மணி ரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ - சினிமா விமரிசனம்

‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தை ஒருவகையில் ‘நாயகனின்’ நீட்சி என்றுகூடச் சொல்லலாம். வேலு நாயக்கருக்கு மூன்று மகன்கள் இருந்திருந்தால்...
மணி ரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ - சினிமா விமரிசனம்

தமிழ் சினிமாவின் ‘கேங்க்ஸ்ட்ர்’ வகைமைத் திரைப்படங்களை நவீனப்படுத்தியவர்களில் முன்னோடியாகவும் முதன்மையானவராகவும் இயக்குநர் மணி ரத்னத்தைச் சொல்லலாம். ஊரின் ஒதுக்குப்புறமான பாழடைந்த மாளிகையில் விநோதமான விளக்குகளும் அரைகுறை ஆடையணிந்த மங்கைகளும் நிறைந்திருக்க, ‘டேய்.. கபாலி.. அவன் கதையை முடிச்சுடு’ என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரிக்கும் பழமைவாத, தேய்வழக்கு வில்லன்கள், மணியின் வருகைக்குப் பிறகு பெரும்பாலும் காணாமல் போனார்கள். ‘அவர்கள் அயல்கிரக ஜீவிகள் அல்லர், நம் கண்ணே முன்னே உலவிக் கொண்டிருக்கும் சில பெரிய மனிதர்கள்தாம்’ என்பதைத் தம் திரைப்படங்களில் துல்லியமாகச் சித்தரிக்கத் துவங்கினார் மணி ரத்னம். ‘பகல்நிலவு’ திரைப்படத்தில் துவங்கிய இந்தச் சித்தரிப்பு, ‘நாயகனில்’ விஸ்வரூபம் எடுத்தது. சர்வதேச அளவிலான ‘கேங்ஸ்டர்’ திரைப்படங்களில் ‘காட்பாஃதர்’ எப்படி முக்கியமான படைப்பாக கருதப்படுகிறதோ, அதைப் போலவே தமிழ் சினிமாவில் ‘நாயகன்’ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 

‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தை ஒருவகையில் ‘நாயகனின்’ நீட்சி என்றுகூடச் சொல்லலாம். வேலு நாயக்கருக்கு மூன்று மகன்கள் இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்கக்கூடுமோ, அவையனைத்தும் இந்தத் திரைப்படத்தில் நிகழ்கின்றன. வேலுவிற்குப் பதிலாக சேனாபதி. 

ஒரு வலுவான தலைமை மறைந்த பிறகு, அந்த இடத்தைக் கைப்பற்ற வாரிசுகளுக்கு இடையே நிகழும் மோதல் என்பது பழமை வாய்ந்த சமாச்சாரம். பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் ரத்தச் சரித்திரம் இது. மனிதர்கள் கூட்டமாக வாழத் துவங்கிய காலத்தில் துவங்கிய இந்த மோதல், அரசுகள் உருவாகிய மன்னர் காலக்கட்டங்களில் நீண்ட வரலாறாக உருவெடுத்தது. சில தனிநபர்களுக்கு இடையிலான போட்டியில் ஏராளமான பல தலைகள் உருண்டதையும், ரத்த ஆறு ஓடியிருப்பதையும் வரலாற்றின் பக்கங்களில் காண முடியும். 

எந்தவொரு சாதாரண நபரும் அதிகாரத்தின் உச்சிக்கு நகர முடியும் என்கிற ஜனநாயகக் காலக்கட்டம் மலர்ந்த பிறகும் கூட வாரிசுப் போட்டியின் மோதல்கள் ஓயவில்லை என்பதை நடைமுறையில் காண்கிறோம். அந்த வகையில் இந்தத் திரைப்படம் சமகாலத்திற்கு மிகவும் ஏற்றது. அதிலும் தமிழகத்தின் இப்போதைய சூழலுக்கு பொருத்திப் பார்க்க முடிவது. 

**

இரண்டு டிரைய்லர்களிலும் பார்த்த காட்சிகளின் விரிவாக்கம்தான் இந்தத் திரைப்படம். தனது அனைத்து துருப்புச் சீட்டுக்களையும் தன்னம்பிக்கையுடன் முதலிலேயே பார்வையாளர்களுக்குக் காட்டி விட்டார் மணிரத்னம். தனது வழக்கமான பாணியைப் பெரும்பாலும் கைவிட்டுப் புத்துணர்ச்சியுடன் கூடிய திரைக்கதையையும் காட்சிகளின் சித்தரிப்புகளையும் அவர் அளித்திருப்பது, இத்திரைப்படத்திற்குப் புதிய நிறத்தை அளிக்கிறது. 

சிறிய அளவு குற்றத்தில் துவங்கி தனது நிழல் சாம்ராஜ்யத்தை உலக அளவில் விரித்து வைத்திருக்கும் பிரகாஷ்ராஜ் (சேனாபதி) மீது கொலைத் தாக்குதல் நடக்கும் மங்கலகரமான விஷயத்துடன் படம் ஆரம்பிக்கிறது. அவருக்கு மூன்று மகன்கள். அரவிந்த்சாமி (வரதராஜன்), அருண் விஜய் (தியாகராஜன்), சிம்பு (எத்திராஜ்). 

‘பெரியவரின் மீது யார் கை வைத்திருப்பார்?’ என்கிற ஆதாரக் கேள்வியோடு அந்தச் சந்தேகத்தின் நிழலிலேயே படத்தின் முதல் பகுதி நகர்கிறது. சக போட்டியாளரான சின்னப்பதாஸ் முதல் (தியாகராஜன்) வீட்டின்  நாய்க்குட்டி வரை சகலரையும் சந்தேகப்படுகிறார்கள். “நீதான் ஆள் அனுப்பிச்சியாடா?” என்று தன் கடைசி மகன் சிம்புவிடம் நேராகவே கேட்கிறார் பிரகாஷ்ராஜ். “என்னைச் சந்தேகப்படறீங்களா?, நான் உங்க நகல். நீங்க என்னவெல்லாம் செஞ்சீங்களோ, அதையேதான் நாங்க செய்வோம்’ என்று மையமாகப் பதில் அளிக்கிறார் சிம்பு. “யாரு செஞ்சது இதை, அரைகுறையா செஞ்சிருக்காங்க” என்று நக்கலடிக்கவும் சிம்பு தவறுவதில்லை. 

‘இவனா இருப்பானோ?’ என்று மூன்று மகன்களுமே ஒருவரையொருவர் ரகசியமாகச் சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கும்போது பிரகாஷ்ராஜிற்கு அந்த ரகசியம் தெரிந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அவரது மரணம் நிகழ, ரணகளமான அந்த வாரிசுப் போட்டி ஆரம்பிக்கிறது. துப்பாக்கிக் குண்டுகளும், துரோகங்களும், குருதியும் பெருகி வழிந்தோட இறுதியில் ஒரு நியாயமான துரோகத்தோடு படம் நிறைகிறது. 

**

படத்தில் நிறைய முன்னணி நட்சத்திரங்கள் இருந்தாலும் அனைவருக்கும் சமமான இடத்தைப் பகிர்ந்தளிக்கும்படியான திரைக்கதையை அபாரமாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம். இணைக் கதாசிரியரான சிவா ஆனந்தின் பங்களிப்பையும் குறிப்பிட வேண்டும். (ஜோதிகாவின் தந்தையாகவும் நடித்திருக்கிறார்). சிம்புவும் விஜய் சேதுபதியும் தோன்றும்போது அவரவர்களின் ரசிகர்கள் ஆரவாரமாக கைத்தட்டினாலும், சிறிது நேரத்திலேயே அவர்களின் நட்சத்திர பிம்பங்கள் மறைந்து போய், கதாபாத்திரங்களாக மட்டுமே தோன்றும்படியான மாயத்தை நிகழ்த்துவதில் வெற்றியடைந்திருக்கிறார் இயக்குநர். 

அதீதக் கோபமும் மெல்லியப் பதட்டமும் கலந்த ‘வரதராஜன்’ பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் அரவிந்த்சாமி. திடகாத்திரமான இவரது உடலமைப்பு இதற்கு உதவியிருக்கிறது. அதிகாரத்தின் நிழலில் பல காலம் நீடித்தும் அதன் ருசியைச் சுவைக்க முடியாத கழிவிரக்கத்தில் இவர் எடுக்கும் முதல் ஆயுதம்தான் இந்தத் திரைப்படத்தின் இயங்குவிசை. இதைப் பிற்பாடு தன் மனைவி ஜோதிகாவிடம் சொல்லி இவர் கண்ணீர் விடும் காட்சி அற்புதமானது. நண்பனின் துரோகம் காரணமாக அனைத்தையும் இழந்து விடும் நிலையில் ‘மனுஷங்க எல்லோருமே பூஜ்யம்தான்” என்று அதிரடியாகக் களம் இறங்கும் காட்சியிலும் அசத்தியிருக்கிறார். 

அடுத்தவர் அருண் விஜய். கூர்மையான புத்திசாலித்தனம் கொண்டவர். “நீ என்னைப் பற்றி புகழ்ந்தாலும் அதனால் உனக்கு என்ன லாபம்னுதான் நான் யோசிப்பேன்” என்று தன் தம்பி சிம்புவிடம் சொல்லுமளவிற்கான வணிக மூளையைக் கொண்டவர். சேனாபதியின் இருக்கையின் மீதுள்ள ரகசியக் காதலைத் தோரணையின் மூலமாகவே வெளிப்படுத்துவதும், அது நிறைவேறும் ஒரு தருணத்தில் அட்டகாசமாக வந்து உட்கார்வதும் என அருண் விஜய் மிரட்டியிருக்கிறார். ‘என்னை அறிந்தால்’ விக்டருக்குப் பிறகு இன்னொரு பெயர் சொல்லும் பாத்திரம். 

கடைக்குட்டி சிம்பு. அவருடைய இயல்பான குணாதிசயத்திற்கு ஏற்ப பாத்திரமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘அப்பா சாகக் கிடக்கறாரு” என்ற தகவலை அறியும்போது ‘நான் வரணுமா?’ என்று கேட்கும் முதல் காட்சியிலேயே கவர்ந்து விடுகிறார். ‘அண்ணா.. நீதான் இதை ஆரம்பிச்சே’ என்று கோபத்தின் உச்சியில் கத்துவதாகட்டும், அரவிந்த்சாமியின் காதலியைக் கடத்திக்கொண்டு அண்ணனை மிரட்டும் தோரணையாகட்டும், “நீ என் கூட கொஞ்ச நாள் இரும்மா” என்று தாயிடம் (ஜெயசுதா) உருக்கத்துடன் கெஞ்சுவதாகட்டும், சிம்புவின் திரைப்பட்டியலில் ஒரு முக்கியமான இடத்தை வழங்கியிருக்கிறது இந்தத் திரைப்படம். 

இன்னொரு முக்கியப் பாத்திரம் விஜய் சேதுபதி (ரசூல்). கிட்டத்தட்ட கிருஷ்ண பரமாத்மா மாதிரியான வேடம். நீதிக்காக நட்பின் பக்கமும் துரோகத்தின் பக்கமும் நிற்கிறார். பொதுவாக அனைத்து நடிகர்களும் மணிரத்னத்தின் படங்களில் வரும்போது அந்தப் பாணிக்கு மாற்றப்படுவார்கள். இதில் அரிய விதிவிலக்கு என்று விஜய் சேதுபதியைச் சொல்லலாம். வழக்கம் போல் தன் இயல்பான, அநாயசமான நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்வதில் முதன்மையான இடத்தைப் பிடித்து விடுகிறார். எந்தவொரு சிக்கலான சூழலிலும் பதற்றப்படாமல் இயங்கும் இவரது நிதானம் கவர்கிறது. 

**

பொதுவாகக் குற்றவகையிலான திரைப்படங்களில் பெண்கள் பாத்திரம் என்பது வில்லன்களால் கடத்தப்படுவதாகவும், துயரம் வரும்போது கண்கலங்கி, மூக்கைச் சிந்துவதாகவும் முடிந்துவிடும். ஆண்களின் ராஜ்ஜியத்தில் பெண்களுக்கு இடம் இருக்காது. ஆனால் இந்தத் திரைப்படத்தில் விதிவிலக்காக ஜோதிகாவிற்குப் போதிய இடம் தரப்பட்டிருக்கிறது. கணவரைக் காப்பாற்றுவதற்காக இவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கின்றன. ‘நல்லா வருவீங்க தம்பி’ என்று அழுத்தமான குரலுடனும் அழுகையுடனும் சிம்புவிடம் இவர் பேசும் காட்சி குறிப்பிடத்தக்கது. ‘அவங்க வந்திட்டிருக்காங்க. உனக்குத் தெரியுமா?” என்று கணவரை எச்சரிக்கும் காட்சியும் சுவாரசியம். 

பிரகாஷ்ராஜ் தனது பாத்திரத்தை உணர்ந்து அதற்கேற்ற நிதானத்துடன் நடித்து அசத்தியிருக்கிறார். தன் மீது கொலைமுயற்சியை நிகழ்த்திய நபர் யாரென்று தெரிந்தும் இவர் காட்டும் நிதானம் முதிர்ச்சியானது. அருண் விஜய்யின் மனைவியாக, இலங்கைத் தமிழ் பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ். சிறைக்குப் பின்னால் நின்று தன் கணவரை ஆழமாக வெறுக்கும் காட்சியில் இவரது முகபாவங்கள் அற்புதம். அரவிந்த்சாமியின் காதலியாக அதிதி ராவ் ஹைதரி. இவரது பாத்திரம் அநாவசியமானதோ என்று தோன்றினாலும், வீடு தேடி வரும் ஜோதிகாவை இவர் எதிர்கொள்ளும் காட்சி ரகளையானது. 

தமிழ் வெகுஜனத் திரைப்படத்தை உயர்ந்த தரத்துடனும் திறமையான நுட்பங்களின் பின்னணியில் தருவதிலும் மணி ரத்னம் ஒரு முன்னோடி. இத்தனை வருடங்கள் கழிந்தும் அவருடைய இடம் அப்படியே இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது செக்கச் சிவந்த வானம். வழக்கம் போல் தொழில்நுட்பர்களின் கூட்டணி அசத்தியிருக்கிறது. 

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ஏற்கெனவே ‘ஹிட்’. என்றாலும் அவற்றை வழக்கம் போல் இரண்டு வரியோடு இடதுகையால் உபயோகப்படுத்தியிருக்கிறார் மணி ரத்னம். ஆல்பத்தில் இடம்பெறாத பல துண்டுப்பாடல்கள் காட்சிகளைச் சுவாரசியப்படுத்துகின்றன. ‘செவந்து போச்சு நெஞ்சு’ ‘பூமி.. பூமி’ ஆகிய பாடல்களின் இசையை அடிக்கடி உபயோகப்படுத்தியும் பரபரப்பான காட்சிகளுக்கு அதிரடியான பின்னணி இசையை தந்தும் அசத்தியிருக்கிறார் ரஹ்மான். தரமான திரையரங்கத்தில்தான் இந்த அனுபவத்தை உணர முடியும். 

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் ஆகிய நுட்ப விஷயங்கள் ‘மணியான’ தரத்தில் அமைந்திருக்கின்றன. கடற்கரையோரம் அமைந்திருக்கும்  சேனாபதியின் வீடு ரசிக்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

**

முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை சுவாரசியமாக அமைந்திருந்தாலும் இந்தத் திரைப்படத்தில் பலவீனமான அம்சங்களும் உள்ளன. படத்தின் மையம் வாரிசு மோதல் என்பதால் அது சார்ந்த வன்முறைக் காட்சிகளைத் தவிர்க்க முடியாது. ஆனால் ‘நீங்க நல்லவரா, கெட்டவரா?’ என்பது போல் மணிரத்னத்தின் படத்தில் ஒலிக்கும் அறத்தின் குரல் இதில் ஒலிக்கவேயில்லை. வேலு நாயக்கரின் அராஜகத்தை எதிர்த்து அவருடைய மகள் ஆவேசமாக குரல் தருவதைப் போன்ற சித்தரிப்பு இதில் இல்லை. ‘கடவுள் கிட்ட ஒப்படைச்சிருக்கேன்” என்பதோடு சேனாபதியின் மனைவி தனது பிரார்த்தனையோடு நின்று விடுகிறார். தன் கணவரின் அனைத்து பலவீனங்களை அறிந்தும் ‘சத்தியவான் சாவித்திரி’யாக அவருடன் துணை நிற்கிறார் ஜோதிகா. அருண் விஜய்யின் மனைவியால் மட்டுமே சிறிய எதிர்ப்பு முனகலை செய்யமுடிகிறது. 

மணி ரத்னத்தின் கடந்த திரைப்படங்களுள் ஒன்றான ‘கடல்’ நல்லதிற்கும் தீயதிற்கும் இடையிலான மோதலை உருவகமாகக் கொண்டது. அவ்வாறான தடயம் எதுவும் இதில் இல்லை. ‘எல்லாமே பூஜ்யம்’ என்ற வசனத்திலும் ‘ஆயுதம் ஏந்தியவன் அதனாலேயே சாவான்’ என்கிற இறுதிக் காட்சியிலும்தான் இதை உணர முடிகிறது. 

சர்வதேச அளவில் பரந்திருக்கும் அரவிந்த்சாமியின் சாம்ராஜ்யம் குறைந்த நாட்களிலேயே சரியும் அதிசயம், மத்திய அமைச்சர் வரை தொடர்பு வைத்திருக்கும் அரவிந்த்சாமி, தனது உயிர் நண்பன் என்கிற காரணத்திற்காக ஒரு சாதாரண காவல் அதிகாரியை அதிகமாக நம்புவது, ஆயுததாரிகளை நிராயுதபாணியாக எதிர்கொள்வது போன்றவை தர்க்கத்திற்கு அப்பால் உள்ளன. 

மூத்தவனுக்கு எதிராகக் கொலைவெறியுடன் நிற்கும் இளையவர்களிடம் தானே முன்வந்து தாய் தூது போவது போன்ற காட்சிகளில் காவியத்தன்மை தெரிகிறது. படத்தின் தலைப்பிற்கான காரணம் இறுதிக்காட்சியில் துலங்குவது சுவாரசியம். 

தனது சமீபத்திய காதல் திரைப்படங்களிலிருந்தும் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகியும், புத்துணர்வான நிறத்தில் மணிரத்னம் உருவாக்கியிருக்கும் இந்த ‘கேங்க்ஸ்டர்’ திரைப்படத்தை எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சென்றால் நிச்சயம் ரசிக்க முடியும். தனது அரியாசனத்தின் இருக்கையில் தான் மட்டுமே அமர முடியும் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் மணி ரத்னம். வாரிசுப் போட்டிகள் நிகழ முடியாத இடம் அது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com