ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி: சினிமா விமரிசனம்

அசலை  விட ரீமேக்  படங்கள் சிறப்பாக, அதுவும் வேறு இயக்குனரிடம் இருந்து அமைவது அரிது...
ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி: சினிமா விமரிசனம்

மிகைப்படுத்துதல்களை நாமும்தான் எவ்வளவு விரும்புகிறோம்! மனநிறைவோடு கதாநாயகி நடந்து வரும் காட்சி, உரத்த இசையுடன் எப்போதுமே ஹீரோயிசத்தை உயர்த்திப்பிடிக்கும். தலையணைச் சண்டையின்போது, பஞ்சு கண்டிப்பாகப் பறக்கவேண்டும். குடிகாரக் கணவன் வீட்டுக்குள் தள்ளாடினால் மட்டும் பத்தாது; அவனது பாத்ரூமில் எடுக்கும் குமட்டல் சத்தம் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கேட்டே ஆகவேண்டும். குழந்தைகளின் வீடியோ கேம் விளையாடும் நேரங்கள் கட்டுப்படுத்தவேண்டும் என்றால் மட்டும் போதாது, அவற்றைக் குறைகூறி ரூபிக் கியூப்ஸுக்கு மாற்றவேண்டும். இவையெல்லாம் மனத்தை உறுத்தினால் கூட, ஒரு வருடம் முன்பு வெளிவந்த, ' துமாரி சுலு ', இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அசலை  விட ரீமேக்  படங்கள் சிறப்பாக, அதுவும் வேறு இயக்குனரிடம் இருந்து அமைவது அரிது.

மற்றமொழிப் படங்களை இணையத்தில் சுலபமாக ஸ்ட்ரீம் செய்துப் பார்க்கமுடிகிற இந்தக் காலத்தில், ஒப்பீடுகள் எரிச்சலூட்டினாலும், தவிர்க்க முடியாதவை. படம் முழுக்க ரசிகர்களை மகிழ்விப்பதில் ஆர்வம் காட்டுவதே, காற்றின் மொழி படத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறது. 

விஜயலக்ஷ்மி அல்லது விஜி (ஜோதிகா) லெமன்-ஸ்பூன் போட்டியில் பங்கேற்பது போல, கதை துவங்குகிறது. ஜெயிப்பது அவளுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் அதற்கு அவள் கணவனின் ஆதரவையும் நிரூபிக்கவே மூலப்படத்தில் இந்தக் காட்சி இடம்பெறும். ஆனால், இந்தப் படத்தில் இதுபோன்ற காட்சிகள் அதி தீவிரமாகச் சொல்லப்பட்டுள்ளன. நம்மைச் சிரிக்க வைத்தே  ஆக வேண்டும்  என்றும் தீவிரமாக முயன்று இருக்கிறார்கள்.  

கணவர் பாலு (விதார்த்) விஜியை ஊக்குவிக்க ஓடும்போது, ஒரு கருப்பான குண்டுப்பெண் அவர் மீது விழுந்து நசுக்குவதையும், விஜியின் போட்டியாளராக குண்டான, தோற்றதால் விரும்பத்தகாத ஒருவரைக் காட்டுகிறார்கள். ஏன் பிறகு வருகிற யோகி பாபுவையும் அவருடைய நகைச்சுவைகளால் கவர்வதை விடவும் அவரின் தோற்றத்தை வைத்து மட்டுமே அதிகமாக நகைச்சுவைகளை உருவாக்கப் பார்த்துள்ளார்கள். இரவு நேர வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விஜியிடம், யோகி பாபு தன்னை, பாதி அமீர் கானென்றும், மீதி அரவிந்த் சாமியென்றும் சொல்லிக்கொள்ளும் காட்சிகளிலும் கூட, தோற்றம், நிறம், உடல் பருமன், ஓரினச்சேர்க்கை இவற்றை வைத்தே நகைச்சுவையைத் திணிக்கும் காட்சிகள், இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் தொடருமென்று தெரியவில்லை.

சிக்கலான ஆனால் முக்கியமான விஷயங்களைக் கையாள்வதை இந்தப்படம் தவிர்த்திருப்பது வியப்பாக உள்ளது. மூலப்படத்தில் வித்யாபாலன் பாத்திரம், வானொலி நிகழ்ச்சியில் செய்யும் வால்த்தனங்கள் கூடச் செய்யாத தேவதையாக இந்தப் படத்தில் விஜி சித்தரிக்கப்படுகிறார்.

விஜியின் இரவுநேரப்பணியினாலும், வீட்டு வேலைகளை செய்யத் தவிர்ப்பதாலும் தான் பிரச்னைகள் முளைக்கின்றன.  இந்தப்படம் விஜியின் வேலையின் இயல்பையும், அதனால் கணவருக்கு ஏற்படும் சங்கடங்களையும் பற்றி இன்னும் அதிகமாக வெளிக்கொணர்ந்திருக்கலாம்.

மூலப்படத்தில் இருப்பது போல, விஜியின் கிளர்ச்சியூட்டும் "ஹல்லோ"-வால் , வானொலி நிகழ்ச்சியின் இரவு நேர ஆண் அழைப்பாளர்களிடமிருந்து பிரச்னைக்குரிய அழைப்புகள் விஜிக்கு வருவதில்லை. ஆலோசகராக மட்டுமே அவர் காட்டப்படுகிறார். அப்படிப்பட்ட அழைப்புகள் வந்திருந்தால் அது பிரச்னை ஆகியிருக்குமா? அவரைப் பார்வையாளர்கள் தவறாக மதிப்பிடுவார்களா? ஆனால், விஜி தெளிவாக இருக்கிறார், தன் கணவன் தன்னை நம்பும்வரை, பிறர் எண்ணுவதையெல்லாம் தான் ஒரு பொருட்டாக மதிப்பதில்லையென்று. 

ஜோதிகாவின் உற்சாகம், துள்ளல்களால் பல நுணுக்கங்களை இழந்தாலும் அவை படத்துடன் நம்மை ஒன்றிப் போக வைக்கின்றன. இன்னும் கொஞ்சம் இதனைச் சமப்படுத்தியிருக்கலாம். இது இல்லாமல் போனதால், விஜி - பாலுவின் பின்னிரவு உரையாடல்கள் சரியான உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை. சரோஜா தேவி போல விஜி நடித்துக்காட்டும் நகைச்சுவைக் காட்சியும் அதற்கு இருவரும் சிரித்துக்கொள்வதும் செயற்கையாகவே உள்ளது. தொடர்ச்சியாக உள்ள மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளுக்கு இது ஓர் உதாரணம் எனக் கூறலாம். லிப்ட்டில் ஒருவர் விஜியை ஏமாற்ற முயன்ற அடுத்த நிமிடத்தில் அவரை எதிர்கொள்ளும் காட்சியும். ஹிந்தியில் வித்யா பாலன் பார்வையிலேயே  அவனது முயற்சியை முறித்துவிடுவார். இங்கு அக்காட்சி நகைச்சுவைக்கான வாய்ப்பாகவே உள்ளது. கேபினிலிருந்து வெளியேற்றப்படும் பாலு, தரங்குறைந்த வேலைகளைச் செய்யும் காட்சி அவலமாகக் காட்டப்படுகிறது. இதுபோன்று பல காட்சிகள், செண்டிமெண்ட்டாகவும் வெளிப்படுகின்றன. இதனால்தான் என்னவோ, விஜி பலமுறை காமிராவில் நம்மையே கூர்ந்து பார்க்கிறார்.

திரைத்துறையின் முன்னேற்றங்கள் இதில் வெகுகுறைவாக உபயோகப்படுத்தப்பட்டிருப்பது இதன் பெரிய குறையாகும். பல சமயங்களில் கேமராவை ஒரு டிரைபாடில் நிறுத்தி நாடகத்தைப் படமாக்கியதுபோல உள்ளது.  நீளமான ஷாட்கள் கொண்ட கதாபாத்திரங்களின் உரையாடல்கள் அசையாமல் ஒரே நிலையில் உள்ளன. விஜியின் வானொலி நிகழ்ச்சியின்போது காண்பிக்கப்படும் நம் நகரின் பரந்துவிரிந்த காட்சிகள் தவிர படம் காட்சிபூர்வமான அனுபவத்தை உண்டாக்கவில்லை. 

ஆனாலும், ஒரு பெண்ணின் இயல்பான போட்டி மனப்பான்மையை அர்த்தமுள்ளதாக மாற்ற வழி கண்டுபிடிக்கும் முக்கியமான கதை, காற்றின் மொழி. தன்னம்பிக்கை கொண்ட ஓர் இல்லத்தரசி, அவள் எண்ணங்களின் வழியே வாழத் துணிவதும், முக்கியமாக அவளைச் சுற்றியுள்ளவர்கள் அதற்குப் பழகிக்கொள்வதுமான ஒரு கதை இது. கணவனை வில்லனாக்காமல், திருமணப் பந்தத்தை உடைக்காமல் இதைச் செய்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக முயற்சி செய்யப்பட்ட காட்சிகளைக் குறைத்தும், குறைவான தித்திப்புகளுடனும் படம் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

விஜி அடிக்கடி கூறுவார் - "நான் சுட்டா பூரி புஸ்ஸுன்னு தான் வரும்". ஆனால், பூரி சுவையாக இருக்க அது புஸ்ஸென்று இருக்கவேண்டிய அவசியமில்லை.

தமிழில் : வினுலா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com