ராமின் ‘பேரன்பு’ - திரை விமரிசனம்

இந்த உலகம் சராசரியான மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, சில பிரத்யேகமான சிக்கல்களை உடைய மனிதர்களுக்குமானது...
ராமின் ‘பேரன்பு’ - திரை விமரிசனம்

தமிழ் சினிமாவை ஓரடி முன்னே நகர்த்திச் செல்லும் பிடிவாதமும் நுண்ணுணர்வும் உள்ள அரிதான இயக்குநர்கள் எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்கள். சமகாலத்தில் இயக்குநர் ராமை அதில் பிரதானமாகச் சொல்லலாம். அவருடைய சமீபத்திய திரைப்படமான ‘பேரன்பு’ இதைக் கூடுதலாக நிரூபிக்கிறது.

மானுட வாழ்க்கை என்பது அன்பு என்கிற அடிப்படையான உணர்வில் பயணிக்கப்பட வேண்டியது. அதில் பேரன்பைக் கொட்டுவதற்கு சில அரிதான மனிதர்கள் இருப்பார்கள். அப்படியொரு மனிதனையும், மூளை முடக்குவாத குறைபாடுள்ள அவருடைய மகளையும் பற்றிய திரைப்படம் இது.

சராசரி மனிதர்கள் அதிகம் அறிந்திராத ஒரு சிக்கலான உலகத்தை உணர்வுபூர்வமாகவும், இயல்பான நெகிழ்ச்சியுடனும், சமயங்களில் கருணையற்ற இரக்கத்துடனும் திறந்து காட்டுகிறார் ராம். இதனூடே கண்திறக்கும் வெவ்வேறு சிறு சிறு உலகங்கள் இந்தப் பயணத்தை அபாரமான அனுபவமாக்கியிருக்கின்றன.

ராமின் திரைப்படங்களின் மீது ஒரு பொதுவான குற்றச்சாட்டு உண்டு. உலகமயமாக்கம், மொழி அரசியல், பெண்ணியம் என்று பல அரசியல்களை ஒரே திரைக்கதையில் கலந்து கொட்டுகிறார் என்பதுதான் அது. நம்முடைய தினசரி வாழ்க்கை என்பது நாம் அறிந்திராத, கற்பனை செய்தும் பார்த்திராத பல்வேறு அரசியல்களால் இயக்கப்படுவதுதான் என்கிற நிதர்சனத்தை அறிந்தவர்களால் அந்தக் கலவையின் அவசியத்தை புரிந்து கொள்ள முடியும். ஆனால் அப்படியான அரசியல் பிரக்ஞை இல்லாமல் சலிப்படைபவர்களின் புகார்தான் மேலே குறிப்பிடப்பட்டது. ஆனால், ‘பேரன்பு’ திரைப்படத்தில் அப்படியான புகார் கூட எழவிடாமல் ஓர் அமைதியான நதி போல அழகாகப் பயணிக்கும் அலைபாயாத திரைக்கதையை உருவாக்கியுள்ளார் ராம்.

இயற்கை என்பது அழகானது, இயற்கை என்பது ஆபத்தானது என்பன போன்ற தலைப்புகளில் பல அத்தியாயங்களாக விரிகிறது இந்த திரைப்படம். ‘என் வாழ்க்கையைப் பாருங்கள், நீங்கள் எத்தனை ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பதை உணர முடியும். அதற்காகத்தான் இந்தக் கதையை சொல்கிறேன்’ என்று முன்னுரையில் அமுதவன் (மம்முட்டி) சொல்வது எத்தனை உண்மையானது என்பதைப் படம் முழுவதும் முகத்தில் அறையும் காட்சிகள் நிரூபித்துக் கொண்டேயிருக்கின்றன.

*

மலையால் சூழப்பட்ட பிரதேசம் அது. எவருடனோ கோபித்துக்கொண்டு நிற்பது போல தன்னந்தனிமையாய் ஒரு வீடு. நடுத்தர வயது மனிதர் ஒருவரும் (மம்மூட்டி), பதின்ம வயதில் உள்ள, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட அவருடைய ‘பாப்பா’வும் (சாதனா) மட்டுமே அந்த வீட்டின் உறுப்பினர்கள். ஏன் அவர்கள் இத்தனை தனிமையில் வசிக்க வேண்டும்? சுற்றியுள்ள சமூகம்தான் அவர்களை அள்ளி வந்து இங்குப் போட்டிருக்கிறது என்பது மெல்ல மெல்ல துலங்குகிறது.  

மம்மூட்டியின் வாய்ஸ் ஓவர் மற்றும் துண்டு துண்டான காட்சிகள் வழியாக முன்கதையை சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுகிறார் ராம். அந்தத் துண்டு காட்சிகள் கூட தேவையில்லை. சமகாலப் பார்வையாளர்களை இன்னமும் சற்று அதிகமாகவே இயக்குநர் நம்பலாம்.

‘இப்படியொரு பெண் பிறந்தாளே!’ என்கிற காரணத்திற்காகவே நீண்ட காலம் விலகியிருந்த தந்தைக்கு, மகளின் பிரியத்தையும் அங்கீகாரத்தையும் இப்போது அடைய வேண்டிய கட்டாயம். சுற்றியுள்ள இயற்கையும் அதன் மெளனமும் அவருக்குப் பல விஷயங்களைக் கற்றுத்தருகிறது. மெல்ல மகளின் அன்பைப் பெறுகிறார். அதற்குள் வேறு சில சிக்கல்கள் தோன்றுகின்றன.

தாய் பூனை தன் குட்டியைக் கவனமாக கவ்விக்கொண்டு செல்வதைப் போல தன் மகளுடன் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்கிறார் மம்மூட்டி. அகச்சிக்கல்களும் புறச்சிக்கல்களும் எல்லாப்பக்கமும் நின்று தொடர்ந்து அழுத்தும்  உணர்ச்சிகரமான உச்சத்தில்  ஒரு விபரீதமான முடிவை எடுக்கிறார். பிறகு, உணர்வுபூர்வமான மற்றும் நேர்மறையான காட்சியுடன் படம் நிறைவடைகிறது. 

எல்லோரையும் போல சராசரித்தனங்களைக் கொண்ட மம்மூட்டி, எப்படி உலகையே நேசிக்கும் பேரன்பானவனாக உருமாறுகிறான் என்பதைக் கவித்துவமான தருணங்களால் விவரித்துச் சொல்கிறது, ‘பேரன்பு’.

*

‘அமுதவன்’ என்கிற பாத்திரத்திற்கு மம்மூட்டியை விட்டால் வேறு தேர்வு இல்லை என்று சொல்வது தேய்வழக்குப் பாராட்டாக முடிந்துவிடும். இயல்பாக நடிக்கக்கூடிய எந்தவொரு நல்ல நடிகரும் எதிர்கொள்ளக்கூடிய பாத்திரம்தான். ஆனால் பிரச்னை என்னவெனில், மம்மூட்டியின் அசாதாரணமான நடிப்பைப் பார்த்த பிறகு வேறு எவரையும் அதில் யோசிக்க முடிவதில்லை. ‘என்னடே’ என்பது போல் மம்மூட்டியின் முகத்தில் எப்போதுமே மெல்லிய, நிரந்தரமான சலிப்பு இருக்கும். அந்தத் தோரணை இந்தப் பாத்திரத்திற்கு வெகுவாக உதவியிருக்கிறது.

தன் மகளை நீண்ட காலம் பிரிந்திருந்தோமே என்கிற குற்றவுணர்வில் அவளுடைய அன்பை அடையும் தேர்வில் மெல்ல மெல்ல வெற்றி பெற்றாலும், பாலினப்பாகுபாடு ஒரு விநோதமான சுவராக வந்து குறுக்கே நிற்கிறது. ஒற்றை பெற்றோர் (Single Parent) எதிர்கொள்ளும் பல நடைமுறைச் சிக்கல்களை அவர் கடக்க வேண்டியிருக்கிறது.

அதிலும் மூளைமுடக்குவாதம் என்னும் பிரச்னையுடைய மகளை, ஒரு தகப்பனாக அவர் பராமரிப்பதில் பிரத்யேகமான சிக்கல்கள் வருகின்றன. படுக்கையறையில் இருக்கும் ரத்தக்கறையைக் கண்டு, தன் மகள் வயதுக்கு வந்து விட்டதை அறியும் மம்முட்டி ‘ஐயோ.. இப்போது என்ன செய்வேன்!’ என்பதான வேதனை முகத்தில் தெரிய மறுகுவதாகட்டும், தொலைக்காட்சியில் தெரியும் பிரபல நடிகரின் பிம்பத்தின் மீது காதலுணர்ச்சியுடன் மகள் முத்தமிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு மறைவாக நின்று கலங்குவதாகட்டும், இப்படிப் பல காட்சிகளில் தனது இயல்பான நடிப்பின் மூலம் அந்தப் பாத்திரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறார். ஒரு பெண்ணிடம் அறைபடுவது முதல், பல காட்சிகளில் முன்னணி நடிகர் என்கிற பந்தா துளிகூட இல்லாமல் கீழிறிங்கி நடித்திருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. தன் மகளை நெருங்கும் எந்தவொரு ஆணையும் சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் ஒரு தகப்பனின் இயல்பான சித்திரத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார்.

வாய், கை, மற்றும் கால்களை விநோதமான திசைகளில் கோணிக்கொண்டுப் பிதற்றும் மொழியில் எதிர்வினையாற்றுபவராகப் படம் முழுவதும் வரும் சாதனா, பிரத்தியேகமாகப் பாராட்டப்பட வேண்டியவர். ‘Life feels good’ என்கிற போலந்து நாட்டுத் திரைப்படம் ஒன்று 2013-ல் வெளிவந்தது. பெருமூளை வாதத்தினால் (Cerebral palsy) பாதிக்கப்பட்டிருக்கும் ஓர் இளைஞனின் தோரணைகளை Dawid Ogrodnik என்கிற நடிகர் படம் முழுவதும் மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். படத்தின் நிறைவுக்காட்சியில் அவர் இயல்பாகத் தோன்றுவதைப் பார்த்த பிறகு ‘இவரா.. அப்படி நடித்தார்?!’ என்கிற பிரமிப்பும் ஆச்சரியமும் தோன்றும். அதற்கு நிகரான நடிப்பை சாதனா தந்துள்ளார். இவரைப் பற்றிய பின்னணி விவரங்கள் அறியாதவர்கள், ‘உண்மையாகவே குறைபாடுள்ள பெண்ணை நடிக்க வைத்துள்ளார்கள் போல’ என்று எண்ணக்கூடும். அத்தனை தேர்ச்சியான, விருதுகளை வெல்லக்கூடிய நடிப்பு.

நடிகை அஞ்சலி சில காட்சிகளில் வருகிறார். துரோகம் செய்த குற்றவுணர்விலும், அதை மெளனத்துடன் கடக்கும் மம்மூட்டியின் பெருந்தன்மையை தாங்க முடியாமலும் ‘நாங்க எதுக்காக அப்படி செஞ்சோம்-னு கேட்டுட்டாவது போங்கய்யா’ என்று கண்ணீர் மல்கும் காட்சியும், அதற்கு மம்மூட்டி அளிக்கும் அசாதாரணமான பதிலும் அற்புதமான காட்சியாகப் பதிவாகியுள்ளது.

படத்தில் இன்னொரு அஞ்சலியும் இருக்கிறார். ‘மீரா’ என்கிற திருநங்கை பாத்திரத்தில் நடித்துள்ள அஞ்சலி அமீர் உண்மையாகவே மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்தவர்தான். மலையாள ரியாலிட்டி ஷோக்களில் தோன்றி தொலைக்காட்சிப் புகழை அடைந்தவரை, மம்மூட்டியே தேடி அழைத்து நடிக்க வைத்திருக்கிறார். ‘கார் கண்ணாடியை திறந்து விடுங்க’ என்று வெளிக்காற்றைப் புத்துணர்ச்சியுடன் ரசித்துக் கொண்டு வரும் காட்சி முதல், மம்மூட்டி அழைத்ததும் கேரளப் பாரம்பரிய உடையோடும் கண்களில் பொங்கி வழியும் கனவுகளோடும் வருவது வரை பல காட்சிகளில் அற்புதமாக நடித்துள்ளார்.

‘உங்க பையனை ஹோம்ல அடிக்கறாங்க’ என்று மம்மூட்டி எச்சரிக்கை தரும் போது, ‘அடிச்சா அடிச்சிட்டுப் போறாங்க சார்.. வெளில அவன் பல பேர் கிட்ட உதை வாங்கறத விட இது மேல்’ என்று கையாலாகாத விரக்தியில் சொல்லும் ‘பூ’ ராமு, அந்தச் சிறிய காட்சியிலேயே நம்மைக் கலங்கடித்து விடுகிறார்.

விடுதிக்காப்பாளராக சண்முகராஜா, ஆர்வக்கோளாறு ஆசாமியாக லிவிங்ஸ்டன், சிறப்புக் குழந்தைகளுக்கான நடைமுறைச் சாத்தியங்களை வழிகாட்டும் மருத்துவராக சமுத்திரக்கனி என்று பல சிறிய பாத்திரங்கள் தங்களின் இயல்பான பங்களிப்பினால் இந்தத் திரைப்படத்தை அற்புதமாக நிறைத்திருக்கிறார்கள்.

*

இந்த திரைப்படத்தின் பெரும்பான்மையான பலம் என்று ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரைக் குறிப்பிடலாம். மலைப்பிரதேசத்தில் இயற்கையின் கவித்துவமான மெளனத்தையும் அதன் நுண்ணிய அசைவுகளையும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கும் கேமரா, நகரத்திற்கு இடம் பெயர்ந்தவுடன் அதன் பரபரப்பையும் நள்ளிரவின் தன்மைகளையும் மிக இயல்பாகக் கைப்பற்றியிருக்கிறது. இன்னொரு பலம், யுவன் சங்கர் ராஜா. சில இடங்களில் அநாவசியமான குறுக்கீடை ஏற்படுத்துகிறதோ என்கிற நெருடலை ஏற்படுத்தினாலும், பல இடங்களில் பின்னணி இசை காட்சிகளின் தன்மைக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. இது போன்ற திரைப்படங்களுக்குப் பாடல்கள் தேவையில்லை என்று தோன்றுகிறது.

சிறப்புக் குழந்தைகளை துவக்க நிலையிலேயே கண்டறிவது முதல் அவர்களுக்கான பிரத்தியேக வசதிகள், பள்ளிகள் போன்றவை மேலை நாடுகளில் உள்ளன. ஆனால் இந்தியா போன்ற தேசங்களில் இவை சார்ந்த விழிப்புணர்வு குறைவு. ‘இந்த உலகம் சராசரியான மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, சில பிரத்யேகமான சிக்கல்களை உடைய மனிதர்களுக்குமானது, அவர்களும் இயற்கையின் ஒரு பகுதியே’ என்கிற செய்தியைக் கவித்துவமான காட்சிகளால் உணரச் செய்கிறது இந்தத் திரைப்படம்.

‘பேரன்பு’ – காண்பதற்காக அல்ல, உணரப்பட வேண்டியதொரு படைப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com