மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ – சினிமா விமரிசனம்

இத்திரைப்படத்தின் பின்னணி இசைக்காக அரோல் கரோலியைப் பிரத்யேகமாகப் பாராட்டியாக வேண்டும். காட்சிகளின் மனோநிலைக்கு ஏற்ப...
மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ – சினிமா விமரிசனம்

இயக்குநராக மிஷ்கினின் எட்டாவது திரைப்படம் இது. அவருடைய பிரத்யேகப் பாணியைச் சிலாகிப்பவர்களும் உண்டு; கிண்டலடிப்பவர்களும் உண்டு. என்றாலும் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களின் வரிசையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருப்பவர் மிஷ்கின். திரைமொழியைச் சிறப்பாகவும் நுண்ணுணர்வுடனும் பயன்படுத்துவர்களில் ஒரு முக்கியமான படைப்பாளி.

‘துப்பறிவாளனிலும்’ மிஷ்கினின் பிரத்யேகமான விஷயங்கள் உண்டு. ஆனால், ‘கால்களைக் காட்டுவது’, ‘மஞ்சள் உடை அணிந்த பெண்ணின் குத்துப்பாட்டு’ போன்ற, அவரின் மீது சொல்லப்பட்டு வரும் தொடர்ப் புகார்களை இத்திரைப்படத்தில் மிஷ்கின் கைவிட்டிருக்கிறார் என்பது ஆறுதல். என்றாலும் மொட்டைத்தலை வில்லன், ஆள்நடமாட்டமில்லாத வனப்பகுதியில் நிகழும் சண்டை போன்ற வழக்கமான விஷயங்கள் இதிலும் உண்டு.

விஷாலுக்கு இதுவொரு முக்கியமான திரைப்படமாக இருக்கும். அவருடைய நடிப்பு பிரத்யேகமானதாக மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கான பாராட்டு மிஷ்கினைச் சேரும்.

**

‘துப்பறிவாளனின்’ கதை என்ன?

கணியன் பூங்குன்றன் (விஷால்) ஒரு திறமையான துப்பறிவாளர். ஒரு வழக்கு தன்னிடம் வரும்போதே அது தொடர்பான பல விஷயங்களைத் தனது நுண்ணறிவால் முன்பே யூகித்து விடும் புத்திசாலி. பணத்துக்கு மயங்காத நேர்மையானவரும்கூட. தன் மூளைக்குச் சவால் விடும் வழக்குகளைத் தேடி அலைபவர்.

தொலைந்து போன தன் மகளைக் கண்டுபிடிப்பதற்காக லட்சக்கணக்கான ரூபாய்களைத் தரத் தயாராக இருக்கும் ஒரு பணக்காரரின் வழக்கை ஏற்கத் தயாராக இல்லாத விஷால், “எங்க வீட்டு நாயைச் சாகடிச்சிட்டாங்க. கண்டுபிடியுங்க’ கோரிக்கையுடன் வரும் ஒரு பள்ளிச்சிறுவனின் வழக்கை ஆர்வமாக எடுத்துக் கொள்கிறார். அதற்கான பயணம் அவரை பல புதிர்ப்பாதைக்குள் இட்டுச் செல்கிறது.

மின்னலடித்துச் சாகும் ஒரு தொழிலதிபர் மற்றும் அவருடைய மகன், மர்மமான முறையில் இறக்கும் ஒரு காவல் அதிகாரி, கார் விபத்தில் சாகடிக்கப்படும் இன்னொரு தொழிலதிபர் என்று வரிசையாக மரணங்கள் நிகழ்கின்றன. எல்லா மரணங்களுக்கும் இடையே ஒரு தொடர்பும், வலைப்பின்னலும் இருப்பதை விஷால் கண்டுபிடிக்கிறார். இதன் பின்னணியில், கொலைகளை மிக நேர்த்தியாகக் கையாளும் ஒரு ரகசியக் குழு இருக்கிறது. அவர்களை விஷால் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதைப் பரபரப்பான காட்சிகளின் வழியே சொல்லியிருக்கிறார்கள்.

**

வீரமும் விவேகமும் இணைந்த ஒரு துறுதுறுப்பான பாத்திரத்தை விஷால் திறமையாகக் கையாண்டுள்ளார். மிஷ்கின் திரைப்படக் கதாநாயகர்களின், ரோபோ மாதிரியான வழக்கமான உடல்மொழி, இவரிடமும் உள்ளது என்றாலும் அதைத் தனக்கானதாக விஷால் மாற்றிக் கொண்டிருப்பது ரசிக்க வைக்கிறது.

ஐன்ஸ்டீனும் ஜாக்கிசானும் இணைந்த கலவையான பாத்திரம் விஷாலுடையது. தன் அசாதாரணமான புத்திசாலித்தனத்தால் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கூர்ந்து கவனிப்பது ரசிக்க வைக்கிறது. ஆனால் இதுவே சமயங்களில் மிகையாகி விடுகிறது. திடீரென்று பார்வையாளர்களை நோக்கி “சீட் நெம்பர் 16-ல் உட்கார்ந்திருப்பவரே, படம் பார்க்கும் போது மொபைல்ல பேசாதீங்க” என்று சொல்லி விடுவாரோ என்று கூட திகிலாக இருந்தது.

விஷாலின் உதவியாளராக பிரசன்னா. ஒரு துணைப்பாத்திரத்தை எத்தனை நேர்த்தியாகக் கையாள முடியுமோ, அத்தனை கச்சிதமாக கையாண்டுள்ளார். கிறுக்குத்தனமும் புத்திசாலி்த்தனமும் இணைந்த கலவையான விஷால் என்ன செய்கிறார் என்று புரியாமல் தலையை பிய்த்துக் கொள்வதே இவரது பெரும் வேலையாக இருக்கிறது. “டேய் கணி.. எதுக்குடா அப்படிப் பண்ணே’ என்று தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருப்பது ரகளையான நகைச்சுவை.

கதாநாயகி என்று சொல்ல முடியாத பாத்திரத்தில் அனு இம்மானுவேல். மலையாளத் திரைப்படமான ‘ஆக்ஷன் ஹீரோ பிஜ்ஜூ’வில் வந்த அழகு மயில், தமிழுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். வழக்கமான நாயகியாக அல்லாமல் பிரத்யேகமான பின்னணியுடன் கூடிய பாத்திரமாகப் படைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

இனிய ஆச்சரியம் ஆண்ட்ரியா. ஒரு லேடி கில்லர் பாத்திரத்தை அநாயசமாகக் கையாண்டிருக்கிறார். மிஷ்கினின் திரைப்படங்களில் நாயகனுக்கு ஈடான முக்கியத்துவம் வில்லனுக்கு இருக்கும். இதில் அப்படி ஒரு குழுவே இருக்கிறது. அதிகம் வாய்ப்பு தரப்படாவிட்டாலும் விநய் மிரட்டுகிறார். மென்மையான காதல் திரைப்படங்களில் இதுவரை வந்த அதே ஆசாமியா இவர் என்று பிரமிக்கும்படியான வித்தியாசம். சில காட்சிகளில் வந்தாலும் கலக்கல். 

பாண்டியராஜன், பிரசன்னா, ராதாரவி என்று சில நடிகர்களின் வழக்கமான பிம்பங்களை அப்படியே மாற்றியமைப்பதில் மிஷ்கின் கில்லாடி. அந்த வரிசையில் இந்தத் திரைப்படத்தில் பாக்யராஜ். அசட்டுத்தனமான நகைச்சுவையைக் கையாளும் வழக்கமான பாத்திரமாக அல்லாமல் அமைதியான முறையில் குரூரங்களைக் கையாளும் வித்தியாசமான ‘பாக்யராஜைக்’ காண ஆறுதலாக இருக்கிறது. சிம்ரன், ஷாஜி, ஜெயப்பிரகாஷ் என்று பல பாத்திரங்கள். ஆண்ட்ரியாவைப் பார்த்து ஜொள் விடும் காட்சிகளில் ஜான் விஜய் அசத்தியுள்ளார்.

**

சினிமா விரும்பிகளால் மிஷ்கின் படங்கள் கொண்டாடப்படுவதைப் போலவே ‘புரியவேயில்லையப்பா’ என்று குழம்பி வெறுக்கும் வெகுஜன ரசிகர்களும் உண்டு. அவ்வாறானவர்களுக்காகத் தன் பாணியை, இத்திரைப்படத்தில் மிஷ்கின் சற்றுத் தளர்த்திக் கொண்டிருப்பது தெரிகிறது. ஆனால் தன்னுடைய பாணியிலிருந்து அதிகம் இறங்காமல் வெகுஜன ரசிகர்களையும் கவர முயற்சித்திருக்கும் மிஷ்கினின் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. வீரமும் அசாதாரணமான புத்திசாலித்தனமும் இணைந்த ‘எம்.ஜி.ஆர்’ திரைப்படத்தைப் பார்த்தது மாதிரியான ஒரு விநோத அனுபவத்தை ‘துப்பறிவாளன்’ வழங்குகிறது.

என்றாலும், அசத்தலான திரைக்கதையையும் ஜனரஞ்சகத்தையும் இயல்பாக இணைத்த  கலவையான ‘‘சித்திரம் பேசுதடி’ போன்ற அற்புதங்களைத்தான் மிஷ்கினிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

தான் சண்டைக்காட்சிகளின் அற்புதமான காதலர் என்பதை மிஷ்கின் இந்தப்படத்திலும் நிரூபித்திருக்கிறார். ‘மெளத் ஆர்கன்’ வாசித்துக் கொண்டே உள்ளூர் ரவுடிகளை விஷால் வீழ்த்தும் காட்சி, ‘சீன உணவகம்’ ஒன்றில் நிகழும் அபாரமான சண்டைக்காட்சி போன்றவற்றில் வெளிப்படும் நுட்பங்களும் வேகமும் வசீகரிக்கின்றன. அநாவசியமான துருத்தலாக இருந்தாலும் ‘சீன உணவக’ சண்டைக்காட்சி ஒரு மாஸ்டர் பீஸ்’ என்றே சொல்லலாம். உணவகத்தின் பின்னணி மிகுந்த அழகியலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

**

விஷாலின் பாத்திரம் அருமையாக வடிமைக்கப்பட்டுள்ளது. ஓர் உதாரணம்.

தன் வீட்டு நாய்க்குட்டியைச் சாகடித்தவர்களை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையோடு ஒரு பள்ளிச் சிறுவன் வருகிறான். அவனைப் பார்த்தவுடனேயே சில விஷயங்களை யூகிக்கும் விஷால், அவன் எதையும் சொல்லும் முன் ‘நேத்து நைட்டு என்ன ஆச்சு?” என்று சட்டென்று சம்பவத்துக்குள் நுழைகிறார். ‘எங்க வீட்டுக்கும் பீச்சுக்கும் 343 அடி தூரம். நானும் எங்க தங்கச்சியும் அளந்து பார்த்தோம்’ என்று சிறுவன் சொல்கையில் விஷாலின் முகத்தில் இறுக்கம் மறைந்து ஒரு புன்னகை தோன்றுகிறது. தன்னைப் போலவே இயங்கும் ஒரு புத்திசாலியைக் கண்டுகொண்ட புன்னகை.

விஷால் புத்திசாலி என்பது சரி. அதற்காக ஒட்டுமொத்தக் காவல்துறையும் விஷாலின் பின்னால் நாய்க்குட்டி மாதிரி ஓடுவது மிகை. எந்தவொரு ஆபத்தையும் தன்னந்தனியாகத் தூசு தட்டுவது போல சமாளிக்கும் அதிரடி நாயகனாக விஷாலைச் சித்தரித்திருப்பதும் வழக்கமான பாணியில் இருக்கிறது.

நாயகியின் ‘பிக்பாக்கெட்’ திறமையைக் கண்டுதான் விஷால் அவருக்குப் பணிதர முன்வருகிறார். ஆனால் அந்தத் திறமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், அந்தப் பெண்ணின் கையில் துடைப்பத்தைக் கொடுப்பதும், ஏதோ ஆஸ்கர் விருது வாங்கிய பெருமையுடன் நாயகி ‘பாரதிராஜா படங்களின்’ வெட்கத்தைக் காண்பிப்பதும் முரணாக மட்டுமல்ல, சிரிப்பாகவும் இருக்கிறது. வெளியே முரட்டுத்தனமானவனாகத் தெரிந்தாலும், உள்ளே அன்பானவன் என்பதைச் சித்தரிப்பது சரி. ஆனால் இதுவே மிகையாக ஆகி விடும்போது நகைச்சுவையாக மாறி விடுகிறது.

தோற்றுவிட்டால் தன் வயிற்றை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்வது ஜப்பானிய சாமுராய்களின் மரபு. என்னதான் மிஷ்கின் அகிரா குரோசாவா-வின் பக்தராக இருந்தாலும் பொருத்தமேயில்லாமல் அப்படி ஒரு மரணத்தைத் திணிப்பது செயற்கை. கேட்டால் tribute என்று பத்து பக்கத்துக்கு விளக்கம் தருவார். எதற்கு வம்பு? போலவே இந்தக் காட்சியில், போலீஸ் படை சூழ்ந்திருக்க எவருக்கும் தெரியாமல் ஆண்ட்ரியா தப்பிக்கும் காமெடியெல்லாம் எம்.ஜி.ஆர் படத்தில் கூட வந்ததில்லை.

**

இத்திரைப்படத்தின் பின்னணி இசைக்காக அரோல் கரோலியைப் பிரத்யேகமாகப் பாராட்டியாக வேண்டும். காட்சிகளின் மனோநிலைக்கு ஏற்ப பொருத்தமாகப் பின்னணி இசை படம் முழுவதும் ஒலிக்கிறது. எவ்வித உறுத்தலும் இல்லை. படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுவதில் பின்னணி இசைக்கு பிரத்யேகமான பங்கு உண்டு. சீன உணவகத்தின் சண்டைக்காட்சியில், மேஜையின் மீது நகரும் விஷாலின் ஷூ கால்களுக்கு ஏற்ப அமைத்திருக்கும் ஒரு துரித தாளயிசை ஓர் அபாரமான உதாரணம்.

நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும் பின்னணியுடன் கூடிய விஷாலின் வீடு, சதுரங்கப் பலகை முதற்கொண்டு அரங்கப் பொருட்கள் அழகியலுடன் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிச்சிறுவன் தரும் பாக்கெட் மணி போன்ற சம்பளத்தை வைத்துக் கொண்டு நேர்மையாக இயங்கும் விஷால், எப்படி அப்படியொரு பணக்காரத்தனமான சூழலில் இருக்க முடியும் என்பது போன்ற கேள்விகளும் எழாமல் இல்லை. கார்த்திக் வெங்கட்ராமனின் காமிரா, மிஷ்கினின் சிந்தனை வேகத்துக்கு ஈடு தந்திருக்கிறது. குறிப்பாக சண்டைக்காட்சிகள்.

ஆண்ட்ரியா இயல்பாக ஃபிரிட்ஜைத் திறக்கும்போது உள்ளே இருக்கும் பிணம் சில நொடிகள் காட்டப்படுவது மாதிரியான சின்னச் சின்ன சுவாரசியங்கள் படம் முழுவதிலும் உண்டு. ஃபுரொபஷனல் கில்லர்களின் பின்னணியை அதிகம் விவரிக்காமல் பூடகமாக விட்டிருப்பது சிறப்பு. பாக்யராஜ் பாத்திரத்துக்கு மட்டும், பக்கவாதம் வந்திருக்கும் அவரது மனைவியைக் காட்டும்போது சிலவற்றை நாமாக யூகிக்க முடிகிறது. பாக்யராஜ் சாகடிக்கப்படும்போது, அவர் தலையணையை உபயோகிக்கும் விதம் Amour திரைப்படத்தை நினைவுப்படுத்துகிறது.

அதுவரை பெரும்பாலும் சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருந்த திரைப்படம், நீளமான கிளைமாக்ஸ் வந்தவுடன் நொண்டியடிக்க ஆரம்பித்து விடுகிறது. கொலைகளை மிகுந்த சாமர்த்தியத்துடன் தொழில்நுட்ப முறையில் கையாளும் ஒரு குழுவை இத்தனை மொண்ணையாகவா காவல்துறை கையாளும் என்கிற நெருடல் தோன்றுகிறது. காவல்அதிகாரி ஷாஜி, பதட்டத்துடன் ஓடிவரும் காட்சிகளிலும் வெறியோடு கத்தும் காட்சிகளும் மக்கள் சிரித்துத் தீர்க்கிறார்கள். (பதட்டமாக ஓடிவரும்போது அப்படித்தான் இருக்கும் என்றாலும்). நாயகனின் ஒற்றைச் சாகசத்தின் மூலமாக மட்டுமே சிக்கல்கள் தீர்வது கிளிஷே.

ஆர்தர் கானன் டாயல் உருவாக்கிய ‘ஷெர்லக் ஹோம்ஸ்’ பாத்திரத்தின் தீவிரமான ரசிகர் என்கிற முறையில் இத்திரைப்படத்தை மிஷ்கின் உருவாக்கியிருப்பதும் அதற்கான கிரெடிட்டை முதல் காட்சியில் தந்திருப்பதும் சிறப்பு. போலவே அந்தப் பாணியை அப்படியே பின்பற்றாமல், அதைத் தனக்கானதாகத் தகவமைத்துக் கொண்டிருப்பதும் பாராட்டத்தக்கது.

மிஷ்கினின் ரசிகர்கள் இந்த திரைப்படத்தைக் கொண்டாடுவதற்கான காரணங்கள் நிச்சயம் உண்டு. போலவே இதர வெகுஜன சினிமா ரசிகர்களும் இத்திரைப்படத்தை உறுதியாக ரசிக்க முடியும். அப்படியொரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறான் ‘துப்பறிவாளன்’.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com