அஜித்தின் நேர்கொண்ட பார்வை: திரை விமரிசனம்

படத்தின் ஆதாரமான செய்தியை பார்வையாளர்களுக்கு வலுவாக கடத்தியிருப்பதில் இயக்குநர் வினோத் வெற்றி பெறுகிறார்...
அஜித்தின் நேர்கொண்ட பார்வை: திரை விமரிசனம்

பெண்களின் மீதான பாலியல் துன்புறுத்தல்களும் வன்முறைகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் அவர்களின் ஆதாரமான உரிமைகளையும் சுயமரியாதையையும் வலியுறுத்தும் திரைப்படம். 2016-ல் வெளியான பிங்க் என்கிற ஹிந்தித் திரைப்படத்தின் மறுஆக்கம்.

தமிழில் சில வணிக அம்சங்களை இணைத்திருந்தாலும் மூலத் திரைப்படத்தின் மையத்தைச் சிதைக்காமல் கடத்தியிருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். (சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கியவர்).

*

ஓர் இசைக்கச்சேரியோடு படம் துவங்குகிறது. நடனமாடி விட்டுத் திரும்பும் மீரா கிருஷ்ணனையும் (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) அவரது தோழிகளையும் சில ஆண் நண்பர்கள் விருந்திற்கு அழைக்கிறார்கள். பிறகு, ஆண்களில் ஒருவனுக்குத் தலையில் ரத்தம் வழிந்து நண்பர்களால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சியும், பெண்கள் பதற்றத்துடனும் அச்சத்துடனும் வீடு திரும்பும் காட்சியும் அடுத்தடுத்து காட்டப்படுகின்றன. 

நட்பு காரணமாக ஆண்கள் அழைத்த விருந்திற்குச் சென்ற பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். அதில் ஒருவனை மீரா கிருஷ்ணன் பாட்டிலால் தலையில் தாக்கி விட்டுச் சென்று விடுகிறார். அடிபட்டவன் செல்வாக்குள்ள பின்னணியைச் சேர்ந்தவன். எனவே பெண்கள் பல்வேறு மிரட்டல்களால் அச்சுறுத்தப்படுகிறார்கள். இவர்களின் புகாரைக் காவல்துறை அலட்சியமாக கையாள்கிறது.

கொலை முயற்சி மற்றும் பாலியல் குற்றத்திற்காக மீரா கிருஷ்ணன் கைது செய்யப்படுகிறார். சாதாரணப் பின்னணியைக் கொண்ட அந்தப் பெண்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் குடியிருக்கும் அதே பகுதியில் உள்ளவர் பரத் சுப்பிரமணியம் (அஜித் குமார்). சில தனிப்பட்ட காரணங்களால் வழக்கறிஞர் பணியிலிருந்து நெடுங்காலமாக விலகியிருக்கும் இவர், இந்த வழக்கை எடுத்துக் கொள்கிறார்.

சாட்சியங்களும் சூழல்களும் பெண்களுக்கு எதிராக மிக வலுவாக இருக்கும் நிலையில் அந்தப் பெண்களுக்கு என்னவானது, வழக்கறிஞர் அவர்களை மீட்டாரா என்பதெல்லாம் பரபரப்பான நீதிமன்றக் காட்சிகளின் வழியாகப் பதிவாகியுள்ளன.

*

ஒரு முன்னணி நாயகனுக்குடைய அத்தனை வணிக அம்சங்களையும் தன்னுடைய படங்களில் வைத்திருந்தாலும் ‘பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டியவர்கள்’ என்கிற செய்தியை தொடர்ந்து சொல்வதில் ஆர்வமுள்ளவர் அஜித். ‘பெண்கள் இப்போதுதான் படிக்க வெளியே வருகிறார்கள். அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்’ என்கிற செய்தி ‘வேதாளம்’ திரைப்படத்தின் இறுதியில் சொல்லப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் அந்தச் செய்தி பிரதானமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு ‘மாஸ்’ ஹீரோவிற்கான காட்சியோ, களமோ இல்லாவிட்டாலும் இந்தத் திரைப்படம் சொல்லும் ஆதாரமான செய்திக்காகவே இதில் நடிக்கத் துணிந்த அஜித் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர். அவர் நடித்திருப்பதால்தான் இந்தத் திரைப்படம் பரவலான கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இதன் மையம், இளைய தலைமுறைக்குக் குறிப்பாக இளைஞர்களுக்கு உணர்த்தப்பட வேண்டியது மிக அவசியம்.

ஒரு நடுத்தரவயது வழக்கறிஞர் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார் அஜித். பொதுநல வழக்குகளைக் கையாண்டு கொண்டிருந்த இவர், அந்தக் காரணத்தினாலேயே தன் கர்ப்பிணி மனைவியை இழக்க நேர்கிறது. அது சார்ந்த குற்றவுணர்வினால் மன அழுத்தத்திற்கு ஆளாகி, மருந்துகளின் பிடியில் இருந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்கிற ஆவேசத்தோடு அப்பாவிப் பெண்களுக்கு ஆதரவாக செயல்படும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

மூன்று பெண்களில் ஒருவராக ‘பிக்பாஸ்’ புகழ் அபிராமி சிறப்பாக நடித்துள்ளார். மூலத் திரைப்படத்தில் நடித்த ஆண்ட்ரியா இதிலும் தன் அபாரமான பங்களிப்பைத் தந்துள்ளார். அப்பாவித்தனமான முகத்தோடு பதற்றத்தையும் கண்ணீரையும் வெளிப்படுத்துவோடு, நீதிமன்றத்தில் சொற்களால் அவமானப்படுத்தப்படும்போது குறுக்கீடு செய்வதில் பளிச்சிடுகிறார்.

நீதிமன்றத்தில் படபடவென பொழிந்து தள்ளும் அரசு வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே. சற்று மிகையாக நடித்தது போல் தெரிந்தாலும் சம்பந்தப்பட்ட காட்சிகள் சுவாரசியமாக அமைவதற்கு உறுதுணையாக அமைந்துள்ளார். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டாலும் அஜித்தின் வாதத்திறமையைக் கண்டு ‘உங்களின் நல்ல நோக்கங்கள் நிறைவேற என் வாழ்த்துகள்’ என்கிற தன் பாணியில் கடைசியில் கைகொடுத்து விடைபெறுகிறார் பாண்டே.

அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் பிளாஷ்பேக்கில் வந்து போகிறார். ஆதிக் ரவிச்சந்திரன், ஜூனியர் பாலையா, டெல்லி கணேஷ் போன்ற துணை நடிகர்களை ஆங்காங்கே காண முடிகிறது.

அஜித்தின் சாகசக் காட்சிகள், நீதிமன்றக் காட்சிகள், இசை நிகழ்ச்சி போன்றவற்றில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் உழைப்பைக் காண முடிகிறது. குறிப்பாக நீதிமன்றக்காட்சிகளின் பின்னணி நம்பகத்தன்மையோடு இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அவசியமான அளவிற்கான பரபரப்போடு இருந்தது. பாடல்கள் அத்தனை கவரவில்லை. உமாதேவி எழுதிய ‘வானில் இருள்’ தனித்துக் கவனிக்க வைக்கிறது.

அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து விடக்கூடாது என்பதற்காக சில சாகசக் காட்சிகளும் உறுத்தாத பஞ்ச் வசனங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதற்காக அஜித் பார்த்த மாத்திரத்திலேயே மருத்துவமனை ஊழியர் மிரண்டு ஓடுவதெல்லாம் மிகை. படம் சொல்ல வரும் செய்திக்காக இது போன்ற திணிப்புகளை மன்னிக்கலாம்.

ஹிந்தி வடிவத்தின் கச்சிதமான திரைக்கதை, நம்பகத்தன்மை போன்றவற்றோடு ஒப்பிடும் போது தமிழ் வடிவத்தில் ஆங்காங்கே அலைபாய்கிற விபத்து நிகழ்ந்திருந்தாலும் படத்தின் ஆதாரமான செய்தியைப் பார்வையாளர்களுக்கு வலுவாகக் கடத்தியிருப்பதில் இயக்குநர் வினோத் வெற்றி பெறுகிறார்.

பொதுவாக இம்மாதிரியான கோர்ட் டிராமாக்களில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒன்றும் தெரியாத அப்பாவியாக, அபலைப் பெண்ணாக சித்தரித்திருப்பார்கள். அப்போதுதான் பார்வையாளர்களின் முழு அனுதாபம் அந்தப் பாத்திரத்திற்குக் கிடைக்கும். வில்லன்களின் கீழ்மைகளையும் மிகைப்படுத்திக் காண்பிக்க முடியும்.

ஆனால் இந்தத் திரைப்படத்தில் வரும் பெண்கள், குடிப்பவர்களாக, பார்ட்டிக்குச் செல்பவர்களாக, திருமணம் ஆனவருடன் தொடர்பு வைத்திருப்பவராகக் காட்டப்படுகிறார்கள். எனில் பொதுப்புத்தியுள்ள பார்வையாளர்களுக்கு என்ன தோன்றும்? ‘நைட் பார்ட்டிக்குப் போய் குடிக்கற பொண்ணு மேல ஒருத்தன் கைபோடத்தான் செய்வான். அதுல என்ன தப்பு, அவங்க ஏன் அந்த டைம்ல அங்க போகணும்?!’ என்பது போன்ற கேள்விகள்தான் எழும். (திரையரங்கில் சில பார்வையாளர்களின் எதிர்வினைகளும் நமட்டுச்சிரிப்புகளும் இப்படித்தான் அமைந்திருந்தன). இந்தத் திரைப்படம் தாண்டும் மிகப் பெரிய சவாலே இதுதான். ஆண்களைப் போலவே மது அருந்தவும், விருந்துகளுக்குச் செல்லவும், ஆண் நண்பர்களுடன் பழகவும் பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. ஆண்களுக்கு இது சார்ந்த சுதந்திரம் சமூகத்தில் தன்னிச்சையாக அமைந்திருக்கும் போது பெண்களுக்கு மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது, தவறாகப் பார்க்கப்டுகிறது, என்பன போன்ற பல கேள்விகளை இத்திரைப்படம் முன்வைக்கிறது.

தன்னுடன் ஓர் ஆண் உறவு கொள்வதற்கான உரிமையை  பெண்கள்தான் வழங்க வேண்டும். பரஸ்பர விருப்பத்தோடுதான் அது நிகழ வேண்டும் ஆணாதிக்க மனோபாவத்தோடும் உடல் வலிமையோடும் தானாக எடுத்துக் கொள்ளும் உரிமை ஆணுக்குக் கிடையவே கிடையாது. அது பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் சரி, மனைவியாகவே இருந்தாலும் சரி, அவர் ‘விருப்பமில்லை’ என்று சொன்னால் ஆண் விலகுவதுதான் முறையானது. கம்பியின் மேல் நடக்கும் வித்தை போன்று இந்தச் செய்தியை மிகக் கவனமாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறது இந்தத் திரைப்படம்.

பெண்களின் இயல்பான சமிக்ஞைகளைக் கூடப் பாலியல் அழைப்பாகவும் காதலாகவும் கருதிக் கொண்டு பின்தொடர்ந்து துன்புறுத்தல்களைத் தரும் ஆண்களுக்கு மிகச் சரியான செய்தி இந்தத் திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த அஜித்துக்கும் இயக்குநர் வினோத்திற்கும் பாராட்டு. ‘இந்தப் பொண்ணுங்க சைக்காலஜி இருக்கே.. அவங்க வேணாம்-னு சொன்னா.. வேணும்-னுதான் அர்த்தம்’ என்பது போல பல அபத்தமான கண்டுபிடிப்புகளும் முன்தீர்மானங்களும் ஆண்களிடம் இருக்கின்றன. ‘அப்படியெல்லாம் அல்ல, ஒரு பெண் NO என்று சொன்னால் அதற்கு NO என்று மட்டுமே பொருள்.' என்கிற செய்தியை அழுத்தம் திருத்தமாக நெற்றியில் அடித்தாற் போல் செல்கிறது இந்தத் திரைப்படம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com