குற்றம், தண்டனை மற்றும் மன்னிப்பு: மிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்பட விமரிசனம்

கோயமுத்தூரில் பெண்களை குறி வைத்து நிகழ்த்தப்படும் பல தொடர் கொலைகளைச் செய்கின்ற ஒரு சைக்கோவை இரண்டாண்டுகளாகப் போலீஸ் தேடி வருகிறது.
குற்றம், தண்டனை மற்றும் மன்னிப்பு: மிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்பட விமரிசனம்

நடிகர்கள் - உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன், ராம்,  ஷாஜி, சிங்கம் புலி, ராஜ், நரேன், பவா செல்லதுரை, ரேணுகா
ஒளிப்பதிவு : தன்வீர்
படத்தொகுப்பு : என்.அருண்குமார்
இசை    இளையராஜா
இயக்கம் - மிஷ்கின்

 

கோயமுத்தூரில் பெண்களை குறி வைத்து நிகழ்த்தப்படும் பல தொடர் கொலைகளைச் செய்கின்ற ஒரு சைக்கோவை இரண்டாண்டுகளாகப் போலீஸ் தேடி வருகிறது.  அந்த சைக்கோ யார், அவனுடைய பின்னணி என்ன என்பதை விரிவான ஒரு திரைக்கதையால் காட்சிப்படுத்துகிறது இப்படம். கொடூரக் குற்றவாளியான சைக்கோ, கதாநாயகியைக் கடத்துகிறான். கண் பார்வையற்ற கதாநாயகன் அவளைத் தேடிக் கண்டடைகிறானா? அவர்கள் இருவரும் என்னவாகிறார்கள் என்பதை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படத்தில் கூறுகிறார் இயக்குநர்.

கண் தெரியாத இசைக் கலைஞன் கெளதம் (உதய்நிதி) அவர் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஆர்ஜே தாகினி (அதிதி ராவ் ஹைதரி), இளம் வயதில் மனம் சிதைந்து சைக்கோபாத்தாக உருமாறிவிட்ட அங்குலி (ராஜ்), தொடர் கொலையைத் துப்புத் துலக்க உதவும் விபத்தில் வீல் சேரில் முடங்கிவிட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி கமலா தாஸ் (நித்யா மேனன்) இவர்களைச் சுற்றி ஒரு இருண்ட உலகத்தைப் படைத்து, அந்த இருளிலிருந்து வெளிச்சத்துக்குத் தன் திரைமொழியால் பாதை அமைத்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் உருவாக்கம், அதற்கேற்ற கச்சிதமான நடிகர்கள் தேர்வு, துல்லியமான ஒளிப்பதிவு, மனதை நெகிழச் செய்யும் இசை, சுவாரஸ்யமான கதையோட்டம் என சைக்கோவில் மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார்.

அங்குலிமால் எனும் கொடூர மனம் கொண்டவனுக்கும் கெளதம புத்தருக்கும் இடையே நடந்த ஒரு சம்பவம்தான் சைக்கோ படக் கதைக்கு பின்புலமாக அமைக்கப்பட்டிருக்கிறது. தவிர குற்றமும் தண்டனையும் உள்ளிட்ட உலக இலக்கியங்கள் யாவும் கூறும் ஒற்றை வரிச் செய்தியையும் மறைபொருளாக கொண்டுள்ளது. அன்பும், கருணையும் மட்டுமே மனிதரை உயர்த்தும் மந்திரங்கள். ஒரு மனிதன் மிருகமாக மாறுவதற்கும், புனிதராக உயர்வதற்கும் இடையே என்னவெல்லாம் இருக்க முடியும் என்பதைக் கூறுவதுதான் அங்குலிமாலின் கதை. சைக்கோவின் கதையும் இதுவேதான். 

கௌதம புத்தர் வாழ்ந்த காலகட்டத்தில் அங்குலிமால் என்றவன் வாழ்ந்து வந்தான்.  அவன் காண்பவர்களையெல்லாம் எக்காரணமும் இன்றி கொன்றொழிப்பவனாக இருந்தான். கொடூரக் கொலைகாரனான அவன் ஆயிரம் பேரை கொன்று அவர்கள் தலைகளை வெட்டுவேன் என்று சபதம் எடுத்திருந்தான். எத்தனை பேரை கொன்றோம் என்ற எண்ணிக்கை தெரிவதற்காக அவன் தான் கொன்ற மனிதனின் கட்டை விரலை வெட்டி, அவ்விரல்களை மாலையாக்கி கழுத்தில் அணிந்திருந்தான். அங்குலிமால் என்றால் விரல்களை மாலையாய் அணிந்திருப்பவன் என்றும் அர்த்தம் உண்டு. ரத்த வேட்கை அடங்காமல் உள்ளூரில் மட்டுமல்லாமல் வெளியூரிலும் பலரைக் கொன்று குவித்து தன் சபதத்தில் 999 பேரை கொன்று விட்டான். கடைசி நபராக தனது 1000-வது ஆளைக் கொல்ல வருடக் கணக்காகக் காத்திருந்தான் அங்குலிமால்.

ஒருநாள் அவ்வழியே வந்த புத்தர் அங்குலிமாலைப் பற்றி கேள்விப்படுகிறார். சீடர்கள் எவ்வளவு தடுத்தும் அதைக் கேளாமல் அங்குலிமாலை நேருக்கு நேர் சந்திக்கிறார். புத்தரின் தீட்சண்யத்தையும் ஒளியையும் கண்ட அங்குலிமால் திகைத்துவிட்டான். அவரது கருணை கொடூர மனம் கொண்ட அவனையே இளக்குகிறது. ஆனால் எளிதில் விட்டுக் கொடுக்க மனம் வராமல் அவரை கொல்லப் போவதில்லை என்றும் உடனடியாக அங்கிருந்து ஓடிப் போய்விடுமாறு கூறுகிறான். புத்தர் அமைதியாக அவனிடம் உன் சபதத்தை நிறைவேற்ற ஒரு தலை வேண்டுமெனில் என்னுடைய தலையை எடுத்துக் கொள், விரலை வெட்டி மாலையாக்கிக் கொள் என்கிறார். அதற்கு முன் எனது கடைசி ஆசையாக இந்த மரத்தில் உள்ளக் கிளையை வெட்டி எடு என்று கூறுகிறார். வேறுவழியின்றி அவன் உடனடியாக அதை வெட்டுகிறான். மீண்டும் அக்கிளையை மரத்தில் ஒட்டு என்றதும் திகைத்துச் செயல் இழக்கிறான். இது தன்னால் முடியாத செயல் என்று ஒப்புக் கொள்கிறான். அதன்பின் புத்தர் கூறிய மொழிகளைக் கேட்டு மனம் திருந்துகிறான் அங்குலிமால். புத்தர் அவனுக்குத் தீட்சை அளித்ததும் துறவி ஆகிறான். ஆனால் அதன் பின், அவன் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அவனை கல்லை வீசியெறிந்தும், உணவு பிச்சைக் கேட்க வருகையில் துன்புறுத்தியும் கொன்று விடுகிறார்கள். இறக்கும் தருவாயில் புத்தர் அவனைச் சந்தித்தார். கற்கள் மூடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அங்குலிமாலைப் பார்த்து புத்தர், ''ஒரு வினாடியில் ஒரு பாவி துறவியாக முடியும் என்பதை நீ நிரூபித்து விட்டாய். நீ ஒரு பாவியாக வாழ்ந்தாய். ஆனால் ஒரு துறவியாக இறக்கிறாய்” என்றார். அங்குலிமால் புத்தரின் பாதங்களில் வீழ்ந்து உயிரை விட்டான். ஒரு மனிதன் கொடூரமானவனாக இருக்கும் போது அவனைக் கண்டு அஞ்சிய உலகம், அவன் திருந்தி வாழும் சமயத்தில், மன்னிப்புத் தராமல் அவனைக் கொல்லத் துணிகிறது. இதுதான் உலக இயல்பு. ஆனால் அதையும் மீறி அன்பு ஒன்றே மிஞ்சுகிறது. அன்பு என்பது ஒருவர் கொடுத்து மற்றவர் பெறுவதாக இருக்கக் கூடாது. அன்பு எங்கும் எதலும் நிறைந்திருக்க வேண்டும். அன்பானது பூரணமாக இருக்க வேண்டும் என்பதே புத்தர் வழி. பெளதம் கூறும் அறவழியும் இதுதான்.

இனி சைக்கோ கதைக்கு வருவோம். அங்குலிமால் கதாபாத்திரம்தான் சைக்கோ கொலைகாரனான அங்குலி. அனாதை ஆசிரம் ஒன்றில் வளர்ந்து வரும் அவன் சிறுவயதில் செய்யாத ஒரு குற்றத்துக்காக ஆசிரியையால் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறான். உடல் மற்றும் மனரீதியாகவும் காயம்பட்ட அவன் அங்கிருந்து, தப்பியோட முயற்சிக்க, பிடிபட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படுகிறான். அவனை அங்கு வன்புணர்வு செய்கிறான் ஒரு மோசமான காவலன். இளம் வயதில் இப்படியான பல அதிர்ச்சிகளைச் சந்தித்த அவன் மனது திரிபு அடைகிறது. எவ்வாறோ வளர்ந்து பெரியவனாகும் அவனுக்குப் பெண்கள் மீது குறிப்பாக தங்கள் துறையில் வெற்றிப் பெற்று வலம் வரும் பெண்கள் மீதும், பாலியல் தொழில் செய்து வரும் பெண்கள் மீதும் கடுமையான வெறுப்பு ஏற்படுகிறது. சூழல் காரணமாக அன்பு மறுக்கப்பட்டவன், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவன், சக மனிதர்களால் இழிவு செய்யப்படுகிறவன் ஒரு கட்டத்தில் மனிதத் தன்மையை இழந்துவிடுகிறான். ஏதோ ஒரு தண்டனையில் அவனது உடலின் சிறு அங்கமான சுண்டு விரல் துண்டிக்கப்பட (அவை காட்சிப்படுத்தப்படவில்லை) பிறரின் அங்கத்தை வெட்டியெடுத்து அதை சேகரிக்கும் வினோத சைக்கோவாக மாறி, தொடர்ந்து பலரைக் கடத்தி மிகக் கொடூரமாகக் கொலை செய்து, போலீஸுக்கு சவால் விடும் வகையில் தலையில்லாத அவ்வுடல்களை ஆளரவற்ற பகுதிகளில் வீசி விடுகிறான். அவன் யாரென்று எந்த துப்பும் கிடைக்காத நிலையில் போலீஸ் குழம்பி, தேடி வருகிறது. இது ஒருபுறமிருக்க, கண் பார்வையற்ற ஒரு இசைக் கலைஞனான கெளதம், வானொலியில் ஆர்ஜேவாக பணிபுரியும் புத்திசாலிப் பெண்ணான தாகினியை மனதார நேசிக்கிறான். அவள் போகும் இடங்களுக்கு எல்லாம் தன் உதவியாளருடன் போகிறான். ஒரு கட்டத்தில் அவன்மீது அவளுக்கும் ஈர்ப்பு வரவே ஓரிடத்தில் அவனது வருகைக்காகக் காத்துத்திருக்கிறாள். ஆனால் கெளதம் வருவதற்கு முன், அங்கு கொலைகார சைக்கோ வந்துவிடுகிறான். அவளை மயக்கம் அடையச் செய்து கடத்தும் தருவாயில், அங்கு வந்த கெளதம் ஏதோ அசம்பாவிதம் நடப்பதை உணர்கிறான். தாகினியின் மோதிரம் கீழே விழுந்து கிடக்க, அவள் அங்கு வந்து அதன்பின் காணாமல் ஆனதை உணர்ந்து செயலற்று உடனடியாக போலீஸுக்குத் தகவல் அளிக்கிறான். அதன் பின் அவன் எப்படித் தன் காதலியை சைக்கோவிடமிருந்து மீட்கிறான், பார்வையற்ற ஒருவன் எப்படி இதைச் சாதிக்க முடியும் என்பதை விளக்குவதே சைக்கோவின் பின் கதை.

அங்குலி தன் கொலைவெறியைத் தீர்த்துக் கொள்ள தாகினியை கூர் தீட்டப்பட்ட கத்தியுடன் நெருங்கும் போது, தன்னை எப்படியும் இவன் கொல்லத் துணிந்துவிட்டான் என்றுணர்ந்த அவள் அமைதியாக புன்முறுவலுடன் தன் மரணத்தை எதிர்நோக்குகிறாள். மற்றவர்களைக் கொல்ல வரும் போது அவர்களிடமிருந்து அலறல்களையும் கெஞ்சுதல்களையுமே கேட்டுப் பழகியிருந்த சைக்கோ முதன்முறையாக ஒருத்தி தன்னைப் பார்த்து பயப்படாமல் இருப்பதைப் பார்த்து அவளுக்கு அத்தகைய துணிவு எப்படி வந்தது என்பதை அறிந்துக் கொள்ள ஆவலாகிறான். அதற்கு அவள் ‘இன்னும் 7 நாட்களில் எனக்குப் பிறந்தநாள். அதற்குள் கெளதம் வருவான். நான் உயிருடன் இருந்தால் என்னை இங்கிருந்து அழைத்துச் செல்வான். ஒருவேளை நான் செத்துவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவான்’ என்று நம்பிக்கையுடன் கூற அதிர்ந்து போகிறான் அங்குலி. அவளைக் கொல்லாமல் விடுத்து அவள் சொல்வது உண்மைதானா என்று பார்க்க முடிவெடுக்கிறான். அங்கிருந்த அந்த ஏழு நாட்களில் அவன் யார் என்றும், அவன் இப்படிப்பட்ட ஒரு குறை மனிதனாக மாற்றியது எதுவென்றும் அறிந்து கொள்கிறாள் தாகினி. ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக அவள் விலங்கிடப்பட்ட நிலையில் இருந்தாலும், அவளுக்கான உணவையும், சங்கில் செல்லும் அளவுக்கு சுதந்திரத்தையும் தருகிறான் அவன். மெளமாக அவனது செயல்களை அவதானிக்கும் அவள் அங்கிருக்கும் இன்னொரு பிணைக்கதையைக் கண்டு முதலில் அஞ்சுகிறாள். அவள்தான் அங்குலி சைக்கோவாக மாறக் காரணமானவள் என்றும் ஒருவரும் சைக்கோவாகப் பிறப்பதில்லை, சூழல்கள்தான் ஒருவனின் நடத்தையைத் தீர்மானிக்கிறது என்பதை புரிந்துக் கொண்டதும், மெள்ள அவன்மீதான பார்வை அவளுக்குள் மாறுகிறது.

ஒரு கட்டத்தில் அவன் மீதிருந்த அச்சம் அகலாத நிலையில், அவன் மீது கருணையும் உருவாகிவிட, ஒரு நொடி ஊசலாட்டத்தில் அன்பையே தேர்ந்தெடுக்கிறாள். அதன் காரணமாகவே இறுதி நொடியில் காதலன் தன்னை மீட்டுச் செல்லும் நிலையில், கைகால்கள் விலங்கிட்டுக் கிடந்த, அவனை விடுவிக்கக் கூடிய சாவியை அருகே எறிந்து விட்டுச் செல்கிறாள். காலம் காலமாக பூட்டிக் கிடந்த அவனது வலிகள், ரணங்களுக்கு அதுவே மருந்தாகிறது. அவனும் அங்கிருந்து தப்பிக்கிறான். அதன்பின் தொலைக்காட்சியில் தாகினி பேசுவதை தூரத்திலிருந்து கேட்ட அவன் மனம் நெகிழ்ந்து தன்னை மீதும் கருணைக் காட்ட ஓருயிர் உள்ளது என்றெண்ணி மனம் திருந்துகிறான். புத்தரின் தூய்மையான அன்பு எப்படி அங்குலிமாலின் ஆன்ம விடுதலையை சாத்தியபப்டுத்தியதோ, போலவே, தாகினியின் பேரன்பு அங்குலியின் உள்ளத்தில் உறைந்து கிடந்த வன்மத்தைத் துடைத்தெறிந்து அவனை மிருக நிலையிலிருந்து மனிதத்துக்கு மாற்றுகிறது. தான் செய்த குற்றங்களுக்கான தண்டனையை தனக்குத்தானே வழங்கிக் கொள்வதுடன், அவன் தன்னை மன்னித்துக் கொள்வதுடன் படம் நிறைவடைகிறது.  Love, Hope, Faith, Pain, Punishment, Regret, Forgiveness என்று கண்ணிகளால் பின்னப்பட்ட இக்கதை சொல்லும் தத்துவம் எதுவெனில் மெய் அன்பு ஒருபோதும் பொய்த்துவிடாது என்பதே.

பெளத்தம், கிருத்துவம் என மதங்கள் யாவும் போதிப்பது அன்பு ஒன்றைத்தான். ஆனால் அந்த அன்பின் பெயரில் நிகழும் துரோகங்களும், கொலைகளும் இம்மண்ணில் எண்ணிலடங்காதவை. அழகான ஒரு திரைமொழியில் மிஷ்கின் கூறுவது இக்கருத்தைத்தான். வெவ்வேறு அடுக்குகளில் பயணிக்கும் இக்கதையின் இன்னொரு அடுக்கு குழந்தைமை பற்றியது. குழந்தைகளை சுதந்திரமானவர்கள் சந்தோஷமானவர்களாகவும் வளர்த்தெடுத்தால் அவர்கள் நாளைய சமூகத்தின் சிந்தனைவாதிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், தத்துவ ஞானிகளாகும் மாறுவார்கள். மாறாக சிறு சிறு குற்றங்களுக்கும் பெரும் தண்டனைகள் அளித்து அவர்களின் சிறகுகளை முறித்துவிட்டால், அந்தப் பிஞ்சு மனத்தில் அத்தண்டனைகள் ஆழப் பதிந்துவிடும். குற்றமே அவர்களின் வாழ்முறையாகிவிடக் கூடும். மாறாக அவர்கள் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டி, திருந்துவதற்கான வாய்ப்பளித்து, நல்வழிகாட்டினால் நிச்சயம் அவர்கள் மனம் மாறிவிடுவார்கள். மன்னிப்பதுதான் ஒருவரை நெறிப்படுத்துதல்தான் ஆகச் சிறந்த செயல். தண்டனைகள் ஒருபோதும் குற்றங்கள் நடப்பதைத் தடுப்பதில்லை. மாறாக குற்றங்களின் முடிவற்றப் பாதையை அவை நிரந்தரமாகத் திறந்து விடுகிறது. 

உலகத் திரை மேதை ஆல்பிரட் ஹிட்ச்காக்குக்கு டைட்டில் கார்ட்டில் மரியாதை செலுத்தியதிலிருந்து தொடங்குகிறது மிஷ்கினின் திரை ஆளுமை. படத்தில் நம்மை மறக்கச் செய்வது மிஷ்கினின் ரசனை மிகுந்த காட்சிமொழியும், மனதின் அடியாழம் வரை ஊடுருவிச் செல்லும் இசைஞானி இளையராஜாவின் இசையும்தான். அறிமுக ஒளிப்பதிவாளர் தன்வீர் மிர்ரின் கேமரா கவிதையாக சில இடங்களிலும், காட்டுத்தனமாக சில இடங்களிலும் ஒளியையும் இருளையும் ஒரு படிமமாகவே மாற்றியிருக்கிறது. உன்னை நினைச்சு பாடலில் ஜோக்கர் பலூன் பறக்கவிடும் காட்சியாகட்டும், சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில், எட்ட இருக்கும் ஒருவரைத் தட்டியெழுப்ப தாகினி கையை நீட்ட முயற்சிக்கும் காட்சியாகட்டும், மொட்டை மாடியில் சைக்கோவின் வரவிற்காகத் தனியாகக் காத்திருக்கும் கெளதமின் மெளனமான காத்திருப்பாகட்டும், உயிரை உறைய வைக்கும் கொலைக்களன் காட்சிகளாகட்டும், ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஒளிவித்தைகளால் மந்திரஜாலம் செய்துள்ளார் தன்வீர். இது அவருக்கு முதல் படம் என்பதை நம்பமுடியவில்லை. உலகத் திரை மேதை ஸ்டான்லி குப்ரிக் குரூரத்தை அழகியலாகக் காட்சிப் படுத்த முடியும் என்பதை முதன்முதலில் திரையில் நிகழ்த்திக் காட்டியவர். அதையும் மிஞ்சியதாக சைக்கோவில் தன் தனித்திறமையை ஆழமாகப் பதித்துள்ளார் மிஷ்கின். அவ்வகையில் தமிழ்த் திரைப்படங்கள் உலகப் பட வரிசையில் இணைந்து கொண்டிருப்பதன் சாத்தியங்களை அதிகப்படுத்திய ஒரு படம் இதுவெனலாம்.

படத்தின் முதல் காட்சியில் தொடங்கிய அதிர்வலைகள் கடைசி வரை நீங்காதிருப்பதிருப்பது கூடுதல் சிறப்பு.  மேலோட்டமாக சைக்கோ ஒரு திரில்லராக இருந்தாலும், அதன் உள் அடக்கத்துக்காக கொண்டாடப்பட வேண்டிய படமாகிறது.  ஆனாலும் மிகையான வன்முறைக் காட்சிகள் மற்றும் திரைக்கதையில் ஒருசில இடங்களில் சறுக்கல்களால் இந்தப்படம் தனது நோக்கத்தினை இழக்கிறது. அன்பு கூறும் படமொன்றில் திரை முழுவதும் ரத்தத்தில் தோய்ந்திருப்பது நகைமுரண். முழுக்க முழுக்க திரை உருவாக்கத்துக்காக கொண்டாடப்பட வேண்டிய இப்படம், சில தொய்வுகளாலும், நிறைவு செய்யப்படாத கதைக் களனாலும், லாஜிக் மீறல்களாலும் தொய்வடைகிறது. குழந்தைகள், பெண் பார்வையாளர்கள் அல்லது தீவிர வன்முறைக்கு ஒவ்வாமை உள்ளவர்களால் இந்தப் படத்தைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது பெரும்குறை. உண்மையில் அனைவரும் பார்க்கக் வேண்டிய ஒரு கதையை, அதீத வன்முறைக் காட்சிகளால் பலமிழக்கச் செய்துவிட்டனர். ஆனாலும் திரை ரசிகர்களும், ஆர்வலர்களும் நிச்சயம் இந்தப் படத்தை புரிந்து கொண்டு அதற்குரிய அங்கீகாரத்தைத் வழங்குவார்கள். அவ்வகையில் தமிழ் சினிமாவை அடுத்தக்கட்ட நகர்வுக்கு உயர்த்திச் செல்லும் மற்றுமொரு படமென சைக்கோவைக் நிச்சயமாகக் கூறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com