‘கார்த்தி’யின் கடைக்குட்டி சிங்கம் - சினிமா விமரிசனம்

கூட்டுக்குடும்பம் என்னும் அமைப்பு எஞ்சியிருந்த 1960-70-களில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பீம்சிங் போன்றவர்களின் ‘குடும்பத் திரைப்படங்கள்’ நிறைய வெளிவந்தன.
‘கார்த்தி’யின் கடைக்குட்டி சிங்கம் - சினிமா விமரிசனம்

கூட்டுக்குடும்பம் என்னும் அமைப்பு எஞ்சியிருந்த 1960-70-களில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பீம்சிங் போன்றவர்களின் ‘குடும்பத் திரைப்படங்கள்’ நிறைய வெளிவந்தன. அப்போதய காலக்கட்டத்தை அவை பிரதிபலித்தன. ஆனந்தமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தில் பல்வேறு சிக்கல்கள் நுழையும். பாத்திரங்கள் அல்லாடி, பிரிந்து, துயருற்று, தர்மம் வென்று இறுதியில் ஒன்றாக இணைவார்கள். ‘சுபம்’ என்கிற வார்த்தை திரையில் மின்ன படம் நிறைவுறும். பார்வையாளர்கள் தங்களின் சொந்தப் பிரச்னை தீர்ந்த ஆசுவாசத்தோடு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அரங்கில் இருந்து வெளியேறுவார்கள். 

தனிக்குடும்பங்கள் பெருகி விட்ட சமகால சூழலில் இவ்வாறான திரைப்படங்கள் வருவதில்லை என்பது காலத்தின் பிரதிபலிப்பே. பொருளாதாரக் காரணங்கள் உள்ளிட்டு ‘ஒரு குழந்தை போதும்’ என்கிற சிந்தனை அதிகமாகி விட்டதால் ‘அக்கா” ‘அண்ணன்’ ‘தம்பி’ ‘தங்கை’ போன்ற ரத்த உறவுகளின் சுகத்தைப் பற்றி இளைய தலைமுறை அறியக்கூடிய வாய்ப்பேயில்லை. ‘கடைக்குட்டி சிங்கத்தின்’ மூலம் அப்படியொரு வாய்ப்பை திரையில் தந்திருக்கிறார் பாண்டிராஜ்.

உறவுகளினால் பலமும் உண்டு; சில பலவீனங்களும் உண்டு. ஆனால் பலமே அதிகம் என்கிற ஆதாரமான செய்தியை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துகிறது இந்த திரைப்படம். சில தேய்வழக்குகளால் நிறைந்திருந்தாலும் இப்படியொரு ‘குடும்ப சித்திரத்தை’ப் பார்த்து எத்தனை நாட்களாகி விட்டது?! நம் உயிருக்கு ஆதாரமான விஷயமாக இருக்கும் விவசாயத்தை விட்டு விலகிச் செல்லும் சூழலில் அதன் அவசியத்தையும் படம் ஆங்காங்கே அழுத்தமாக நினைவுப்படுத்திச் செல்கிறது. இத்திரைப்படத்தை தயாரித்திருக்கும் நடிகர் சூர்யாவிற்கு பிரத்யேகமான பாராட்டும் வாழ்த்தும்.

**

தனக்குப் பிறகு தன் குடும்பத்தை பாதுகாப்பாக வழிநடத்திச் செல்ல ஓர் ஆண் வாரிசு வேண்டும் என்கிற பிடிவாதத்தில் இருப்பவர் ரணசிங்கம் (சத்யராஜ்). ஆனால் தொடர்ந்து பிறப்பதெல்லாம் பெண் குழந்தைகள். ஆண் குழந்தைக்காக தன் மனைவியின் தங்கையையும் மணம் முடிக்கிறார் ரணசிங்கம். ஆனால் கடைசியில் முதல் மனைவியின் மூலமே ஆண் குழந்தை பிறக்கிறது. அவர்தான் படத்தின் நாயகர் குணசிங்கம் (கார்த்தி).

சத்யராஜின் குடும்பம், ஊரிலேயே பெரிய தலைக்கட்டு குடும்பம். கார்த்திக்கு ஐந்து மூத்த சகோதரிகள். எனவே குடும்பத்திற்குள் அது சார்ந்த பாசங்களும் சில உரசல்களும் இருக்கின்றன. வீட்டு மாப்பிள்ளைகளில் சிலர் முறைத்துக் கொண்டு நிற்கிறார்கள். 

‘ஒருத்தர் விடாம எல்லோரையும் நிக்க வெச்சு ஒரு போட்டோ எடுக்கணும்’- என்பது பெரியவர் சத்யராஜின் கனவு. கார்த்திக்கு இரண்டு முறைப்பெண்கள் இருக்கிறார்கள். (ப்ரியா பவானி சங்கர் மற்றும் அர்த்தனா பினு) ‘மாமா..மாமா’ என்று திருமணக்கனவுடன் கார்த்தியைச் சுற்றி வருகிறார்கள். அவர்களில் ஒருவரைத்தான் ‘கார்த்தி’ திருமணம் செய்து கொள்வார் என்பது உறவுகளின் கனவும் எதிர்பார்ப்பும். இதற்காக ரகசியப் போட்டியே நடக்கிறது. 

ஆனால் – பேருந்துப் பயணத்தில் பார்க்கும் ஒரு பெண்ணின் (சயீஷா) மீது காதல்வயப்படுகிறார் கார்த்தி. இவர்களின் திருமணத்திற்கு சத்யராஜ் ஒப்புக் கொண்டாலும் உறவுகளின் எதிர்ப்பை மீறி எப்படி இந்த திருமணத்தை நடத்த முடியும் என்கிற கவலை ஏற்படுகிறது. ‘நம் உறவுகளுக்குள் விரிசல் விழாமல், ஒருவர் விடாமல் அனைவரின் சம்மதத்தையும் பெற்றால் இந்த திருமணம் நடக்கும்” என்று மகனிடம் வாக்கு கேட்கிறார். 

நவக்கிரகங்கள் மாதிரி வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட தன் அக்காள்களையும் அவர்களின் உறவுகளையும், மிக முக்கியமாக முறைப்பெண்களின் வருத்தத்தையும் கடந்து எப்படி கார்த்தியால் தன் காதலை அடைய முடியும்? ‘குணசிங்கத்தைக் கொடூரமான முறையில் கொன்றே தீருவேன்’ என்று பழிவாங்கத் துடிக்கும் வில்லனின் இம்சை வேறு இன்னொருபுறம்..

இடியாப்பச் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்ட குணசிங்கம்.. தனக்கு முன்னே இருந்த சவால்களை எப்படி எதிர்கொண்டார் என்பதை மீதக்காட்சிகள் விவரிக்கின்றன. 

**

தொலைக்காட்சித் தொடர்களின் பாணியை நினைவுப்படுத்தினாலும், சில தேய்வழக்கு காட்சிகளைக் கொண்டிருந்தாலும் ஒரு குடும்பத்திற்குள் உள்ள வெவ்வேறு குணாதிசயம் கொண்ட மனிதர்களையும் அவர்களின் மனச்சிக்கல்களையும் மிக இயல்பான காட்சிகளின் மூலம் வெளிக்கொணர்ந்துள்ளர் இயக்குநர். கூட்டுக்குடும்பத்தில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்தப் படத்தை நெருக்கமாக உணர்வார்கள். குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான மூத்த சகோதரிகளைக் கொண்ட கடைக்குட்டிகள் தங்களின் பிரதிபலிப்பையே திரையில் பார்ப்பார்கள். இப்படியொரு வாழ்க்கை முறையை இழந்து விட்டோமே என்று சமகாலத்தவர்களும் ஏங்கும் அளவிற்கு உறவுகளின் பலத்தையும் பலவீனத்தையும் துல்லியமாக சித்தரித்துள்ளார் பாண்டிராஜ். 

‘காற்று வெளியிடை’ போன்ற மேல்தட்டு பாத்திரமாக இருந்தாலும் சரி, இது போன்ற கிராமத்து ஆசாமியாக இருந்தாலும் சரி.. பெரிதான நெருடல் இல்லாமல் ‘நச்’ சென்று பொருந்துகிறார் கார்த்தி. வேட்டியை மடித்து மீசையை முறுக்கிக் கொண்டு பாய்வதாகட்டும், ஒவ்வொரு அக்காவிடமும் சென்று பாசத்தைப் பொழிவதாகட்டும், பிறகு கோபித்துக் கொண்டு முறைத்து நிற்பதில் ஆகட்டும்.. அத்தனை இயல்பும் அழகும். ‘குணசிங்கம்’ பாத்திரத்தை நிறைவாக கையாண்டுள்ளார் கார்த்தி. 

தோற்றத்தில் தமிழ்நாட்டுப் பெண்ணாக இல்லாவிட்டாலும், இந்தப் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருத்தப்பட்டுள்ளார் சயீஷா. செல்வாக்கான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தன்னுடைய சொந்த உழைப்பின் மூலம் நிற்க விரும்பும் இவரது பாத்திரப்படைப்பு அருமை. 

‘சிவாஜி’ திரைப்படத்தில் வரும் ‘ரஜினி –விவேக்’ போல சூரிக்கு தாய்மாமன் கார்த்தி. காட்சிகளின் தீவிரத்தன்மை மிகையாகி விடாமல் சூரியின் நகைச்சுவை வசனங்கள் காப்பாற்றுகின்றன. ‘சரிதான்.. இப்ப இவங்க ஆரம்பிச்சிட்டாங்க’ என்று பிரச்னை செய்யும் ஒவ்வொருவரைப் பற்றியும் இவர் முன்னமே சொல்வது சிரிப்பை வரவழைக்கிறது. ‘உளவுத்துறை’ ‘ரத்தக்கண்ணீர்’ ‘பாசமலர்’ என்று ஒவ்வொரு அக்காவிற்கும் வைத்திருக்கும் பட்டப்பெயர்கள், நம் வீடுகளில் நிகழும் குறும்புகளை பிரதிபலிக்கிறது. 

சத்யராஜிற்கு அதிக வாய்ப்பு இல்லையென்றாலும் கூட தன்னுடைய பங்கை சரியாக செய்திருக்கிறார். கிளைமாக்ஸ் வசனத்தில் விஜி சந்திரசேகர் அசத்தியிருக்கிறார். மஞ்சள் பூசிய முகமும் பெரிய குங்குமப் பொட்டுமாக ‘சாமியாடி’யாக வரும் மெளனிகாவின் நடிப்பு பிரமாதம். போலவே இதர அக்காள்களும் தனித்தனியான குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறார்கள். குடித்து சலம்பல் செய்து விட்டு பிறகு வக்கணையாக உட்கார்ந்து சாப்பிடும் பாத்திரத்தை சுவாரஸ்யமாக செய்துள்ளார் இளவரசு. 

‘அவன் வந்தா நான் வரமாட்டேன்’ என்று பரஸ்பரம் முறைத்துக் கொண்டு நிற்கும் வீட்டு மாப்பிள்ளைகளாக சரவணணும் மாரிமுத்துவும் காட்சிகளை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்கள். ‘படித்த மாப்பிள்ளை’யின் பிரத்யேகமான பந்தாக்களை ஸ்ரீமன் இயல்பாக கொண்டுவந்துள்ளார். முறைப் பெண்களாக வரும் பிரியா பவானி சங்கரும், அர்த்தனா பினுவும் தங்களின் இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.  பானுப்பிரியா, பொன்வண்ணன், யுவராணி, என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள். ஒவ்வொரு காட்சியிலும் சுமார் இருபது பேராவது இருக்கிறார்கள். இயக்குநர் எப்படி சமாளித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. வீட்டின் மூத்த உறுப்பினராக வரும் பாட்டி மிகவும் கவர்கிறார்.

‘அவனோட மரணம் இதுவரை இல்லாத அளவிற்கு ரொம்ப கொடூரமாக இருக்கணும்” என்று ஏகப்பட்ட தயாரிப்புகளுடன் துவக்கத்தில் காட்டப்படும் வில்லன் பாத்திரம், பிறகு கொசு அடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது, இதன் பலவீனமான சித்தரிப்பைக் காட்டுகிறது. சாதியின் பெயரால் அரசியல் செய்யும் தலைவர்கள், ஆணவக் கொலை போன்ற சமூக அநீதிகளும் இந்தப் பாத்திரத்தின் மூலம் கண்டிக்கப்படுகின்றன. 

இசை டி.இமான். பாடல்கள் உருவாக்கும் தன்னுடைய பாணியை ஒரு குறிப்பிட்ட வசீகரமான வடிமைப்பிற்குள் கொண்டு வந்து விட்டார் என்பது இனிமைதான். ஆனால் அது சலிப்பதற்குள் மாற்றிக் கொள்வது நல்லது. பின்னணி இசை அபாரமானதாக இருக்கிறது. காட்சிகளின் அழகியலையும் பரபரப்பையும் வேல்ராஜின் ஒளிப்பதிவு சிறப்பாக கைப்பற்றியிருக்கிறது. படத்தின் துவக்கத்தில் வரும் ‘ரேக்ளா’ ரேஸூம் சரி, கார்த்தி –சயீஷா’வின் டூயட்டும் சரி.. அட்டகாசமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

வானமாதேவி, கண்ணுக்கு இனியாள், மங்கம்மா ராணி, சிவகாமியின் செல்வன்.. என்று பாத்திரத்தின் பெயர்கள் அழகான தமிழில் இனிமையாக அமைந்துள்ளன. ‘இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்’ ன்னு சொல்லிச் சொல்லியே அதை பின்னாலே ஒளிச்சு வெச்சுட்டாங்க’ என்பது போன்று விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் காட்சிகளும் வசனங்களும் ரசிக்க வைக்கின்றன. திருமண அழைப்பிதழ்களில் படித்த பட்டங்களைப் பெருமையாக போட்டுக் கொள்வது போல ‘விவசாயி’ எனும் அடையாளம் ஏன் பெருமிதப்படுத்தப்படவில்லை என்கிற கேள்வி முக்கியமானது. 

படத்தின் துவக்கத்தில் கார்த்தியின் உறவுகளை வரிசையாக அறிந்து கொள்ளவே மூச்சு வாங்குகிறது. அத்தனை உறவுகள். இது விவசாயத்தின் பெருமையைப் பற்றி சொல்லும் திரைப்படமோ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே பாதிப்படம் முடிந்து விடுகிறத. பிரச்னையின் மையம் பிறகுதான் துவங்குகிறது. இது திரைக்கதையின் ஒரு பலவீனம்.

‘ஆண் குழந்தைதான் வேண்டும்’ என்று பலமணம் புரிகிற சத்யராஜின் பிற்போக்குத்தனமான சிந்தனை படத்தின் இறுதிக்காட்சியின் மூலம் திருத்தப்பட்டிருந்தாலும் ‘ஒற்றைக் குழந்தையோடு’ நிறுத்தி விட்ட கார்த்தியின் மகளுக்கு எப்படி பல உறவினர்கள் கிடைப்பார்கள் என்கிற குழப்பமான கேள்வியும் இணைந்துள்ளது. 

சாகச நாயகர்களின் சண்டைப் படங்களும், நகைச்சுவைப் பேய் என்கிற அபத்தங்களும் நிறைந்திருக்கிற சமகால தமிழ் சினிமாவில், ஒரு குடும்பச் சித்திரத்தை உருவாக்கி கடந்த கால மறுமலர்ச்சியை மீண்டும் விதைத்துள்ளார் பாண்டிராஜ். நாடகத்தனமாகவும், மெல்லிய பிரச்சாரமாகவும் இருந்தாலும் அழிந்து கொண்டிருக்கும் கூட்டுக்குடும்பம் மற்றும் விவசாயம் ஆகியவற்றின் அருமையை ஆழமாக உணர்த்திய ‘கடைக்குட்டி சிங்கம்’ நிச்சயம் நம்மைக் கவரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com