ரஜினியின் பழைய ஸ்டைலை மட்டுமே வைத்து கவர்வது இனியும் வேலைக்கு ஆகாது: ‘தர்பார்’ பட விமரிசனம்

பழைய படங்களில் இருந்த ரஜினியின் உடல்மொழிகளையும் வசனங்களையும் கொண்டு மட்டுமே ரசிகர்களைக் கவர்வது இனியும் வேலைக்கு ஆகாது...
ரஜினியின் பழைய ஸ்டைலை மட்டுமே வைத்து கவர்வது இனியும் வேலைக்கு ஆகாது: ‘தர்பார்’ பட விமரிசனம்

ரஜினிக்குப் பொருந்தாத இளம் வயதுக் கதாபாத்திரத்தில், மறுபடியும் அவரைக் காட்டிவிடுவார்களோ என்ற என் கவலையை தர்பார் போக்கியது ஆறுதலாக இருந்தது. நல்லவேளையாக, கல்யாண வயதுடைய ஓர் இளம்பெண்ணின் ஒற்றைத் தந்தையாக ஆதித்யா அருணாச்சலம் என்கிற கதாபாத்திரத்தில் வலம் வருகிறார். அவரை விடவும் வயதில் சிறியவராக உள்ள நயன்தாராவுடன் மேம்போக்கான காதல் களம் ஒன்று படத்தில் இருந்தாலும், இந்த வயது வித்தியாசத்தைக் குறித்து படத்திலேயே ஒப்புக்கொள்கிறார்கள். ‘இதெல்லாம் இந்த வயசுல பண்றதா?’ என்று லில்லியை (நயன்தாரா) நோக்கி காதலில் முன்னேறும்போது தன்னைத்தானே கேட்டுக் கொள்கிறார் ரஜினி. ‘இல்லதான், என்ன பண்றது?’ எனச் சுருக்கென்று ரஜினி மற்றும் இயக்குநரின் சார்பாகப் பதில் கொடுக்கிறார் யோகி பாபு. இந்தக் காதல் களத்தைப் படத்தில் வலுக்கட்டாயமாகப் புகுத்தியதை அவர்களே நமக்குத் தெரிவிக்கிறார்கள். இதுவே படத்தில் நயன்தாராவுடைய மிகச்சிறிய கதாபாத்திரத்திற்குப் பதிலாகிறது. (இதுபோன்ற படங்களைப் பயன்படுத்திக் கொண்டு கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் திட்டமிட்டு நடிக்கிறார் நயன்தாரா) காதலர்களின் வயது வித்தியாசத்தை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். தன்னிடம் மயங்காத கதாநாயகியிடம், தயக்கத்துடன் கதாநாயகன் நெருங்குவதாகக் காட்டியிருப்பதே என் கேள்வி பொருத்தமானது எனத் தெரிகிறது. இதை அறிந்தே, ரஜினியின் மகளாக வருகிற நிவேதா தாமஸ் மூலம், வயதானவர்கள் காதலிக்க இந்தச் சமுதாயம் தடையாக இருக்கக் கூடாது எனச் சொல்ல வைத்துள்ளார் இயக்குநர். இவையெல்லாம் இப்படத்தின் சுவாரசியமான பகுதிகளாகும். இந்தக் காதல் பகுதிகள் குறித்து எழுதியது போதும். தர்பார் படம் அதைப் பற்றியது அல்ல. தர்பார் ரஜினியின் போலீஸ் கதாபாத்திரத்தைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள் அல்லவா? 

மகளைக் கொண்ட ரஜினி, தன் ஸ்டேஷனுக்கு வந்திருக்கும் பெண்ணைப் பார்த்து, ‘என்னம்மா, பொம்பளைங்கெல்லாம் இங்க வந்திருக்கீங்க?' என்கிறார். ரஜினியைக் காவல் ஆணையராகக் காண்பித்ததில் அல்ல பிரச்னை. தர்பாரில் அது எனக்குப் பிரச்னையே இல்லை. இது கதை உருவாக்கத்தின் பிரச்னை. தவறு செய்பவர்களைக் கையாளும், சுறுசுறுப்பான போலீஸாக வருகிறார் ரஜினி. ஆபத்தான சூழலில் துணிச்சலாக தன்னை முன்நிறுத்துகிறார். இது, ‘பிரேக்கிங் பேட்’(Breaking Bad) என்கிற தொலைக்காட்சித் தொடரின் வால்டர் வைட் கதாபாத்திரம் போலவே உள்ளது. அவர் ஆபத்தில் இல்லை, அவர்தான் அந்த ஆபத்தே! 

ஈர்ப்பில்லாத அறிமுகக் காட்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஓர் ஆயுதத்தோடு மேலிருந்து ரெளடிகள் மீது இறங்குகிறார். வீடியோ கேம் போல படமாக்கப்பட்டுள்ள இந்தச் சண்டைக்காட்சிகளில், கொலைகளைக் கண்டு ரஜினி மகிழ்வதாகக் காட்டியுள்ளார்கள். அவரே தன்னை ‘பேட் போலீஸ்’ (அண்ணாமலைப் பட வசனம் போல) எனச் சொல்லிக் கொள்கிறார். செய்தித்தாள்கள் அவரை இன்னும் துல்லியமாக ‘மேட் காப்’ எனக் குறிப்பிடுகின்றன. ரஜினி ஏன் இப்படி ரத்தவெறி பிடித்து, வாளைக் கொண்டு துவம்சம் செய்கிறார் என்பதற்கான காரணங்களை இயக்குநர் முருகதாஸ் சொல்லிக்கொண்டே போகிறார். அதுவும் இக்காலத்தில் அந்தக் கொலைகள் உற்சாகமாகச் செய்யப்படுவதைக் கவனிக்கவேண்டும். சூழல்கள் காரணமாகக் காவலர்களிடம் இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், குற்றவாளிகள் உள்பட மக்களைக் கொல்லும் காவலர்களை மேட் காப் என அடையாளப்படுத்த வேண்டும். இதுபோன்ற படங்களின் பின்னால் இருக்கும் அரசியலைச் சந்தேகத்தோடுதான் பார்க்கவேண்டும். ஏனெனில் ரஜினியின் வாழ்க்கையில் சோகம் ஏற்படும் முன்பே, இன்னொரு கைதிக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்தவனைக் குண்டுகளால் கொல்வதாகக் காட்டியிருக்கிறார்கள். இதையெல்லாம் வைத்து நியாயப்படுத்த முடியாதென்று முருகதாஸுக்குத் தெரியும். அதனால்தான் கொல்லப்பட்ட ஆள்மாறாட்ட கைதி ஒரு கொலைகாரன் என்று புதிதாக ஒரு கதை சொல்கிறார். அது நம்பும்படி இல்லை. தந்திரம் என நன்குத் தெரிகிறது. 

படத்தில் நம்மை உற்சாகமூட்டக்கூடிய சில காட்சிகளும் உள்ளன. சொந்த வாழ்வில் துயரத்தைச் சந்திக்கும் ஒரு போலீஸின் வழக்கமான பழிவாங்கும் கதையே தர்பார் என்றாலும், இது முட்டாள்தனமான படம் கிடையாது. சகக் காவலர்கள் ஆதித்யா அருணாசலத்துக்குத் துணையாக இருப்பது அக்கதாபாத்திரத்தை ரஜினி செய்வதால் அல்ல. அதற்கு ஒரு வலுவான காரணம் உள்ளது. நயன்தாராவை ரஜினி பின்தொடர்வதற்குக் காரணம், அவருடைய தோற்றத்தால் கவரப்பட்டு அல்ல.  அதற்கொரு காரணம் உண்டு. ரஜினியின் மகள் வள்ளி, தன் தந்தை மீண்டும் மணமுடிக்கவேண்டும் என்று நினைப்பதற்கும் காரணம் உண்டு. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி குறிப்பிட்ட இடத்தில் நடப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. படம் இந்த இடத்தில் முழுமையடைகிறது. ஒரு காவலருக்கான பழிவாங்கும் செயல் அல்ல அது. ஒட்டுமொத்தக் காவல்துறைக்குமானது. எப்போதும் போல கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் கதாநாயகனும், வில்லனும் சுவர்களுக்கு இடையே வேகமாக ஓடுவதும் தரைகளில் பொத்தென விழுவதும்தான் நடக்கும். இது தர்பாரிலும் நடக்கிறது. ஆனால் அந்தச் சுவர்கள் இடிந்து இருப்பதற்கான காரணம், இக்கதைக்கான அடிப்படைக் காரணமாக உள்ளது. இடைவேளைக்குப் பிறகு வரும் டும் டும் பாடல் வணிக ரீதியாகத் தோன்றினாலும், இந்தப் பாடலுக்கு ஒரு காரணத்தை வைக்கிறார் இயக்குநர் முருகதாஸ். மேலும், இந்தப் பாடலில் நடப்பதை இன்னொரு கட்டத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார். தாய் இல்லாமல் வளர்ந்தவன் என்று ரஜினி சாதாரணமாகச் சொல்வதன் மூலம் அவர் வன்முறையை ஏன் சுலபமாக எடுத்துக்கொள்கிறார் என்பதும் வெளிப்படும். இந்த மெனக்கெடல்கள் என்னைக் கவர்ந்தன. 

ஆனாலும் படம் முழுக்க இந்த உழைப்பு இல்லாதது என்னை எரிச்சலூட்டுகிறது. ஒரு மனித உரிமை ஆணைய அதிகாரி, வெறுமனே ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சிக்கு மட்டும். அதிலும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. ஒரு துணை முதலமைச்சரிடம் வீராப்பு காட்டும் ரஜினிக்கு அதனால் எந்தப் பின்விளைவுகளும் ஏற்படுவதில்லை. சில விசாரணைகளும் அதன் முடிவுகளும் வசதிக்கேற்ப அமைந்துள்ளன. ஒரு வெள்ளைநிறத் தூளை, ஒரு பெண்ணின் மூக்கிற்குக் கீழே பார்த்ததாக ஒரு சிறுவன் கூறுவதை வைத்தே அது போதை மருந்து என்று உறுதிப்படுத்தப்படுகிறது. ஒரு பைக் திருட்டுச் சம்பவத்தின் வழக்கில் ஒட்டுக் கேட்பதன் மூலமே ரஜினி முக்கியமான ஒன்றைக் கண்டுபிடித்து, அதன்மூலம் ஒருவனின் பெற்றோர் பற்றிய விவரங்களை விநோதமாக இணைக்கிறார். படத்தில் நயன்தாரா ரஜினியுடன் பேசும் காதல் வசனங்கள் என்னவென்றால், தனக்குப் பிடித்தது மஞ்சள் நிறம், பிடித்த உணவு பாவ் பாஜி என்பதுமே. எல்லாவற்றையும் விட மிகப்பெரிய ஏமாற்றம், வில்லனாக நடித்த சுனில் ஷெட்டி. வில்லனாக இருக்கும் கதாநாயகனும் வில்லனும் வெகுநேரமாகச் சந்திக்காமல் இருப்பது சுவாரசியமானது தான் என்றாலும் சுவாரசியம் ஏற்படுத்தாத வில்லனை மன்னிக்க முடியாது. வில்லன் கையில் துப்பாக்கி இருந்தாலும், கைகளில் சண்டை போடவே விரும்புகிறார். வில்லன் சுனில் ஷெட்டி என்னைப்போல நிறைய தமிழ்ப் படங்களைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் 2020-ல் கூட இந்தப் பழங்கால உத்தியைப் பயன்படுத்துவது எரிச்சலடைய வைக்கிறது. தைரியமான இடைவேளையைக் கொண்டிருந்த இந்தப் படத்தின் சுவாரசியமற்ற முடிவு துளியும் ஈர்க்கவில்லை.  

இந்தப் படம் இருவரின் நடிப்புத் திறனை மட்டுமே நம்பி உள்ளது. முதலாவதாகத் தன் நடிப்பால் அக்கதாபாத்திரத்தை வலுவாக்கிய நிவேதா தாமஸ். அவருக்குத் தன் தந்தை ரஜினி மீது கொண்டுள்ள பிணைப்பு மிகவும் தீவிரத்துடன் உள்ளது. இந்த முக்கியக் கோணத்தைக் கொண்டே படம் நகர்கிறது. மற்றொன்று ரஜினியின் நடிப்பு. படம் முழுக்க ஆர்வமும், துடிப்பும் கொண்ட ரஜினியைக் காண்பது நிறைவாக இருக்கிறது. பழைய படங்களில் தென்பட்ட வசன உச்சரிப்பிலும் உடல் மொழிகளிலும் வேகம் குறைந்திருந்தாலும் ஈர்க்கும் விஷயங்கள் இன்னும் மீதமுள்ளன. நடை, சிரிக்கும்போது கண்களில் மின்னும் ஒளி, கோபத்தை வெளிப்படுத்த புருவத்தை உயர்த்துவது, சோகத்தைக் குறிக்க வேகமாகக் கண்சிமிட்டுவது போன்றவை நினைவில் நிற்கும் விதமாக அமைந்துள்ளன. பேட்ட, தர்பார் போன்ற படங்களின் மூலம் ரஜினியின் இந்த அம்சங்களை இயக்குநர்கள் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. உதாரணத்திற்கு இதில் ரஜினியின் மகள் பெயர், வள்ளி. என் வழி தனி வழி என்றொரு பாட்டும் உண்டு. பேட் போலீஸ் என்று ரஜினி சொல்வது புரியாதவர்களுக்காகவே, கெட்ட பையன் சார் நான் என்று அவரே சொல்கிறார்.

ரஜினியின் பழைய ஹிட் பாடல்களில் ஈர்க்கப்பட்டு அதே போல பாடல்களை உருவாக்குவதை அனிருத் மறக்கவில்லை. ரயில் நிலையத்தில் நடக்கும் மிகச்சிறந்த சண்டை காட்சிக்கும் பாடல் பயன்படுத்தியிருப்பது உற்சாகமூட்டுகிறது. சுமாராகப் படமாக்கப்பட்ட சும்மா கிழி பாடலில் - நான் ஆட்டோக்காரன், வந்தேன்டா பால்காரன் பாடல்களில் ரஜினி வேகமாக நடப்பதைப் பதிவு செய்த கேமரா இங்கும் உள்ளது. அதே போல, பாடலில் தத்துவ வரிகளும் உண்டு. (நேர்மை உனக்கிருந்தா ஸ்டைலோ ஸ்டைலு!) 

என்னைப் பொறுத்தவரை, பழைய படங்களில் இருந்த ரஜினியின் உடல்மொழிகளையும் வசனங்களையும் கொண்டு மட்டுமே கவர நினைப்பது இனியும் வேலைக்கு ஆகாது. வெகுகாலம் கழித்து பேட்ட இதைச் செய்தது. அப்போதே இதை விடுத்து அடுத்தக் கட்டத்திற்குச் செல்லவேண்டும் என என் விமரிசனத்தில் எழுதியிருந்தேன். அப்படி ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், அவரின் நடிப்பும், அவரால் மட்டுமே திரையில் ஏற்படுத்தக்கூடிய உணர்வையும் மட்டுமே சொல்ல முடியும். அதனால்தான் இந்தப் படத்தில், 500 ரூபாய்க்கும் குறைவான ஹோட்டல் செலவை ரஜினியும் நயன்தாராவும் பகிர்ந்து கொள்ள, பின்னர் டேட்டிங்கில் கஞ்சனாக இருந்ததற்காக ரஜினியை மகள் கண்டிப்பது என்னைக் கவர்ந்த காட்சியாக உள்ளது. குதித்தும் சிரித்தும் அவரது குழந்தைத்தனத்தை (ஒரு நடிகரின் அரிய திறன்) வெளிப்படுத்தும் அந்தக் காதல் மாண்டேஜ் காட்சிகளைக் காணுங்கள். ரஜினியை வைத்து இனி யாராவது காதல் படம் எடுப்பார்களா? காலம் செல்ல செல்ல, இவை எரிச்சலூட்டுவதை யாராலும் உணராமல் இருக்க முடிவதில்லை. கடந்த காலத்தைச் சுரண்டுவதை விட்டு விட்டு, மீதமுள்ள காலத்தில் நடப்பதைப் பார்ப்போமா?

தமிழில்: வினுலா 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com