ஓடிடியில் நல்ல தமிழ்ப் படம் எப்போது வெளிவரும்?: ‘பெண்குயின்' விமர்சனம்!

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் அதே தவறுகளைச் செய்தால் தமிழ் சினிமாவுக்கு எப்போதுதான் விடிவுகாலம் பிறக்கும்?
பெண்குயின் கீர்த்தி சுரேஷ்
பெண்குயின் கீர்த்தி சுரேஷ்

தனது மகனைக் கடத்தியவர் யார், அதற்கான காரணம் என்ன என்பதை ஆறு வருடங்கள் கழித்து கீர்த்தி சுரேஷ் மிகவும் சிரமப்பட்டுக் கண்டுபிடிப்பதுதான் பெண்குயின் படத்தின் கதை.

படத்தின் ஆரம்பக் காட்சிகள் மிகுந்த எதிர்பார்ப்பைத் தூண்டி விடுகின்றன. பல்வேறு புதிர்களுடன் தொடங்கும் படத்தின் பயணம் தனது பரபரப்பைத் தொடர்ந்து தக்கவைத்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. 

கதை முழுக்க கொடைக்கானலில் நடக்கிறது. ஒரு பார்வையாளன் கொடைக்கானலின் குளிரையும் அதன் ஆச்சர்யங்களையும் அனுபவிக்கும் விதத்தில் ஒளிப்பதிவு படத்தில் அற்புதமாக அமைந்துள்ளது. பரபரப்புச் சம்பவங்களுக்கு ஏற்றாற்போலவும் மிரட்டுகின்றன கேமராவின் கோணங்கள். டைட்டில் கார்டில் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைகிறது கார்த்திக் பழனி என்கிற ஒளிப்பதிவாளரின் பெயர். ஆனால் அவர் தான் தனது முதல் வாய்ப்பிலேயே படத்தை அதிகம் தாங்கிப் பிடித்துள்ளார். 

சந்தோஷ் நாராயணின் பின்னணி இசையும் கோலமே பாடலும் அருமை. நல்ல காட்சிகள் அமைந்திருந்தால் பின்னணி இசை இன்னும் பேசப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு காட்சியிலும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என சுவாரசியமற்ற, தர்க்கமில்லாத காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதால் படத்துடன் ஆரம்பத்திலிருந்து ஒன்ற முடியவேயில்லை. 

எதற்காக கீர்த்தி சுரேஷின் மகனைக் கடத்தினேன் என்று கடத்தல்காரர் சொல்லும் காரணம் வலுவாக இல்லை. இதை நம்பி எப்படி இந்தப் படத்தை உருவாக்கினார்கள்? அதற்கு முன்பு மருத்துவர் செய்கிற கடத்தல்களும் கூடத் தேவையில்லாமல் கதையைத் திசைதிருப்பி விடுகிறது. கதையின் அஸ்திவாரமே பலவீனமாக இருப்பதால் நல்ல திரைக்கதையும் அமையாமல் போய்விட்டது. 

நிறைமாதக் கர்ப்பிணியாக தனது நடிப்புத் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். முதல் கணவருடன் ஏற்பட்ட வேறுபாட்டால் இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார். கடத்தப்பட்ட முதல் குழந்தையைக் கண்டுபிடிக்க வேண்டும், இதற்கான அலைச்சலில் வயிற்றில் உள்ள குழந்தையைப் பத்திரப்படுத்த வேண்டும் என இருவித சிக்கல்கள். ஆனால் படத்தில் இவருக்கு மட்டும் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதால் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே ஓரங்கட்டப்பட்டுள்ளன. 

ஊரில் இத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டும் காவல்துறையின் ஈடுபாடு பெரிய அளவில் இல்லை. எல்லா ரகசியங்களையும் கீர்த்தி சுரேஷை முன்நின்று கண்டுபிடிக்கிறார். அவருடைய இரு கணவர்களுக்கும் கூட நல்ல காட்சிகள் இல்லை. நம் இயக்குநர்கள், பெரிய ஹீரோக்கள் படங்களில் செய்யும் அதே தவறுகளை கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் செய்தால் தமிழ் சினிமாவுக்கு எப்போதுதான் விடிவுகாலம் பிறக்கும்? 

படத்தில் தனது மகனை அடிக்கடித் தவறவிட்டு நம்மைக் கடுப்பேற்றுகிறார் கீர்த்தி சுரேஷ். ஆள் அரவமற்ற, ஆபத்தான இடங்களுக்கு எல்லாம் தனியாகவே செல்கிறார். நம்மை திடுக்கிட வைப்பதற்காக அடிக்கடி இம்சை செய்யும் கனவுக் காட்சிகள் வேறு! படம் முழுக்கப் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தன்னிஷ்டத்துக்குக் காட்சிகள் வளைக்கப்பட்டுள்ளன. அதுவும் கடைசியில் வெளிப்படும் மருத்துவர் தொடர்பான மர்மங்களும் காவலர்களின் பிடியில் இருந்தபோதும் அவர் கீர்த்தி சுரேஷிடம் தெனாவெட்டாகப் பேசுவது விநோதமாக உள்ளன. அந்த மருத்துவருக்குக் கடத்தல்காரரைப் பற்றி எப்படித் தெரியும் என்கிற கேள்விக்கும் விடையில்லை. 

இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக்குக்கு இது முதல் படம். கார்த்திக் சுப்புராஜ், கீர்த்தி சுரேஷ், சந்தோஷ் நாராயணன் என பெரிய படையின் ஆதரவு அவருக்குக் கிடைத்தாலும் பலமான கதை கிடைக்காதது நமது துரதிர்ஷ்டம். 

அதுசரி, ஓடிடியில் எப்போது ஒரு நல்ல தமிழ்ப் படத்தைக் காணப் போகிறோம்? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com