான குடிகாரர் ஆனார்? ஏன் சொந்த சகோதரர்களிடம் இப்படி பகைமை பாராட்டுகிறார்? இவற்றின் பின்னணி என்ன? தவறுதலாக எடுத்துப்போகும் லட்சக்கணக்கான சீட்டுப்பணம் என்னவாகிறது? அதை அவர் திருடி எடுத்துக்கொண்டு ஓடியதாக நினைத்து அவரைக் கொலைவெறியுடன் துரத்தும் சகோதரர்களிடமிருந்து தப்பித்தாரா என்பதைப் பின்னர் வரும் காட்சிகள் விவரிக்கின்றன.

***

தமது திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களை வலிமையாகவும் முக்கியத்துவம் தந்தும் சித்தரிக்கும் இயக்குநர்களில் சீனு ராமசாமியும் ஒருவர்.
அவ்வாறு இத்திரைப்படத்திலும் விஜய் சேதுபதியின் வாழ்வில் மூன்று பெண்கள் வருகிறார்கள். ஒன்றன் பின் ஒன்றாக இந்தச் சம்பவங்களை எவ்வித குழப்பமும் அல்லாத தெளிவான திரைக்கதையின் மூலம் அவற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இதில் ஸ்ருஷ்டி டாங்கேவின் பகுதி அவசியமற்ற அளவில் சிறியது என்றாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தமன்னா வரும் பகுதிகள் அழுத்தமான காட்சிகளுடன் அமைந்துள்ளன.
மருத்துவக் கல்லூரியில் தம் கூட படிக்கும் மாணவியான ஸ்ருஷ்டி டாங்கே தம்மைக் காதலிப்பதாகச் சொல்லும்போது விஜய் சேதுபதி முதிர்ச்சியுடன் அதைச் சமாளிப்பது அருமை. தமன்னா இதில் நடிக்கிறார் என்றவுடன் அவர்தான் இதில் பிரதான நாயகியாக இருப்பாரோ என்கிற நம் எண்ணத்தில் வெற்றிகரமாக மண்ணள்ளிப் போடுகிறார் இயக்குநர்.

விஜய் சேதுபதிக்கும் தமன்னாவுக்கும் இருக்கிற பாலினப் பாகுபாடுகளைத் தாண்டிய இயல்பான நட்பு வெளிப்படுகிற காட்சிகள் எல்லாம் அருமையாகப் பதிவாகியிருக்கின்றன. கூட படிக்கும் மாணவி தம்மைப் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டாலே அவள் தம்மைக் காதலிக்கிறாள் என்று எண்ணிக்கொள்வதும் பிறகு அவ்வாறில்லை என்று தெரிய வந்தவுடன் கொலைவெறியாகி அவள் மீது ஆசிட் அடிப்பதும், அரிவாள் தூக்குவதுமாக இருக்கும் சமகால இளைஞர்களின் குணாதிசயத்தின் போக்குக்கு ஒருவித கற்றலைத் தரும் விதமாக ஆண் - பெண் நட்பு இத்தனை இயல்பாக சித்தரிக்கப்பட்டதற்கு இயக்குநரைப் பாராட்டவேண்டும்.

வாழ்க்கையில் பழைய விஷயங்களை மறக்கக்கூடாது என்கிற செய்தியை உலகத்துக்குச் சொல்வதற்காக தாம் எல்.கே.ஜி படிக்கும்போது போட்ட ஃபிராக்குகளை, நாயகியான பிறகும் பெரும்பாலான திரைப்படங்களில் அணிந்து வெறுமனே கவர்ச்சிப் பொம்மையாக இதுவரை வந்து கொண்டிருந்த தமன்னாவுக்குப் புடவையணிவித்து அவரை உருப்படியாக நடிக்க வைத்திருப்பதற்காக இயக்குநருக்கு சிறப்பான நன்றி. திரைப்படத்தின் பிற்பகுதியில், தோல்வியடைந்த தமன்னாவின் திருமண வாழ்க்கையை விஜய் சேதுபதியின் வருகை சரிசெய்வதும் இவரைக் கொடுமைப்படுத்தின கணவனைப் போட்டுப் புரட்டியெடுப்பதும் அரங்கில் பலத்த கைத்தட்டல் வரவழைத்த காட்சிகள்.

படிப்பு முடிந்து கிராமத்தில் மருத்துவராகப் பணிபுரியும் விஜய் சேதுபதி, மற்றவர்களுக்கு உதவி செய்யும் நல்லியல்புடன் இருக்கும் இளம் பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷைச் சந்தித்த கணத்திலேயே மனத்தைப் பறிகொடுப்பதும், வழக்கமாக பெண்கள் ஆண்களைப் பாதுகாப்பாக அணுகுகிற முறையில் அவர் 'அண்ணா, அண்ணா' என்று அழைத்ததையும் ஒதுக்கி வீட்டுக்குப் பெண் கேட்டுச் செல்வதும் 'தெரியாம உங்களை அண்ணா -ன்னு கூப்பிட்டுட்டேன். நீங்க எனக்கு மாமா" என்று ஐஸ்வர்யா ராஜேஷ் வெட்கத்துடன் தன் காதலை ஒப்புக் கொள்வதும் ரசனையான காட்சிகள். இருவருமே பெரும்பாலும் பார்வைகளாலேயே தம் காதலை வெளிப்படுத்திக்கொள்வதும் இயல்பானதாக இருக்கிறது.

குறிப்பாக கிராமத்துக் கிழவிகளுக்கு விஜய் சேதுபதி மருத்துவம் பார்க்கும் சமயங்களில் அதைக் காதலும் பெருமையும் கலந்த பார்வையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கவனிக்கும் காட்சிகள் அருமை. இவ்வளவு பெரிய படிப்பு படித்த மாப்பிள்ளை தனக்குக் கிடைப்பாரா என்கிற சந்தேகம் அவருடைய கண்ணில் எப்போதுமே நிழலாடிக் கொண்டிருப்பதற்கு ஏற்ப இறுதியில் அவரது கனவு பொய்யாகிப் போவதும் அதனாலேயே விஜய் சேதுபதி குடியடிமை ஆவதுமான சோகங்கள் நிகழ்கின்றன. பெரிதும் ஒப்பனையற்ற தோற்றத்துடன் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் கண்களில் வெளிப்படும் காதல் உணர்வின் போதை நமக்கும் பரவுகிறது.

இதில் வரும் துணைக் பாத்திரங்கள் கூட அத்தனை அருமையாக நடித்திருக்கின்றன. ராதிகா, சொல்லவே வேண்டாம். தன் மகனை வீட்டை விட்டு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ரகசியமாகச் செய்துவிட்டு இரவில் அமைதியாகப் படுத்திருப்பதும், இறுதிக் காட்சியில் தன் மகன் ஒரு சிறுவனுக்கு மருத்துவம் பார்க்கும்போது தம் மகன் தரும் மருந்து கவரைப் பிரமிப்புடன் பிரசாதம் போல் வாங்கிக் கொள்வதும் என கலக்கியிருக்கிறார். சிறிது நேரமே வந்ததாலும் எளிய குடும்பத்தின் தகப்பனின் சித்திரத்தை எம்.எஸ்.பாஸ்கர் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு கண்ணியமான மருத்துவப் பேராசிரியரின் பங்கை ராஜேஷ் அபாரமாக தந்திருக்கிறார். விஜய் சேதுபதியின் சகோதரர்கள் உள்ளிட்ட இதர துணைபாத்திரங்களும் கூட நன்றாகவே இயங்குகின்றன. வீட்டு மாப்பிள்ளையாக அமர்ந்திருக்கும் நபரின் நடிப்பு நகைச்சுவைக் கலாட்டா.
  
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜாவின் இசை, எப்படியாவது ஹிட்டாக்கி விட வேண்டும் என்கிற ஆவேசமெல்லாம் எதுவுமில்லாமல் அவருடைய இசை திரைக்கதையின் இயல்புடன் பொருந்தியிருக்கிறது. குறிப்பாக பருத்திவீரன் பாணியில் வரும் 'மக்கா கலங்குதப்பா' பாடல் (மதிச்சியம் பாலாவின் குரல் ரகளை) உற்சாகமளிக்கிறது. விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இடையிலான காதல் உணர்வுகளைச் சித்தரிக்கும் 'ஆண்டிப்பட்டி' பாடலும் அருமை. இந்தப் பகுதியில் தேனி மாவட்டத்தின் நிலவெளிக்காட்சிகளின் அழகியலை எம்.சுகுமாரின் காமிரா வைட் ஆங்கிளில் கலையுணர்வுடன் பதிவாக்கியிருக்கிறது.

பொதுமக்களின் பணத்தில் கற்கப்படும் படிப்பான மருத்துவம், கிராமத்தின் எளிய மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்கிற செய்தியை அடிநாதமாக, பிரசார உறுத்தல் இல்லாமல் சொல்லியிருக்கும் இயக்குநருக்குப் பாராட்டு. திருநங்கைக்குப் பணியளிப்பது, 'பரோட்டா சாப்பிடாதே' என்று சிறுவனுக்கு மருத்துவர் விஜய் சேதுபதி அறிவுரை கூறுவது என ஆங்காங்கே சமூக உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காட்சிகளை இயல்பாக இணைத்திருப்பதும் வரவேற்கத்தக்கதே.

துவக்க காட்சியிலேயே ஒரு குடிகாரராக அறிமுகம் ஆகும்போது 'ஐயோ, இதிலும் விஜய்சேதுபதிக்கு வழக்கமான வேடமா' என்று நாம் சலித்துக் கொள்ள ஆரம்பிப்பதற்குள் படம் அங்கிருந்து நகர்வது சிறப்பு. என்றாலும் கூட கிராமத்தில் விஜய் சேதுபதி செய்யும் ரகளைகள் ரசிக்க வைப்பதாகவே இருக்கின்றன. மந்திரம் போட்டு தம்மைக் கட்டுப்படுத்தும் சிறுமியின் அன்புக்கு இணங்குவதும் அருமை.

அசந்தர்ப்பமான நேரத்திலும் கூட தன்னுடைய உடை குறித்தே கவலைப்படும் விஜய் சேதுபதியின் இளைய சகோதரன் பாத்திரம் முதற்கொண்டு ஒவ்வொன்றுமே சுவாரசியமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் வரும் மனிதர்கள் பெரும்பாலும் நல்லவர்களாக, மெல்லுணர்வையும் அதன் பின்னான அன்பையும் நீதியையும் நமக்கு நினைவூட்டுபவர்களாக இருக்கிறார்கள். வன்முறையும் ஆபாசமும் தலைதூக்கி நிற்கும் திரைப்படங்களுக்கு இடையில் இது போன்ற மெல்லுணர்வுகளின் ஆதிக்கம் வெளிப்படும் திரைப்படங்கள் வணிகரீதியாகவும் வெற்றி பெறுவது சமூக நலத்துக்கு நல்லது.

***

'ஆரம்பம்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா" என்பார் வடிவேலு ஒரு திரைப்படத்தில். சீனு ராமசாமியின் திரைக்கதையின் பிசிறுகள், அதிலுள்ள செயற்கையான நாடகத்தன்மைகள் இப்படித்தான் நம்மை உணர வைக்கின்றன. அவரது முந்தைய திரைப்படமான 'நீர்ப்பறவை'யிலும் இந்தப் பிரச்னையைக் கவனித்தேன். ஒரு வலுவான துவக்கத்தை தந்துவிட்டு பின்பு இலக்கற்று அலையும் திரைக்கதையினால் அது மனத்தில் அத்தனை ஒட்டாத படைப்பாகி விடுகிற ஆபத்தை அவர் கவனிக்கவேண்டும்.

இந்த திரைப்படத்திலும் அவ்வாறு பல கேள்விகள் கிளம்புகின்றன.

செல்போன் முதற்கொண்டு ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நவீன தொடர்பு சாதனங்களின் மீது இயக்குநருக்கு தனிப்பட்ட வகையில் விமரிசனமோ, ஒவ்வாமையோ கூட இருக்கலாம். தவறில்லை. ஆனால் தம்முடைய திரைப்படங்களின் பாத்திரங்கள் கூட அதை உபயோகப்படுத்தாதவாறு பார்த்துக் கொள்வது கொஞ்சம் ஓவர். இதுவொன்றும் தாமஸ் ஆல்வா எடிசன் பிறப்பதற்கு முன்பிருந்த காலக்கட்டத்தில் நிகழும் படம் இல்லைதானே?

அந்தளவுக்கு இத்திரைப்படத்தில் சிக்கலான சூழலிலும் கூட தகவல் தொடர்பேயில்லாமல் மனிதர்கள் அலைகிறார்கள். மருத்துவக் கல்லூரியில் அத்தனை நெகிழ்வான நெருக்கத்துடன் பழகும் மாணவர்கள் பின்பு எவ்வித தொடர்புமே இல்லாமல் பிரிந்திருப்பது செயற்கை. பாசத்தைக் கொட்டி தன்னை உயிர்தப்ப அனுப்பிய தாயை, அத்தனை காலத்துக்கு விஜய்சேதுபதி ஒருமுறை கூட தொலைப்பேசியில் கூட அழைப்பதில்லை என்பதும் இயல்பாக இல்லை.

போலவே தன் பையிலுள்ள லட்சக்கணக்கான பணத்தை விஜய் சேதுபதி நீண்ட காலம் கழித்துதான் பார்க்கிறார் என்பதும் நம்பும்படியில்லை. பெயருக்குக் காதலைச் சொல்லி விட்டு பின்பு காணாமற் போகும் ஸ்ருஷ்டி டாங்கேவின் பாத்திரம் அவசியமேயில்லையே. பின் எதற்காக? ஒரு தாய்க்கு நிராகரிக்கப்பட்ட மகனின் மீது கூடுதலான பிரியம் எழும் என்பது நடைமுறை உண்மைதான் என்றாலும் மற்ற மகன்கள் சிக்கலில் மாட்டித் தவிக்கும்போது கூட ஒரு தாய் மெளனமாக இருப்பார் என்பதும் நம்பும்படியில்லை. இறுதிக் காட்சியும் ஒரு எதிர்மறையான தீவிரத்தை எதிர்பார்க்க வைப்பது போன்று நகர்ந்து சட்டென்று 'சுபம்' என்று முடிந்துவிடுகிறது.

வன்முறையும் ஆபாசமும் அல்லாமல் தன் திரைப்படங்களைத் தர வேண்டும் என்கிற சீனு ராமசாமியின் பிடிவாத சமூக உணர்வை ஒருபுறம் பாராட்டியாக வேண்டியது அவசியம்தான் என்றாலும் ஒரு சாதாரண பார்வையாளனுக்கு ஏற்படக்கூடிய நெருடல்கள் கூட உருவாகாதவாறு திரைக்கதைக்கு மெனக்கெடுவது அவசியமானது. தனது வரப்போகிற இன்னொரு திரைப்படத்தின் தலைப்பை, சம்பந்தமேயில்லையென்றாலும் சாமர்த்தியமாக இணைத்திருக்கும் புத்திசாலித்தனத்தை திரைக்கதையிலும் காண்பிக்கலாம். ஆனால் இத்தனை குறைகள் இருந்தாலும் கூட ஒரு நீரோடை போன்று இயல்பாக நகரும் திரைக்கதையின் சுவாரசியம் இந்தக் குறைகளைக் காப்பாற்றுகிறது.

தர்மதுரை - சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் உருவான இயல்பான திரைப்படம். வாரஇறுதியில் குடும்பத்தோடு சென்று பார்க்கத் தகுதியான அருமையான படைப்பு. குறிப்பாக விஜய் சேதுபதியின் ரகளையான நடிப்பு ஒன்றுக்காகவே நம்பிச் செல்லலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com