சுடச்சுட

  

  ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’ - திரை விமரிசனம்

  By சுரேஷ் கண்ணன்  |   Published on : 02nd February 2019 10:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sarvam_thaalamayam_new9_(5)

   

  விலங்குகளின் தோலின் மூலம் மிருதங்கத்தை உருவாக்கும் சமூகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், மிருதங்க வித்வானாக உயர ஆசைப்படுவதைப் பற்றிய திரைப்படம் இது. கர்நாடக இசைத் துறை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆக்கிரமிப்பில் இருப்பதை, அந்த இசை எளிதில் அணுகப்படாத புனிதப் பொருளாக ஆக்கி வைக்கப்பட்டிருக்கும் அரசியலை, ஆவேசமான குரலில் அல்லாமல் இயல்பான உரையாடலில் முன்வைக்கும் இந்தப் படம், திறமையும் விடாமுயற்சியும் கொண்ட எவனொருவனும், இந்தக் கதவுகளை எப்படி உதைத்து திறக்க முடியும் என்கிற எதிர் அரசியலையும் இயல்பாகப் பேசுகிறது.

  *

  ஜி.வி.பிரகாஷ் (பீட்டர் ஜான்சன்) விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த இளைஞன். அவனுடைய தந்தையான குமரவேல் (ஜான்சன்) மிருதங்க வாத்தியத்தைத் தயாரிப்பவர். கல்வியில் நாட்டமில்லாமலும் எவ்வித இலக்கும் இல்லாமலும் விஜய் ரசிகனாக சுற்றிக் கொண்டிருக்கும் பீட்டர், ஒரு தற்செயலான கணத்தில் மிருதங்க வித்வானான நெடுமுடி வேணுவின் (வேம்பு ஐயர்) அசாதாரண திறமையைக் கண்டு வியந்து போகிறான். அன்றிலிருந்து அவனுடைய வாழ்க்கை திசை மாறுகிறது. அவரைப் போன்றே தானும் ஒரு வித்வானாகி, கர்நாடக இசைக் கச்சேரியில் வாசிக்கவேண்டும் என்கிற லட்சியத்தை மேற்கொள்கிறான். ஆனால் அது அத்தனை எளிதான பாதையாக அமையவில்லை.

  சாதி என்னும் அரசியல், பிரம்மாண்டமான சுவராக குறுக்கே வந்து நிற்கிறது. கூடவே வர்க்க அரசியலும். எனவே அவன் பல்வேறுவிதமாக அலைக்கழிக்கப்படுகிறான். என்றாலும் விடாமுயற்சியினாலும் குரு பக்தியினாலும் தன் இலக்கை எவ்வாறு அவன் அடைகிறான் என்பதை உணர்ச்சிகரமான காட்சிகளின் மூலம் விவரிக்கிறது இந்தத் திரைப்படம்.

  சேரிப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் பாத்திரத்தில் வெகு அநாயசமாகப் பொருந்திப் போகிறார் ஜி.வி.பிரகாஷ். ‘நாச்சியார்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிக்கக் கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். ‘நான் உலகத்திலேயே நம்பர் ஒன் மிருதங்க வித்வானாக வரணும் சார்’ என்று அப்பாவித்தனமாக முறையிடுவதில் துவங்கி ‘உன்னால வேணா வாசிக்க முடியாம போகலாம். நான் ஜெயிச்சுக்காட்டுவேன்’ என்று தந்தையிடம் ஆத்திரத்துடன் எகிறுவது வரை பல இடங்களில் தன் இயல்பான நடிப்பின் மூலம் கவர்கிறார்.

  நெடும் அனுபவமும் அசாதாரண திறமையும் கொண்ட ஒரு நடிகரால், ஒரு திரைப்படத்தை எத்தனை உயரத்திற்குக் கொண்டு செல்லமுடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் நெடுமுடி வேணு. உயர்வு மனப்பான்மையும் பாரம்பரிய இசைப் பாணியின் மீது அசைக்க முடியாத பக்தியும் கொண்ட ஒரு மிருதங்க வித்வானைத் தன் அற்புதமான உடல்மொழியின் மூலம் கச்சிதமாக வெளிப்படுத்திவிடுகிறார். மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஒரு காட்சியில், ஒரு கணத்தில் தன் தாளத்தைத் தானே ரசித்து உள்ளே ஆழ்ந்து போய், பின்பு விழித்துக்கொள்ளும் அந்த ஒரு காட்சி போதும், வேணுவின் அசாத்தியமான நடிப்பிற்கு உதாரணம் சொல்ல. சாதியப் பிடிப்பு கொண்டிருப்பவரைப் போல ஆரம்பத்தில் தோன்றினாலும், கற்றுக்கொள்ளும் தீவிரமான ஆர்வமுள்ள இளைஞனை இவர் அரவணைத்துக்கொள்ளும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

  ‘நம்ம மாதிரி ஆளுங்கல்லாம் இந்தச் சின்ன வாழ்க்கையை அப்படியே ரசிச்சு வாழ்ந்துட்டு போயிடணும். மேல போறதுக்கு எல்லாம் ஆசைப்படக்கூடாது’ என்று எளிய சமூகத்தைச் சார்ந்தவர்களின் அப்பாவிப் பிரதிநிதியாகத் தன் பங்களிப்பைச் சிறப்பாகத் தந்திருக்கிறார் குமரவேல்.

  ஜி.வி.பிரகாஷின் காதலியாக அபர்ணா பாலமுரளி. (‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்னும் மலையாளப் படத்தில் தன் இயல்பான தோற்றத்திலும் நடிப்பிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர்). இவருக்கு அதிகக் காட்சிகளில் தோன்ற வாய்ப்பில்லாவிட்டாலும் ‘நீ ஏன் குருவைத் தேடறே.. இயற்கையிலேயே எல்லாத் தாளமும் இருக்கு” என்று தன்னையே ஒப்படைத்து ஜி.வி.பிரகாஷை ஊக்கப்படுத்தும் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.

  ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வினீத். வேம்பு ஐயரின் பிரதான சிஷ்யராக வரும் இவர், ஜி.வி.பிரகாஷின் மீது பொறாமை கொள்வதும் குருவை எதிர்த்து அரசியல் செய்வதும் என எதிர்மறையான பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவரது தங்கையாக நடித்திருக்கும் திவ்யதர்ஷிணியின் (டிடி) மூலம் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் உள்ள வணிகத் தந்திரங்கள் அம்பலப்படுத்தப்படுகின்றன. சிக்கில் குருசரண், உன்னி கிருஷ்ணன், சீனிவாஸ், கார்த்திக் என்று பல இசைப் பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் தோன்றி காட்சிகளின் நம்பகத்தன்மைக்கு உறுதுணையாக நின்றிருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷின் நண்பராக நடித்திருக்கும் பாடகர் சுமேஷ் நாராயணனும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷின் ஆர்வத்தைக் கணவரிடம் எடுத்துச் சொல்லி அவருடைய மனத்தை மாற்றும் காட்சியில் சாந்தா தனஞ்செயன் அற்புதமாக நடித்துள்ளார்.

  இசையை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் பெரிய பலம் ஏ.ஆர்.ரஹ்மான். ரசிகர் மன்ற இளைஞர்கள் ஆடும் குத்துப்பாடலாக இருந்தாலும் சரி, ‘மாயா.. மாயா’ என்கிற மெல்லிசைப் பாடலாக இருந்தாலும் சரி, தனது வசீகரமான இசையின் மூலம் கவர்ந்து விடுகிறார். இந்தியாவிலுள்ள அனைத்து கலாசார இசைகளையும் ஒரு பாடலில் கொண்டு வந்து கேரளத்தின் செண்டை மேளத்துடன் நிறைவு செய்யும் ‘சர்வம் தாளமயம்’ பாடல் ஓர் அபாரமான அனுபவத்தைத் தருகிறது. ‘எப்போ வரும் எங்க காலம்’ என்ற பாடலில் எளிய சமூகத்தின் ஏக்கம் அழுத்தமாக வெளிப்படுகிறது. ரவி யாதவின் நேர்த்தியான ஒளிப்பதிவும் ஆண்டனியின் அற்புதமான எடிட்டிங்கும் படத்திற்கு மேலதிக சுவையைத் தந்திருக்கின்றன.

  ‘மின்சாரக் கனவு’, ‘கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கும் ராஜீவ் மேனன், ஏறத்தாழ பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராக மறுபடியும் திரும்பியிருக்கிறார். ஒரு லட்சியவாத இளைஞனுக்குச் சாதியோ, வர்க்கமோ என எதுவும் தடையாக இருக்கமுடியாது, தனது தொடர்ந்த உழைப்பின் மூலம் எந்த இலக்கையும் அவன் எட்ட முடியும் என்கிற செய்தியை உறுத்தாத சாதிய அரசியலின் பின்னணியில் சொல்லியிருப்பதின் மூலம் ஒரு முக்கியமான ஆக்கத்தைத் தந்திருக்கிறார். ஏகலைவன், நந்தனார் போன்ற பிம்பங்களின் சாயல்கள் பிரதான பாத்திரத்திற்கு உகந்த வண்ணத்தைத் தருகின்றன.

  ஆனால் படத்தில் சில பிசிறுகளும் இல்லாமல் இல்லை. மிகக் கச்சிதமாக நகரும் திரைப்படத்தின் முற்பாதி, அதன் பிறகு ஜி.வி.பிரகாஷைப் போலவே எங்கெங்கோ அலைபாய்கிறது. சினிமா, தொலைக்காட்சி போன்ற எளிய, தற்காலிக புகழ் வடிவங்களின் மீது நாட்டமின்மையும் ஒவ்வாமையும் கொண்டிருக்கும் நெடுமுடி வேணு, இறுதிக்காட்சியில் தன் சிஷ்யன் அதில் வெற்றி பெற ஆர்வம் காட்டுவது பெரிய முரணாக இருக்கிறது. ரியாலிட்டி ஷோ தொடர்பான காட்சிகள் படத்தின் இயல்பைக் கெடுப்பதாக உள்ளன. குறிப்பிட்ட பாரம்பரிய இசையின் மீது பக்தியும் விசுவாசமும் கொண்ட ஓர் இசைக்கலைஞன், காலத்தின் போக்கில் அதில் வந்து இணையும் இதர பாணிகளையும் புதுமைகளையும் இறுதியில் ஏற்றுக் கொள்வது மூத்த இசைக்கலைஞர்களுக்கு முன்னுதாரணமான செய்தியாக இருக்கிறது.

  திரைக்கதையில் நிகழ்ந்திருக்கும் சில அலைபாய்தல்களையும் தேவையற்ற திணிப்புகளையும் தவிர்த்திருந்தால், ராஜீவ் மேனனின் முந்தைய திரைப்படங்களைப் போலவே இதுவும் ஒரு கச்சிதமான படைப்பாகியிருக்கும். என்றாலும் ‘உண்மையான திறமைக்கும் விடாமுயற்சிக்கும் முன்னால் எதுவும் தடையாக நிற்க முடியாது’ என்கிற ஆதாரமான செய்தியை சொன்ன விதத்தில் மிகவும் கவர்கிறது ‘சர்வம் தாள மயம்’.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai