கார்த்தியின் ‘கைதி’ - திரை விமரிசனம்

இரண்டாம் பாகம் தொடரப் போவதான சமிக்ஞையுடன் படம் நிறைவுறுகிறது. சில சிறிய குறைகள் இருந்தாலும் ஒரு விறுவிறுப்பான படத்தைச் சுவாரசியமாகத் தருவதில்
கார்த்தியின் ‘கைதி’  - திரை விமரிசனம்

காதல் டூயட், சண்டை, சென்டிமென்ட், காமெடி டிராக் போன்றவற்றின் கலவைதான் பொதுவாக இந்தியச் சினிமாவின் அடையாளம். அதுவேதான் தமிழ் சினிமாவின் அடையாளமும் கூட. ஆனால் ஹாலிவுட் போல் கச்சிதமாகவும் சுருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் திரைக்கதைகளுக்கான வரவேற்பு இளையதலைமுறையினரிடையே சமீபகாலமாக பெருகி வருகிறது. அநாவசியத் திணிப்புகள், தேய்வழக்குகள், சுவாரசியமற்ற காட்சிகள் போன்வற்றை அவர்கள் கருணையேயின்றி நிராகரிக்கிறார்கள். இந்தப் போக்கினை இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் மிகச்சரியாக உணர்ந்திருக்கிறார். அவரது முந்தைய திரைப்படமான ‘மாநகரம்’, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பல கிளைக்கதைகளுடன் நகரும் படம். இது பரவலான கவனத்தையும் வெற்றியையும் பெற்றது. ‘கைதி’யும் இதே போன்று ஒரே இரவில் கிளைக்கதைகளுடன் நிகழும் காட்சிகளைக் கொண்ட திரைப்படம்தான்.

கச்சிதமான திரைக்கதை, மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள், அட்டகாசமான பின்னணி இசை, இடையில் கலக்கும் மிதமான சென்ட்டிமென்ட், இயல்பான நகைச்சுவை என்று ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகச் சொல்லும் ஒரு தரமான படத்தைத் தந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஹீரோயின், டூயட், அபத்த காமெடி என்கிற வழக்கமான அம்சங்கள் இதில் கிடையாது. ஆனால் தமிழ் சினிமாவுக்கேயுரிய, ஹீரோவின் தனிநபர் சாகசம் உள்ளிட்ட சில தேய்வழக்குகளிலிருந்து இவரால் வெளியே வர முடியவில்லை என்பது ஒரு சிறிய துரதிர்ஷ்டம்.

*

பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளைக் காவல்துறையின் சிறப்புக் குழு கைப்பற்றுகிறது. காவல்துறையிலேயே கறுப்பு ஆடுகள் கலந்திருப்பதால் இந்த விஷயத்தை ரகசியமாகக் கையாள முயல்கிறார் அதிகாரி நரேன். என்றாலும் சில விஷயங்கள் கசிந்துகொண்டே இருக்கின்றன.

கோபத்தில் வெகுண்டெழும் போதைப் பொருள் குழு இரண்டு விஷயங்களைத் திட்டமிடுகிறது. ஒன்று, காவல்துறை கைப்பற்றி ரகசியமான இடத்தில் வைத்துள்ள பலகோடி மதிப்புள்ள போதைப்பொருளை எப்படியாவது மீட்க வேண்டும். இரண்டு, இதற்குக் காரணமான ஐந்து காவல்துறை அதிகாரிகளைக் கொல்ல வேண்டும். அப்படிச் செய்தால்தான் காவல்துறை இனி அவர்களை நெருங்காது. இந்த இரண்டு விஷயங்களையும் பொழுது விடிவதற்குள் செய்தாக வேண்டும். 

தனது பணி ஒய்வு நெருங்குவதையொட்டி போலீஸ் ஐ.ஜி தரும் விருந்தில் பல உயர்நிலை காவல் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரு கருப்பு ஆட்டின் உதவியால் திட்டமிட்டு செயலிழக்க வைக்கப்படுகிறார்கள்.

இப்போது தனியாக மாட்டிக் கொள்ளும் நரேனின் முன்னால் உள்ள சவால்கள் இரண்டு. சுயநினைவின்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் உயர் அதிகாரிகள் அனைவரையும் மருத்துவனையில் உடனே சேர்த்துக் காப்பாற்றியாக வேண்டும். கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் போதைப் பொருளை எதிரிகள் கைப்பற்றாதவாறு தடுக்கவேண்டும்.

நரேனிடம் கைவசம் இருப்பது, ஓட்டை உடைசலான ஒரு லாரி, ஓர் அப்பாவி இளைஞன் மட்டுமே. 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மருத்துவனையில் அதிகாரிகளைச் சேர்த்துவிட்டு அவர் கமிஷனர் அலுவகத்திற்குச் செல்ல வேண்டும். பொழுது விடிவதற்குள் இது நடக்க வேண்டும். கை உடைந்திருப்பதால் அவரால் லாரியை ஓட்ட முடியாது. 

சிறைக்கைதியாக இருந்து விட்டு விடுதலையாகும் ஒருவன் (கார்த்தி) இங்குக் குறுக்கிடுகிறான். பத்து வருடங்கள் கழித்து தன் மகளை முதல்முறையாக அவன் பார்க்கப் போகிறான். அவனை இடைமறிக்கும் நரேன், அதிகாரமும் கெஞ்சலுமாக லாரி ஓட்டச் சொல்லிக் கேட்கிறார். இந்தப் பிரச்னையின் பின்னால் உள்ள ஆழமும் ஆபத்தும் கார்த்தி அறியாதது. மகளுக்கு வளமான எதிர்காலம் கிடைக்கும் என்று அதிகாரி தரும் வாக்குறுதி காரணமாக இந்தப் பணியை ஏற்கிறார்.

லாரியில் இருக்கும் ஐந்து அதிகாரிகளைக் கொல்வதற்காகக் கொலைவெறியுடன் பல கும்பல்கள் துரத்துகின்றன. இன்னொரு பக்கம், கமிஷனர் அலுவலகத்திற்குள் இருக்கும் போதைப் பொருளை மீட்பதற்காக ஆவேசத்துடன் இன்னொரு கும்பல் செல்கிறது. பல ஆபத்துக்களைக் கொண்ட இந்தப் பயணத்தின் மூலம் வரும் எதிர்பாராத அந்தச் சவால்களை கார்த்தி எப்படி எதிர்கொண்டார் என்பதைப் பரபரப்பும் விறுவிறுப்புமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

*

நல்லதொரு திரைக்கதை வாய்த்தால் இவர் நிச்சயம் ஜமாய்த்து விடுவார் என்பதை ‘பருத்திவீரன்’ முதல் தொடர்ந்து நிரூபித்து வருகிறார் கார்த்தி. இதிலும் அப்படியே. அழுக்கான லுங்கி, சட்டை, ஒரு கையில் உள்ள விலங்கு. இந்தத் தோற்றத்துடன்தான் படம் முழுவதும் வருகிறார்.

ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடியைக் காட்டியிருக்கும் அதே சமயத்தில் இதுவரை பார்த்திராத மகளின் மீதான நேசத்தையும் உருக்கத்துடன் வெளிப்படுத்த கார்த்தியால் இயன்றிருக்கிறது. தன்னை மிரட்டி லாரி ஓட்ட வைக்கிற நரேனின் மீது முதலில் வெறுப்பு இருந்தாலும், ‘அவர் நேர்மையானவர்’ என்பதைப் புரிந்துகொண்டு பிறகு அவருக்காக உயிரைப் பணயம் வைக்க கார்த்தி முடிவெடுக்கும் காட்சி சிறப்பு. கார்த்தியின் திரைப்பட வரிசையில் ‘கைதி’ ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கும்.

நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் நரேனைப் பார்க்க முடிகிறது. கருப்பு ஆடுகள் நிறைந்திருக்கும் காவல்துறையில் அரிதாக இருக்கும் ஒரு நேர்மையான அதிகாரியைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். வேறு வழியே இல்லாத சூழலிலும், காவல்துறை அதிகாரிக்கேயுரிய தெனாவெட்டுடன் இவர் கார்த்தியை மிரட்டுவதும், நிலைமை கைமீறிப் போகும்போது சற்று கெஞ்சுவதும் என தன் பணியைக் கச்சிதமாக செய்திருக்கிறார். அசந்தர்பமான சூழல்கள் பெருகினாலும் நேர்மறைத்தன்மையுடன் செயல்படுவதும் அதையே மற்றவர்களுக்குக் கடத்துவதும் சிறப்பான காட்சிகள்.

மிகவும் இறுக்கமாக நகரும் இந்தத் திரைப்படத்தின் இடையே சற்று ஆறுதலைத் தருவது தீனாவின் இயல்பான நகைச்சுவைதான். 

கார்த்தியை இவர் மெல்லிய நையாண்டியுடன் சீண்டும் காட்சிகள் எல்லாம் புன்னகைக்க வைக்கின்றன. கார்த்திக்கும் இவருக்குமான பயணம் முதலில் பரஸ்பர விரோதத்துடன்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் குறுகிய நேரத்திலேயே ஒருவரையொருவர் புரிந்து கொள்வது நெகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது. ‘தான் உயிரோடு திரும்பாவிட்டால் வாங்கி வைத்திருக்கும் கம்மலை மகளிடம் தந்து விடு’ என்று கார்த்தி, தீனாவை கேட்டுக் கொள்வது உருக்கமான காட்சி.

காவல்நிலையத்தை நொறுக்கி விடும் ஆவேசத்துடன் சூழ்ந்து கொள்ளும் கொலைவெறிக் கும்பலை தனியாக எதிர்கொள்ளும் கான்ஸ்டபிளாக ஜார்ஜ் மரியான் அசத்தியிருக்கிறார். உயர்நிலையில் மட்டுமல்லாது அடிநிலையிலும் இருக்கும் இம்மாதிரியான நேர்மையான நபர்களால்தான் அரசுத்துறையின் மீது மக்கள் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

ஹரீஷ் உத்தமன், ரமணா, கிருஷ்ணமூர்த்தி, பொறியியல் மாணவர்களாக வரும் இளைஞர்கள் என்று சில துணை பாத்திரங்கள் என்று ஏறத்தாழ அனைவருக்குமே திரைக்கதையில் இடம் இருக்கிற வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே ஒவ்வொருவருமே நம் நினைவில் நிற்கிறார்கள்.

*

இத்திரைப்படத்தின் பெரும்பலங்களுள் ஒன்று ஒளிப்பதிவு. தனது அசாதாரண உழைப்பின் மூலம் இதைச் சாதித்திருக்கிறார் சத்யன் சூர்யன். ஒரே இரவில் நிகழும் திரைக்கதை என்பதால் அதன் தொடர்ச்சி எவ்வகையிலும் சிதையாதவாறு சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள். 

இதைப் போலவே ஸ்டண்ட் இயக்குநரின் பங்களிப்பையும் பிரத்யேகமாகக் குறிப்பிட வேண்டும் (அன்பறிவ்). ஒலி வடிவமைப்பு, sound effects போன்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் அருமையான உழைப்பும் குறிப்பிடத்தகுந்தது.
 
இப்படியொரு திரைக்கதையில் பாடல்கள் ஏதுமில்லாதது மிகப் பொருத்தமானது. எனவே அதிரடியான பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் சாம் சி.எஸ். கார்த்தி தன் பின்னணியைச் சொல்லும் காட்சியில் வரும் இசை அத்தனை மென்மையாகவும் உருக்கமாகவும் இருக்கிறது. விறுவிறுப்பாக எழுதப்பட்ட திரைக்கதையின் ஜீவன் கெடாதவாறு எடிட் செய்திருக்கிறார் பிலோமின் ராஜ்.

தமிழ் சினிமாவின் பெரும்பாலான க்ளிஷேக்களைத் தவிர்த்துவிட்டு ஒரு நேர்மையான, விறுவிறுப்பான திரைக்கதையை நம்பகத்தன்மையோடு தர முயன்றிருக்கும் லோகேஷ் கனகராஜ் பாராட்டுக்குரியவர் என்றாலும் ஹீரோவின் தனிநபர் சாகசம் மூலமே சவால்கள் நிறைவேறுவது நெருடலாக இருக்கிறது. அதிலும் எதிரிகளால் பலமாகத் தாக்கப்பட்டு பின்பு ஹீரோ கண்விழித்து மறுபடியும் சண்டையிடுவது எல்லாம் வழக்கமான சினிமாத்தனம். 

இதைப் போலவே சுற்றியிருக்கும் கொலைக்கும்பலை ஒரு கான்ஸ்டபிளும் நாலைந்து இளைஞர்களும் சமாளிக்கும் காட்சிகளிலும் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது. மகள் தொடர்பான சென்ட்டிமென்ட் காட்சிகளும் க்ளிஷேதான். இதுபோன்ற வழக்கமான அம்சங்களைத் தவிர்த்திருந்தால் படம் இன்னமும் சிறப்பாகியிருக்கும். சிறையிலிருந்து விடுதலை ஆனவனுக்கு ‘கைதி’ என்கிற தலைப்பு பொருந்தவில்லை.

ஒரு காட்சியில் தமிழ் சினிமாவின் வேகமான தாளத்தைக் கொண்ட பாடல்கள் உற்சாகமாக ஒலிக்கின்றன. ஆனால் அதன் பின்னணியில் நிகழ்ந்து கொண்டிருப்பதோ உயிர்ப்போராட்டத்துடனான திகில் காட்சிகள். இது போன்ற அவல நகைச்சுவையிலான தன்மை ஆங்காங்கே வெளிப்பட்டு சுவாரசியத்தைக் கூட்டுகிறது. கார்த்தியின் ஃபிளாஷ்பேக், காட்சிகளாக விவரிக்கப்படாதது ஆறுதல். அது கார்த்தியால் உருக்கமான வார்த்தைகளால் சொல்லப்படாமல் இருந்திருந்தால் திரைக்கதையின் வசீகரம் கூடியிருக்கும். இரண்டாம் பாகம் தொடரப் போவதான சமிக்ஞையுடன் படம் நிறைவுறுகிறது. சில சிறிய குறைகள் இருந்தாலும் ஒரு விறுவிறுப்பான படத்தைச் சுவாரசியமாகத் தருவதில் பெரிதும் பெற்றி பெற்றிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். 

கைதி - மகத்தான அனுபவம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com