Enable Javscript for better performance
Action Movie Review- Dinamani

சுடச்சுட

  

  விஷாலின் ‘ஆக்‌ஷன்’: திரை விமரிசனம்

  By சுதிர் ஸ்ரீனிவாசன்  |   Published on : 18th November 2019 05:35 PM  |   அ+அ அ-   |    |  

  action_vishal121212xxxxx

   

  ஆக்‌ஷன் போன்ற படங்கள் வெளியாகும்போது, அதனை ஏற்றுக்கொள்ளும் வகையில் விமரிசிக்க வேண்டிய மன அழுத்தத்திற்கு விமரிசகர்கள் ஆளாகிறார்கள். 'ஹாலிவுட் தரத்திற்கு' இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை முயற்சி செய்திருக்கிறார்கள் என்று நாங்கள் விமரிசிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது; ஒரு இந்திய ஹீரோ, ஜேம்ஸ் பாண்ட்/ஈதன் ஹண்ட் (மிஸன் இம்பாஸிபிள் படங்களில் டாம் குரூஸ் ஏற்று நடித்த கதாபாத்திரம்) பாணியில்  வெளிநாடுகளில் முரட்டுத்தனமாகச் சண்டை போட வேண்டுமென்ற இயக்குநர்களின் ஆசை எங்களை ஈர்க்க வேண்டும். சில சமயம் யார், யாரை, எதற்காக அடித்தார்கள் என்று குழம்பினால் கூட அதிவேகமான எடிட்டிங்கைப் பார்த்துப் பிரமிப்படைய வேண்டும். மனசாட்சிப்படி மேற்கூறிய எதையுமே நான் சொல்ல முடியாது, ஏனென்றால் இந்தப் படம் மிகக்குறைவாகவே என்னைத் திருப்திப்படுத்தியது. ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களை நம் பாணியில் முயற்சி செய்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. துருக்கி, இங்கிலாந்து, ஏன் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கூட வில்லன்களை கதாநாயகன் துவம்சம் செய்வதிலிருந்து இது தெளிவாகிறது. படத்தின் ஹீரோ சுபாஷ் (எனும் விஷால்), பெரிய உயரத்திலிருந்து முஷ்டியை ஓங்கியபடிக் குதிப்பதாக அறிமுகப்படுத்தப்படுகிறார். தீவிரமான காட்சியாக எதிர்பார்க்கப்படும் இந்த இடத்தில் கூட, என்னால் ஏனோ சிரிப்பை அடக்க முடியவில்லை.

  மேற்கத்தியப் படங்களைப் போன்றதொரு முயற்சி என்பதால், இதிலும் முற்றிலும் யூகிக்கக்கூடிய நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஷா ராவை விஷால் அடித்து, அவரது பற்கள் குத்துப்பட்டு உடையும்போது, அதற்கு நச்சென்று, "மல்லுக் கட்டலாம்னு பாத்தா, பல்லு கட்ட வச்சிட்டியே" எனக் கூறுவது போன்ற காட்சிகள். எப்போதும், ஆக்‌ஷன் ஹீரோ என்றால் முதல்முறை பார்த்ததும் மயங்கும் ஒரு நாயகி இருக்கவேண்டும். நல்லவேளையாக, ஆக்‌ஷன் படத்தில் கதாநாயகியைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக,  தன் உதவாக்கரை நண்பனைக் கதாநாயகியின் தங்கை திருமணம் செய்வதிலிருந்து காப்பாற்றும்போது, நாயகன் மீது காதல் வசப்படுகிறார் நாயகி. சுவாரசியமாக, கதாநாயகனைக் கதாநாயகி துரத்தித் துரத்திக் காதலிப்பது போலத் தலைகீழாகக் காட்டியிருக்கிறார்கள். கதாநாயகியைக் கதாநாயகன் ஸ்டாக்கிங் செய்வதற்கு இதுதான் தீர்வு என்பதுபோல! விஷால் தூங்கும்போது அவருக்கு முத்தம் கொடுத்ததை, மறுமுறையும் அதற்கு முயலும்போது பெருமையாகப் பீற்றிக்கொள்வார் கதாநாயகி. இன்னுமொரு விசித்திரமான காதல் காட்சியும் உண்டு. விஷால் தானும் காதலிப்பதாகக் கதாநாயகியிடம் கூறிய பிறகு, அவருக்கு காபி கொண்டு வருவார் நாயகி. அதற்கு விஷால் வித்தியாசமாக, எரிச்சலுடன் டீ கொண்டுவர உத்தர விடுவார். நாயகியும் சாந்தமாகக் கொண்டு வர, பக்கத்தில் வரச்சொல்வார் விஷால். இதில் ஏதேனும் இரட்டை அர்த்தம் இருந்து அதைக் கவனிக்காமல் விட்டேனா எனத் தெரியவில்லை.  

  இவை எல்லாமே சுந்தர் சி-யிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட வழக்கமான காதல் காட்சிகள் தான்; ஆனால் அவருடைய படங்களில் எப்போதும் கைகொடுக்கும் நகைச்சுவைக் காட்சிகள்கூட இதில் ஜீவனில்லாமல் உள்ளன. எல்லாத் தமிழ்ப்படங்களையும் போல, வெள்ளைக்காரப் பெண்களிடம் ஜொள்ளு விடும் காமெடியனுக்கு, இதில் அவளைச் சந்திக்கும்வரை அவள் வயதானவள் என்று தெரிவதில்லை. இதைச் சொல்வதால் அந்த நகைச்சுவையை வெளிப்படுத்தி உங்கள் ஆர்வத்தைக் குறைக்கப்போவதில்லை.

  அதற்காக இந்தப்படம் மொத்தமாகச் சரியில்லை எனச் சொல்லிவிடவும் முடியாது. சிலநேரங்களில் அலட்சியமாய் பார்த்துக்கொண்டிருக்கும் நம்மிடம் லேசான ஆர்வத்தையும் தூண்டுகிறது. படத்தில் தமன்னா இருந்தும்கூட, விஷால் இன்னொரு கதாநாயகியான ஐஸ்வர்யா லக்ஷ்மியைக் காதலிப்பது கொஞ்சம் சுவாரசியமாக உள்ளது. கதையின் முக்கியக் கதாபாத்திரங்கள் வெகு சீக்கிரமே கதையிலிருந்து வெளியேறுவதும், யோகி பாபு ஹேக்கராக நடிப்பதும், ஹிப் ஹாப் தமிழா படம் முழுக்க நம்மை உற்சாகமாக வைத்திருப்பதும் கொஞ்சம் சுவாரசியமாக உள்ளது. ஃபியா ஃபியா என்றொரு கிளர்ச்சியூட்டும் பாடலுக்கு, ஒரு விவகாரமான பெண் சில கொலைகளை செய்துவிட்டு கவர்ச்சியாக நடனமாடுவதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் அவளின் கழுத்துப்பகுதியில் நமது தணிக்கை அதிகாரிகள் பரிந்துரைத்த மங்கலான ஒளி நம் கண்களை உறுத்துகிறது. கவர்ச்சியை எவ்வாறு வரையறுக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒவ்வொரு முறையும் மங்கலான ஒளி வந்து போகும்போதும், அது நம் கவனத்தை ஈர்த்துக் காட்சிப் பொருளாகிறது. 

  இதற்கிடையே, விஷால் தொல்லையேதும் இல்லாமல் பல நாடுகளை வலம் வந்து, பெயர் தெரியாத அடியாள்களை மேலோகம் அனுப்புகிறார். ஒரு சுவாரசியமான சண்டைக்காட்சி, ஒரு சமூகக் கூடத்தின் வெளியே, விஷாலும் அவர் எதிரிகளும் ஏசி யூனிட்களைப் பிடித்துக்கொண்டே ஒருவருக்கொருவர் தள்ளிவிட முயலும்போது துவங்கும். அது சூடுபிடிக்கும் முன்னரே, ஒருவன் அந்த  ஏசி யூனிட்டை உதைத்துத் தள்ளிவிடுவான். விஷால் கீழே விழுந்துகொண்டே இருந்தாலும், ஆச்சர்யமான முறையில் எளிமையாக இன்னொரு இடத்தில் கீழே விழாதபடி  ஒட்டிக்கொள்கிறார். அத்தனை உயரத்திலிருந்து விழுந்தாலும், அவர் தளர்வடைவதில்லை. ஒன்றை ஒப்புகொள்ளத்தான் வேண்டும், உயர் தரத்தில் சண்டைக் காட்சிகளை வடிவமைத்து, படம்பிடிக்கும்போது தன் வலுவான உடற்கட்டினால், விஷால் அந்தக் காட்சிகளுக்குச் சிறந்த விதத்தில் பொருந்துகிறார்.  

  ஆக்‌ஷன் போன்ற படத்திற்கு நிச்சயம் ரசிகர்கள் இருப்பார்கள், குறிப்பாக எல்லாம் நன்மைக்கே என்கிற கொள்கை உடையவர்கள்.  இங்குள்ள பெரும்பாலான படங்களின் ஆக்‌ஷன் காட்சிகளை விட இது மேம்பட்டது என்றே அவர்கள் வாதிடுவார்கள். இந்தப் படம் உயர்ந்த லட்சியத்தைக் கொண்டது என்பார்கள். அடிப்படையில், இது இன்னும் மோசமாகச் சென்றிருக்கக் கூடும் என்றுகூடச் சொல்வார்கள். உண்மையில், இந்தப் படம் இன்னும் சிறப்பாக  அமைந்திருக்க வேண்டும் என்றல்லவா நாம் கோரவேண்டும்?

  தமிழில்: வினுலா

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai