‘தமிழ்ப்படம் 2’ – சினிமா விமரிசனம்

சமூகத்தைக் காக்க வந்த அவதாரங்களாகவே திரைக்கு வெளியிலும் தங்களைக் கருதிக் கொள்ளும் நடிகர்களின் மிகையான பிம்பங்கள் இவ்வாறாக உடைபடுவது...
‘தமிழ்ப்படம் 2’ – சினிமா விமரிசனம்

புகழ் பெற்ற படைப்புகளைத் தரமாக நையாண்டி செய்வது என்பது ஒரு கலை. ஹாலிவுட்டில் இது போன்ற பகடித் திரைப்படங்கள் நிறைய உள்ளன. 1905-ல் வெளியான, தி லிட்டில் டிரெய்ன் ராபரி (The Little Train Robbery) துவங்கி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். என்.எஸ். கிருஷ்ணனின் ‘நவீன விக்ரமாதித்யன்’ முதற்கொண்டு தமிழிலும் சில முயற்சிகள் உண்டு. பழங்கால மன்னர்களின் திட்டமிட்டு எழுதப்பட்ட ‘வரலாற்றை’ தலைகீழாகக் கவிழ்த்துப் போட்ட ‘இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி’, ‘வெஸ்டர்ன்’ வகைத் திரைப்படங்களைப் பகடி செய்த ‘இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம்’ ஆகிய சிம்புதேவனின் படங்களைச் சமீப உதாரணங்களாகச் சொல்லலாம்.

தமிழ்த் திரைப்படங்களின் தேய்வழக்குக் காட்சிகளை, முன்னணி நடிகர்களின் அலப்பறைகளைப் பிரத்யேகமாக நையாண்டி செய்து உருவாக்கப்பட்ட முதல் முழு நீள திரைப்படம் என்று ‘தமிழ்ப்படம்’ முதல் பாகத்தைச் சொல்லலாம். ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ‘லொள்ளு சபா’வின் பெரிய பட்ஜெட் வடிவமே இது. திரைப்படத்தை விடவும் தொலைக்காட்சி வடிவமே அதிகச் சிரிப்பை வரவழைத்தது என்று சொல்பவர்களும் உண்டு.

தனது முதல் படத்தின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். இவருடைய அடுத்தச் சில முயற்சிகள் கைகூடாத நிலையில், அடுத்தத் திரைப்படம் ஸ்பூஃப் ஆக இருக்காது என்கிற அறிவிப்புடன் திட்டமிடப்பட்டது ‘இரண்டாவது படம்’. படத்தின் பெயரும் அதுதான். அத்திரைப்படமும் வெளிவருவதில் சிக்கல் ஏற்படவே, இப்போது சில வருடங்கள் கழித்து... ‘தமிழ்ப்படம் 2’.

**

தனது சொந்த ஊரான ‘சினிமா பட்டியை’ சர்வதேசத் தரத்திற்கு சிவா உயர்த்தியதால் அவருடைய வாகனம் சென்ற பாதையை ஊரே தொட்டு வணங்குகிறது. ஒரு சாதிக்கலவரத்துடன்தான் இந்தத் திரைப்படம் துவங்குகிறது. பட்டாளங்களுடனும் ஆயுதங்களுடனும் உள்ள காவல்துறையினராலேயே கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில் ‘இது அவனாலதான் முடியும்’ என்கிற வசனத்தின் மூலம் சிவா வரவழைக்கப்படுகிறார். விடிய விடிய சிவா பேசும் மொக்கையான வசனங்களால் கதறியழும் ஊர் மக்கள், சண்டையை மறந்து வேறு வழியில்லாமல் சமாதானம் அடைகிறார்கள்.

வெடிகுண்டு மறைத்துவைக்கப்பட்ட ஒரு பார்சல் சிவாவின் வீட்டுக்கு வருகிறது. பார்சலைப் பிரிக்கும்போது அது வெடிப்பதால் சிவாவின் மனைவி இறந்து விடுகிறார். ‘P’ என்கிற சர்வதேச கிரிமினல்தான் இதற்குக் காரணம் என்பதை அறியும் சிவா, அவனைப் பிடிப்பதற்காக மறுபடியும் காவல்துறையில் பணிக்குச் சேர்கிறார். சுவரெங்கும் இறந்து போன மனைவிகளின் புகைப்படங்கள் நிரம்பி வழியும் வகையில் தனது அடுத்தடுத்த துணைகளை வில்லனின் மூலம் இழக்கும் சிவா, ‘P’ நபரை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் மீதம் வரும் காட்சிகள்.

முதல் பாகத்தைப் போலவே இதிலும் கதை என்கிற வஸ்துவைப் பற்றி இயக்குநர் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ஏன், கதையென்பதே இல்லை என்று கூடச் சொல்லி விடலாம்.  எந்த நோக்கத்திற்காகப் பார்வையாளர்கள் இந்தப் படத்திற்கு வந்திருக்கிறார்களோ, அதை நிறைவேற்றுவதில் மட்டுமே அதிகக் கவனம் செலுத்தியுள்ளார்.

ரஜினிக்கு வழக்கமாக போடப்படும் டைட்டில் கார்டு பாணியில் ‘அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா’ என்று காட்டப்படும் முதற்காட்சியில் துவங்கி ‘கபாலி’ திரைப்படத்தின் காட்சிகள் நகலெடுக்கப்பட்டிருக்கிற இறுதிக்காட்சி வரை, சமீபத்திய பெரும்பாலான தமிழ்ப் படங்களைச் சரமாரியாகக் கிண்டலடித்து தீர்க்கிறார்கள். ஒவ்வொரு காட்சியிலும், வசனத்திலும் நகைச்சுவை வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டிருக்கின்றன. (வசனம் எழுதிய கே. சந்துருவிற்குப் பிரத்தியேகப் பாராட்டு).

சத்ரியன், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், விவேகம், மெர்சல், 24, (பேசிகலி ஐ ஆம் அ வாட்ச் மெகானிக்), பாகுபலி, தேவர்மகன், விஸ்வரூபம்.. என்று பல தமிழ்த் திரைப்படங்களின் காட்சிகள் கருணையேயில்லாமல் கிண்டலடிக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் ‘ரெமோ’ திரைப்படத்தின் மீது இயக்குநருக்கு என்ன பிரத்யேகமான பிரியமோ தெரியவில்லை. தனியாகக் கவனித்துள்ளார். ஆனால் இதற்காக சந்தானபாரதிக்கு ‘பெண்’ ஒப்பனை போட வைத்ததெல்லாம் கொடூரமான சிந்தனை. ‘ஸ்பீட்’ உள்ளிட்ட சில ஹாலிவுட் திரைப்படங்களையும் இயக்குநர் விட்டு வைக்கவில்லை.

கமலை விடவும் அதிக ஒப்பனைகளில் வருகிறார் வில்லன் சதீஷ். வரவிருக்கிற எந்திரன் 2.0 திரைப்படத்தைக் கூட விட்டு வைக்காமல் அக்ஷய் குமாரை நகலெடுத்திருப்பதெல்லாம் சற்று மிகைதான். முதல் பாகத்தைப் போலவே இதிலும் சிவாவின் ‘பாய்ஸ்’ நண்பர்களாக சிலர் வருகிறார்கள். (இயக்குநர்) சுந்தரராஜன், சந்தானபாரதி, மனோபாலா.

“நீ ஒரு ஹீரோடா.. ஒரு பொண்ணைக் காதலிக்க நீ என்ன வேணா பண்ணலாம்.. அதுக்கு உனக்கு ரைட்ஸ் இருக்கு” என்று இவர்கள் சொல்கிற வசனத்தின் மூலம் சமகாலத் திரைப்பட நாயகர்களின் பொறுக்கித்தனங்களை நக்கலடிக்கிறார்கள்.

சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகள் சிலதும் பகடியாக்கப்பட்டிருக்கின்றன. செய்தித் தொலைக்காட்சியில் கருத்து சொல்லும் தமிழிசை, கல்லறையில் சசிகலாவின் ஆவேச சபதம், ஓபிஎஸ்ஸின் தியானம், ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், ரகசியப் பதவியேற்பு விழா... என்று சரமாரியாகப் பல சம்பவங்களை நக்கலடித்துள்ளார்கள். ஹெச்பிஓ (HBO), நேஷனல் ஜியாகிரபிக் சானல் (National Geographic Channel) என்று இதில் காட்டப்படும் தொலைக்காட்சி நிறுவனங்கள் கூட சர்வதேச அளவுதான். (சி.எஸ்.அமுதனின் அடுத்தத் திரைப்படத்தில் நடிக்க டாம் க்ரூஸ் சம்மதித்திருப்பதாக ஒரு வரி செய்தி வேறு  கீழே ஓடுகிறது!). இந்த அளவிற்குப் பல காட்சிகளின் பின்னணிகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும் தாறுமாறான நக்கல்கள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன அல்லது சிரிக்க வைக்க முயல்கின்றன அல்லது சிரிக்க வைக்க முயன்று பரிதாபமாக தோற்றுப் போகின்றன.  

நாயகன் சிவாவின் அறிமுகமே ஆக்ஷன் ஹீரோக்களைக் கிண்டலடிக்கிறது. ‘இவ்வளவு உயரத்துல இருக்கற தேங்காய்களை எப்படி பறிப்பேன்?’ என்று ஒரு முதியவர் அபயக்குரல் எழுப்ப, பறந்து வரும் ஜீப் ஒன்று தென்னை மரத்தில் மோத, இளநீர்க்காய்கள் கீழே விழுகின்றன. “நான் தினம் சாப்பிடற ஒவ்வோரு தேங்காய் பர்பிலயும் விவசாயிகளோட வியர்வை இருக்கு’ என்கிற பஞ்ச் வசனத்துடன் ஜீப்பில் இருந்து இறங்குகிறார் சிவா.  ‘போய் புள்ள குட்டிங்களைப் படிக்க வைங்கடா… ஆனா இன்ஜினியரிங் படிக்க வைக்காதீங்க..” என்பது போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.

‘அடிடா அவளை.. உதைடா அவளை..’ என்று ஆணாதிக்க உணர்வுடன் நாயகர்கள் பாடும் பாணியைப் பழிப்பது போல இதில் நாயகி ஆண்களை எதிர்த்து ஒரு முழுப்பாடலைப் பாடுகிறாள். பாலினச் சமத்துவம் என்பது ஒருவரையொருவர் பழிவாங்குவதில் இல்லை என்பதை இயக்குநர் உணர வேண்டும். ‘இப்ப ஐட்டம் சாங் வர்ற நேரமாச்சுல்ல.. ‘ என்கிற வசனத்திற்குப் பிறகு நடிகை கஸ்தூரி அந்த நடனத்தை ஆடி நம்மைப் பயமுறுத்துகிறார்.

முதல் பாகத்தில் தமிழ்ப் படங்களின் பாடல் வரிகளைக் கிண்டலடித்து உருவாக்கப்பட்ட ‘ஓ.. மகசீயா.. போல.. இதிலும் ஒரு பாடல். இன்னொரு காட்சியில் தோன்றும் நாயகனும் நாயகியும் ‘ஸாங் போயிடலாமா?” என்று ஆரம்பித்து.. ‘சரி வேண்டாம்’ என்று மனதை மாற்றிக் கொள்வது நமக்கு ஆறுதல். பெரும்பாலான தமிழ் இயக்குநர்கள் குறித்துக் கொள்ள வேண்டிய விஷயம் இது. ஒரு விபத்து நடந்தவுடன் நடிகர் ஜீவா வந்து.. ‘டூயட் போக வேண்டிய நேரம் இது’ என்று நினைவுப்படுத்துவதன் மூலம் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தையும் கிண்டலடித்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த திரைப்படத்தையும் தனியாளாக நின்று சுமந்திருக்கிறார் சிவா. அவரைத் தவிர இந்த ‘மொக்கை’ பாத்திரத்தில் வேறு எவரையுமே யோசிக்க முடியவில்லை. சதீஷின் பங்களிப்பு சுமாரானது. ஐஸ்வர்யா மேனன், சேத்தன், நிழல்கள் ரவி, கலைராணி போன்றவர்கள் துணைப் பாத்திரங்களாக நின்றிருக்கிறார்கள்.

கலை இயக்குநரின் பங்கைப் பிரத்தியேகமாகக் குறிப்பிட வேண்டும். நகல்தான் என்றாலும் ஒவ்வொரு திரைப்படத்தையும் சரியான பின்னணிகளோடு உருவாக்கியிருக்கிறார். அவற்றைத் தாண்டி,. தன் தனித்தன்மையையும் காட்டியுள்ளார். ‘நகைச்சுவை திரைப்படம்தானே’ என்கிற அலட்சியம் எல்லாம் இல்லாமல் தன் அபாரமான உழைப்பைத் தந்துள்ளார் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத். பாடல் காட்சிகளில் உள்ள அழகியலும் வசீகரமும் கவர்கிறது. சம்பந்தப்பட்ட திரைப்படங்களின் பின்னணி இசையை சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கும் கண்ணன், இதற்கிடையில் தன்னுடைய பங்கையும் சரியாகவே தந்துள்ளார். நடனம் தொடர்பாக வரும் போட்டிப்பாடல் சிரத்தையாக உருவாக்கப்பட்டுள்ளது.

‘அடுத்து எந்தத் திரைப்படத்தைக் கிண்டலடித்திருப்பார்கள்?’ என்று தோன்றுகிற மெலிதான ஆர்வம் மட்டுமே படத்தை இறுதி வரை பார்க்க வைக்கிறது. மற்றபடி கதை என்பது மருந்திற்கும் இல்லாமல் இதர தமிழ்ப்படங்களை கிண்டலடிக்கும் நகைச்சுவை தோரணமாக மட்டுமே இருக்கிறது. மாறாக, சற்று வலுவான கதையை அடித்தளமாக வைத்து அதன் மீது நையாண்டிகளை வைத்து அலங்கரித்திருந்தால் இது சிறப்பான திரைப்படமாகியிருக்கும். இதன்மூலம், ஒரு சிறந்த நையாண்டித் திரைப்படத்தை உருவாக்குவது அத்தனை எளிதில்லை என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

முதல் சில காட்சிகளில் சுவாரசியமாக நகரும் திரைப்படம், பிறகு அந்த சுவாரசியத்தைப் படிப்படியாக இழக்கிறது. அதிலும், ‘டைம் மெஷின்’ மூலம் சில நூற்றாண்டுகள் பின்னே நகரும் ‘பரத முனிவர்’ நகைச்சுவையெல்லாம் கொடூரம். (சிவாவிற்கு நடனம் ஆடத் தெரியாது என்பதை வைத்து இன்னமும் எத்தனை முறைதான் காமெடி செய்வார்களோ?!) வில்லனின் ஒற்றைப் பெயரை வைத்து செய்யப்படும் நகைச்சுவை முகம் சுளிக்க வைக்கிறது. ‘சின்ன கவுண்டர், காலா, சர்கார்’ போன்ற சுவரொட்டிகளில் காணப்பட்ட காட்சிகள் படத்தின் உள்ளே இல்லை. 

‘அபத்தமாகவே இருந்தாலும் மற்றவர்களின் உழைப்பைக் கிண்டலடித்து தன் பிழைப்பை ஓட்டுவது சரியா?’ என்கிற கேள்வி ஒருபக்கம் எழுந்தாலும், சமூகத்தைக் காக்க வந்த அவதாரங்களாகவே திரைக்கு வெளியிலும் தங்களை கருதிக் கொள்ளும் நடிகர்களின் மிகையான பிம்பங்கள் இவ்வாறாக உடைபடுவது அவசியமே. அந்த வகையில் ‘தமிழ்ப்படங்களின்” தேவை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதைச் சிறப்பாக செய்வதும் அவசியம் என்பதும் உணரப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com