கார்த்தியின் ‘தேவ்’ - திரை விமரிசனம்

கதாபாத்திரங்கள் அடையும் உணர்ச்சிகள் பார்வையாளனுக்கும் கடத்தப்பட வேண்டும் என்பது ஒரு படைப்பின் அடிப்படையான விதி...
கார்த்தியின் ‘தேவ்’ - திரை விமரிசனம்

காதலர் தினத்தன்று வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் காதலும் இல்லை, கத்தரிக்காயும் இல்லை. அறிமுக இயக்குநரான ரஜத் ரவிஷங்கருக்குக் காட்சிகளை மிக அழகான பின்னணிகளில் ரசனையுடன் வைக்கத் தெரிந்திருக்கிறது. ஆனால் உணர்ச்சிகரமாக கதை சொல்லத் தெரியவில்லை.

கதாபாத்திரங்கள் அடையும் உணர்ச்சிகள் பார்வையாளனுக்கும் கடத்தப்பட வேண்டும் என்பது ஒரு படைப்பின் அடிப்படையான விதி. ஆனால் இந்தத் திரைப்படத்தில் அது பெரும்பான்மையாக இல்லாததால் பல காட்சிகள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மேம்போக்காகக் கடந்து சலிப்பை ஏற்படுத்துகின்றன.

*

வசதியான குடும்பத்தில் பிறந்த கார்த்திக்கு (தேவ்) சாகசப் பயணங்கள் புரிவதில் அதிக விருப்பம். சராசரித்தனங்களில் இருந்து விலகி, இலக்கற்ற வாழ்க்கைதான் அவருடைய தேர்வு.  தன்னுடைய இளம் பருவத்து நண்பர்களான விக்கி  மற்றும் அம்ருதாவைத் தன்னுடனேயே வைத்துக்கொள்ளப் பிரியப்படுகிறார். ஆனால் தாழ்வுமனப்பான்மையுள்ள விக்னேஷிற்கு ஒரு சராசரியான உலகில் ‘செட்டில்’ ஆவதுதான் லட்சியம். கார்த்திக்குக்கு ஒரு காதலை அறிமுகப்படுத்திவிட்டால் தன்னை விட்டுவிடுவான் என்று அதற்காக முயல்கிறார்.

இணையத்தில் தேடும்போது தற்செயலாக ரகுல் ப்ரீத் சிங்கின்  (மேக்னா) புகைப்படம் கிடைக்கிறது. அவள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை நடத்தி வருபவர். சினிமாவின் விதிப்படி, புகைப்படத்தில் அவரைக் கண்ட கணத்திலேயே கார்த்தியும் காதலில் விழுகிறார். அவரைத் துரத்தித் துரத்தி தன் காதலை கண்ணியமாகத் தெரிவிக்க முயல்கிறார். ஆனால், தன்னுடைய இளம் வயதில் தந்தையின் கொடுமைகளைப் பார்த்து வளர்ந்த ரகுல் ப்ரீத் சிங்கிற்க்கு ஆண்கள் என்றாலே அச்சமாகவும் ஒவ்வாமையாகவும் இருக்கிறது. எனவே கார்த்தியை முதலில் புறக்கணிக்கிறார். என்றாலும் அவருடைய கண்ணியமான அணுகுமுறை காரணமாக மெல்ல காதலில் விழுகிறார்.

தந்தையால் வளர்க்கப்பட்டவர் கார்த்தி.  ரகுல் ப்ரீத் சிங்கோ தாயால் வளர்க்கப்பட்டவர். சராசரிகள் புழங்கும் உலகை வெறுத்து எவ்வித இலக்கும் இல்லாமல் சாகசப் பயணங்கள் செய்ய விரும்புபவர் கார்த்தி. ஆனால் ரகுல் ப்ரீத் சிங்,  தன் தொழிலில் இன்னமும் மேலே பறக்க விரும்புகிறவர். இப்படி எதிரெதிர் முரண்கள் அவர்களுக்குள் இருந்தாலும் பரஸ்பரப் புரிதலுடன் காதலைத் தொடர்கிறார்கள்.

ஆனால், சிக்கல் இல்லாமல் எந்த உறவாவது நீடிக்க முடியுமா? புரிதலின்மையும்  பிரிவும் இவர்களின் உறவிலும் ஏற்படுகின்றன. அதன் தீர்வை நோக்கி நகர்கிறது படத்தின் இறுதிக்காட்சிகள்.

*

ஏறத்தாழ அனைத்துக் காட்சிகளிலும் கார்த்தி வசீகரமாக இருக்கிறார். துள்ளலாக இயங்குகிறார். நடனக்காட்சிகளிலும் குறை சொல்ல முடியாது. காதலியின் பிரிவை எண்ணி உருகும் காட்சியில் சற்றுக் கலங்க வைக்கிறார். எனவே கார்த்திக் தன்னுடைய பங்களிப்பை அர்ப்பணிப்புடனும் முழுமையாகவும் தந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். இயக்குநரால் இதைச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை.

இதைப்போலவே கச்சிதமாகச் செதுக்கி வைக்கப்பட்ட கொழுக்கட்டை போல வளப்பமாக இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். சில காட்சிகளில் நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். வழக்கமான பொம்மை நாயகியாக அல்லாமல், இவருக்கென்று தனி குணாதிசயங்கள், சொந்தக்காலில் நிற்கும் பின்னணி போன்றவற்றோடு இந்தப் பாத்திரத்தை வடிவமைத்திருப்பதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

நகைச்சுவை என்ற பெயரில் விக்னேஷ் பெரும்பாலும் எரிச்சலூட்டுகிறார். அம்ருதாவின் நடிப்பு பரவாயில்லை. பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்ற மூத்த நடிகர்கள் அதிக வாய்ப்பு அளிக்கப்படாமல் சம்பிரதாயமான பாத்திரங்களாக வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் இன்னொரு நாயகன் என்று ஒளிப்பதிவாளர் ஆர். வேல்ராஜை நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும். பல்வேறு நாடுகளிலுள்ள பல்வேறு நகரங்களில் இதன் திரைக்கதை பயணிப்பதால் அதனதன் பின்னணிகள் மிக வசீகரமாகவும் அழகியல் உணர்வுடனும் பதிவாக்கப்பட்டுள்ளன. பால்வீதி, சூரிய உதயம் போன்றவற்றைத் தாண்டி எவரெஸ்ட் சிகரத்தின் அழகும் அங்கு நிகழும் சாகசமும் பிரமிப்பூட்டும் வகையில் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும், ‘இத்தனை அடி உயரத்தில் இருக்கிறோம்’ என்று காட்டப்படும்போது காட்சிகளின் தொடர்பற்ற தன்மை காரணமாக அதில் எவ்வித ஈடுபாடும் வரவில்லை. கார்த்திக் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் இடையில் வளரும் காதல் தொடர்பான சில காட்சிகள் மற்றும் சம்பவங்கள் இனிமையாகவும் ரசனையாகவும் அமைந்திருக்கின்றன.  இருவருக்கிடையேயான ‘வேதியியல்’ சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

திரைக்கதையே அடிப்படையில் பலவீனமாக இருக்கும் போது ஒரு படத்தொகுப்பாளரால் என்னதான் செய்து விட முடியும்? என்றாலும் ரூபன் இயன்ற அளவிற்குக் காட்சிகளின் லயம் குறையாமல் ஒன்றிணைத்திருக்கிறார். சண்டைக்காட்சிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் (அன்பறிவ்) செயற்கையாகத் திணிக்கப்பட்டிருப்பதால் சலிப்பை உருவாக்குகின்றன.

‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான’ கதையாக, ஹாரிஜ் ஜெயராஜின் இசை, பியானோ தேய்ந்து மெளத் ஆர்கனாக மாறிக் கொண்டிருக்கிறது. ‘முன்பே கேட்டிருக்கிறோமே அல்லது எங்கேயோ கேட்டிருக்கிறோமே’ என்கிற உணர்வு அவரது சமீபத்திய பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் தோன்றுகிறது. ‘அணங்கே.. சிணுங்கலாமா!’ பாடல் மட்டும் கவனத்தைக் கவர்கிறது. அட்டகாசமான பின்னணி இசையின் மூலம் இந்தக் குறையை சமன் செய்திருக்கிறார் ஹாரிஸ்.

வெவ்வேறு பின்னணி, இலக்கு, ரசனை போன்றவை இருந்தாலும் காதல் என்கிற உணர்வு கார்த்திக்கையும் ரகுல் ப்ரீத் சிங்கையும் ஒன்றிணைக்கிறது. அது நிறைவேறிய பிறகு அவர்கள் முன்னகரும் பாதைகளின் தேர்வும் அவர்களுக்கு இடையேயுள்ள அகங்காரமும் அந்தக் காதலில் சிக்கலைத் தோற்றுவிக்கிறது. இந்த மெல்லிய இழையை வைத்துக்கொண்டும் ஒரு சுவாரசியமான திரைப்படத்தைத் தர முடியும். ஆனால் ஆழமின்றியும் உணர்ச்சிகரமில்லாமலும் நகரும் விதத்தில் ‘தேவ்’ மிகவும் பின்தங்கி சலிப்பை ஏற்படுத்துகிறது. இந்தத் தடையைத் தாண்டியிருந்தால் ‘தேவ்’, சிறந்த காதல் திரைப்படங்களின் வரிசையில் இணைந்திருக்கக்கூடும்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com