விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம்

ஒரு திரைப்படத்தின் தொடர்ச்சி வரும் போது அதை முந்தைய பாகத்தோடு ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் சாமி 2, புலியைப் பார்த்து....
விக்ரமின் சாமி 2: சினிமா விமரிசனம்

காவல்துறையை ஊழலும் மோசடியும் நிறைந்ததாக சித்தரித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா, அதே துறையில் உள்ளவர்களை நேர்மை, வீரம் போன்ற நேர்மறை அம்சங்கள் நிறைந்திருக்கும் நாயகர்களாக வைத்து மிகையாக புகழவும் தயங்கியதில்லை. இவற்றிற்கு சிவாஜியின் ‘தங்கப்பதக்கம்’ முதல் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. ‘தமிழ்’ என்கிற சுமாரான முயற்சியோடு இயக்குநர் ஹரி தமிழ் சினிமாவின் உள்ளே காலடி எடுத்து வைத்தாலும் ‘சாமி’ என்கிற அட்டகாசமான திரைப்படத்திற்குப் பிறகு பரவலான கவனம் அவர் மீது குவிந்தது. 

ஒரு மசாலா திரைப்படம் எத்தனை சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாக இன்றும் கூட ‘சாமி’யை உதாரணம் காட்டலாம். இந்த திரைப்படம் இதர இந்திய மொழிகளிலும் பிறகு வெளியானது. ‘சாமி’யை ‘சிங்கம்’ ஆக்கி மூன்று பாகங்களை முக்கி முக்கி எடுத்து விட்ட பிறகு, இயக்குநரின் கவனம் இப்போது மீண்டும் சாமி மீது திரும்பியிருக்கிறது. முந்தைய படத்தின் மீது பார்வையாளர்களுக்கு இன்னமும் இருக்கும் விருப்பத்தை வணிகமாக்கிக் கொள்ளும் முயற்சியில் அவர் உருவாக்கியிருக்கும் திரைப்படம் சாமி2 என்கிற சாமி ஸ்கொயர். இதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. 

ஒரு திரைப்படத்தின் தொடர்ச்சி வரும் போது அதை முந்தைய பாகத்தோடு ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் சாமி 2, புலியைப் பார்த்து வரைந்த பூனையின் ஓவியம் போலிருக்கிறது. 

**

திருநெல்வேலியில் அராஜகம் செய்து கொண்டிருந்த நிழல் அரசியல்வாதியான பெருமாள்பிச்சையை, காவல்துறை உதவி ஆணையர் ஆறுச்சாமி செங்கல்சூளையில் போட்டு எரிக்கும் காட்சியோடு முதல் பாகம் நிறைவுற்றது. ‘சாமியின் வேட்டை’ தொடரும் என்ற குறிப்பும் இருந்தது. 2003-ல் வெளிவந்த இந்த திரைப்படத்தின் தொடர்ச்சியை 2018-ல் வெளியிடுவது அத்தனை பெரிய குற்றம் இல்லையென்றாலும் அதை மழுப்புவதற்காக திரைக்கதையில் இயக்குநர் செய்திருக்கும் மாற்றங்கள் நகைச்சுவையாக இருக்கின்றன. 

முதல் பாகத்தை பார்வையாளர்களுக்கு நினைவுப்படுத்தும் வகையில் சில காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில் திரிஷாவின் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை உபயோகப்படுத்தியிருப்பது எவ்வகையிலும் பொருத்தமாக இல்லை. பிராமண வழக்கை அவர் உச்சரிப்பது மிகவும் செயற்கையாக இருக்கிறது. மிகக் குறைவான காட்சிகளில் வரும் இந்தப் பாத்திரத்தை ஏற்க த்ரிஷா மறுத்தது புத்திசாலித்தனமான காரியம். 

ஆறுச்சாமிக்கும் புதிய வில்லன்களுக்குமான யுத்தமாக இத்திரைப்படம் இருக்கும் என்று பார்த்தால் அப்படியில்லை. பெருமாள்பிச்சையின் குடும்பம் கொழும்புவில் இருக்கிறது. அவருக்கு மகேந்திர பிச்சை (ஓ.ஏ.கே.சுந்தர்), தேவேந்திர பிச்சை (ஜான் விஜய்), ராவண பிச்சை (பாபி சிம்ஹா) என்று மூன்று மகன்கள். தங்களின் தந்தையின் ‘மறைவில்’ ஏதோ மர்மமிருப்பதாகக் கருதும் அவர்கள், தாயின் ஆலோசனைப்படி தமிழகத்திற்கு வருகிறார்கள். தனது தந்தை கோழைத்தனத்துடன் தலைமறைமாகவில்லை, ஆறுச்சாமியினால் ‘என்கவுண்ட்டர்’ செய்யப்பட்டார் என்கிற ‘அரிய உண்மையைக்’ கண்டுபிடிக்கும் அவர்கள், பெருமாள்பிச்சைக்கு சிலை வைத்து அவரின் புகழை ஊரில் வலுக்கட்டாயமாக நிலைநிறுத்துகிறார்கள். தந்தையின் அராஜகத்தை தொடர்கிறார்கள்.

ஒருவேளை, பெருமாள்பிச்சையின் மகன்களுக்கும் ஆறுச்சாமிக்கும் இடையிலான மோதலாக இந்த திரைப்படம் இருக்குமோ என்று நினைத்தால் அங்கும் ஒரு திருப்பத்தை வைத்திருக்கிறார் இயக்குநர். ‘28 வருடங்களுக்குப் பிறகு’ என்கிற ஆச்சரியமான குறிப்புடன் படம் நகர்கிறது. ஆம். நீங்கள் யூகித்தது சரிதான். பெருமாள்பிச்சையின் மகன்களால் ‘ஆறுச்சாமி’ கொலை செய்யப்பட்டுவிட, தனது தந்தையின் மறைவிற்கு காரணமானவர்களை அதே ACP பதவியில் இருந்துகொண்டு மகன் ‘ராமசாமி’ பழிவாங்குவதுதான் மீதக்கதை. ஆக, இது ‘ராமசாமி’க்கும் ‘ராவண பிச்சைக்கும்’ இடையில் நிகழும் நவீன ராமாயணம். ராவணன் என்கிற பிம்பத்தை ‘காலா’வின் மூலம் மாற்றியமைக்க ரஞ்சித் முயலும்போது, அதை மரபின் பார்வையில் மீண்டும் திருப்பி வைத்திருக்கிறார் ஹரி. 

**

இளம் நாயகியை (கீர்த்தி சுரேஷ)  இத்திரைப்படத்தில் இணைப்பதற்காக, ‘இருபத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு’ என்று காலத்தை நகர்த்தியிருக்கும் இயக்குநர், அதே விக்ரமை இளம் நாயகனாக முன்நிறுத்தியிருப்பது, எப்படி கணக்குப் போட்டுப் பார்த்தாலும் தலைசுற்ற வைக்கும், புரியாத நகைச்சுவை. முதிர்நாயகனாக முன்னேறிக்கொண்டிருக்கும் விக்ரமுக்கும் கீர்த்தி சுரேஷுக்குமான பொருத்தம் உவப்பதானதாக இல்லை. ஆனால் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். 2003-ல் வெளியான திரைப்படத்தில் வெளியான அதே தோற்றத்தை ஏறத்தாழ இன்னமும் தக்க வைத்திருக்கும் விக்ரமின் உழைப்பிற்கு ஒரு பாராட்டு. முகம் முற்றிப் போனாலும், மனிதர் ஏறக்குறைய அதே ‘ஆறுச்சாமி’யாக களத்தில் இறங்கி எதிரிகளைப் பந்தாடுவது பெரிய முரணாகத் தோன்றவில்லை. சண்டைக்காட்சிகள் ரகளையாக இருக்கின்றன. 

கீர்த்தி சுரேஷ் வழக்கமான நாயகி. விக்ரமிடம் தொடர்ந்து காதலைக் கோரும் விஷயத்தில் பரிதாபத்தை ஏற்படுத்துகிறார். தன்னைக் காப்பாற்றும் நாயகனின் மீது காதல் உருவாவதெல்லாம் ‘கிளிஷே’ என்றாலும், சண்டைக்காட்சிகளுக்கு இடையில் ஒலிக்கும் ‘அதிரூபனே’ என்ற பாடல் இனிமையாகவும் ரசனைக்குரியதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

பிரதான வில்லனாக பாபி சிம்ஹா. குருவி தலையில் பனங்காய் என்கிற அளவில் அவருக்கு இது பெரிய சவால் என்றாலும், தன்னால் இயன்ற பங்களிப்பை அளித்து ‘மோசமில்லை’ என்று சொல்ல வைத்திருக்கிறார். ஆனால், ‘அவன் பேசும் போது கவனிச்சியாலே.. காது ஆடுது பாரு.. நம்ம சாதிக்காரப் பயதேன்’ என்று பெருமாள் பிச்சையிடம் இருந்த நகைச்சுவையும் பிரத்யேகமான வில்லத்தனமும் பாபி சிம்ஹாவிடம் இல்லையென்பதால் வழக்கமான எதிர்நாயகனாக இவரது பாத்திரம் அமைந்திருக்கிறது. 

சூரியின் காமெடி வழக்கம்போல் எங்குமே ஒட்டவில்லை. ரசிக்க வைக்கவில்லை என்பதற்கும் மேலாக எரிச்சலும் ஊட்டுகிறது. பிரபு, ஐஸ்வர்யா, இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ்கான், சுதா சந்திரன் போன்றவர்களோடு முதல் பாகத்தில் இருந்த டெல்லி கணேஷ், சுமித்ரா, ரமேஷ் கண்ணா, கிரேன் மனோகர் என்று பல பாத்திரங்களால் இத்திரைப்படம் நிறைந்திருந்தாலும் எவருமே மனதில் ஒட்டவில்லை. 

‘டமுக்கு டம்மா’ என்கிற ஒரே டியூனை வைத்துக்கொண்டு தன் ஒட்டுமொத்த காலத்தையும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஓட்டிவிடுவார் போலிருக்கிறது. ‘அதிரூபனே’ தவிர இதர அனைத்துப் பாடல்களும் கவனத்தைக் கவரவில்லை என்பதோடு இடையூறாகவும் அமர்ந்து எரிச்சலூட்டியிருக்கின்றன. பின்னணி இசை சற்று தேவலை. ஹாரிஸ் ஜெயராஜ் இல்லாத குறை வெளிப்படையாகத் தெரிகிறது. 

ஒளிப்பதிவாளர் ப்ரியனின் மறைவைத் தொடர்ந்து வெங்கடேஷ் அங்குராஜ் அந்தப் பணியைத் தொடர்ந்திருக்கிறார். ‘வேகமான திரைக்கதை’ என்கிற பெயரில் காட்சிகளை சட்சட்டென்று மாற்றும் கொடுமையை சற்று மட்டுப்படுத்தியதற்காக எடிட்டர்களுக்கு நன்றி சொல்லலாம். 

மற்றபடி ஹரியின் திரைப்படத்தில் வழக்கமாக இருக்கும் அனைத்து அம்சங்களும் அபத்தங்களும் இதில் இருக்கின்றன.  நாயகனும் வில்லனும் பரஸ்பரம் சவால் விட்டுக்கொள்வது, நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி எதிரியின் சதியை வீழ்த்துவது, பழிவாங்குதலுக்காக புதுமையான வழிகளைப் பயன்படுத்துவது, வாகனங்கள் ஆகாயத்தில் பறப்பது, குறுக்கும் நெடுக்குமாக எல்லோரும் ஓடுவது என்று எல்லா விஷயங்களும் இருக்கின்றன. ஆனால், ‘ஆறுச்சாமி’யின் வீரம், விவேகம், மற்றும் பெருமாள்பிச்சையின் ரசிக்க வைத்த வில்லத்தனம் போன்றவைதான் காணவில்லை. அதற்காகத்தான் முதல் பாகத்தை பார்வையாளர்கள் கொண்டாடினார்கள் என்கிற விஷயம் இயக்குநருக்குப் புரிந்தால் சரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com