ஃபஹத் ஃபாசில் நடித்த ஜோஜி: எழுத்தின் வலிமை!

வேலையும் சரியாகச் செய்யத் தெரியவில்லை, கொலையும் சரியாகத் தெரியவில்லை இந்தக் கதாநாயகனுக்கு!
ஃபஹத் ஃபாசில் நடித்த ஜோஜி: எழுத்தின் வலிமை!

ஜோமோன், ஜாய்சன் என்கிற இரு சகோதரர்கள், ஓர் அண்ணி (பின்ஸி), வயதானாலும் பலசாலியாக இருக்கும் தந்தை குட்டப்பன், அரும்பு மீசை கொண்ட அண்ணனின் மகன் எனக் கேரள மலைக்கிராமத்தில் ஒரு பெரிய வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருக்கும் ஜோஜிக்கு அந்த வீட்டில் துளி மதிப்பில்லை. குதிரை வியாபாரத்தில் பணத்தை இழந்து வெட்டியாக இருப்பதால் அவரை எந்நேரமும் உதாசீனப்படுத்துகிறார் தந்தை, மட்டம் தட்டுகிறார். ஜோஜிக்குக் கோபம் வருகிறது. மனநிலை தடுமாறுகிறது. 

தந்தைக்குப் பெரிய ரப்பர் தோட்டமும் ஏராளமான செல்வமும் உண்டு. வயதானாலும் தன் சொத்துகளையும் மகன்களையும் தன் பிடிக்குள் வைத்துக்கொண்டிருக்கிறார். வாழ்க்கை ஒரே நொடியில் திசைமாறுகிறது. தன் சக்திக்கு மீறிய ஒரு வேலையில் தந்தை ஈடுபடும்போது உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டு விடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தையை மூத்த மகன் பொறுப்புடன் கவனித்துக்கொண்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறார். ஒருவழியாகத் தந்தையை வீட்டுக்கு மீட்டுக்கொண்டு வருகிறார். பக்கவாதம் ஏற்பட்டு சக்கர நாற்காலியில் இருக்கும்போதும் தந்தையின் பிடி தளரவில்லை. பணம் கேட்கும் மகன்களை வெறித்த கண்ணால் பார்க்கிறார். காசோலையில் கையெழுத்தை பழையபடி தெளிவாகப் போடுகிறார். சொத்தைப் பிரித்து பங்கிட்டுக் கொள்ள மகன்கள் தயாராக இருந்தாலும் குட்டப்பனை மீறி எதுவும் நடக்காது என்கிற நிலை. மகன்கள் செய்வதறியாது முழிக்கிறார்கள். சுயநலம் பாசத்தை மறைக்கிறது. தந்தையைக் கொல்ல திட்டமிடுகிறார் ஜோஜி. அதன் விளைவுகளை ஷேக்ஸ்பியர் எழுதிய மெக்பெத்தைத் தழுவி திரைக்கதை அமைத்திருக்கிறார் ஷ்யாம் புஸ்கரன். 

இயக்குநர் திலீஷ் போத்தனும் ஷ்யாம் புஸ்கரனும் மகேஷிண்டே பிரதிகாரம் படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கிறார்கள். அதனால் இப்படத்தில் திரைக்கதைக்கும் சின்னச் சின்ன உணர்வுகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

எளிமையான கதை, ஒரே வீட்டில், ஒரே இடத்தில் மட்டுமே நடக்கும் பெரும்பாலான காட்சிகள், அழுத்தமான கதாபாத்திரங்கள் எனக் கதைக்கான முழு நியாயமும் படத்தில் உள்ளது (மலையாளப் படங்கள் என்றாலே இது வழக்கம் தானே!).இதனால் கதையுடனும் அதன் கதாபாத்திரங்களுடனும் சுலபத்தில் ஒன்றிப் போய்விட முடிகிறது. அந்த வீட்டில் ஒரே ஒரு பெண். அண்ணி கதாபாத்திரம். ஆனால் அவர் அதிகம் பேசாமல் கதையின் முக்கியச் சம்பவங்களின் பின்னணியில் உள்ளார். ஃபஹத்திடம் அவர் சொல்கிற, மாஸ்க் போட்டுட்டு வெளிய வா என்கிற சாதாரண வசனம், அந்தக் காட்சிக்குத்தான் எவ்வளவு அர்த்தம் தருகிறது!

ஃபஹத் ஃபாசில் நடித்தால் அவர் நடிப்பை வியந்து பார்க்கும் தருணங்கள் கிடைக்காமல் போகாது. இதில் சின்னச் சின்ன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். கதையின் முக்கியமான கட்டங்களிலும் தன்னுடைய குட்டு உடைபடும்போது வெளிப்படுத்தும் முகபாவங்களிலும் நமக்கும் பதற்றத்தை ஏற்படுத்தி விடுகிறார் ஃபஹத் ஃபாசில். நடிப்புச் சவாலான, கடினமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இதுபோன்ற குறைந்த செலவில் குறுகிய காலத்தில் எடுக்கப்படும் ஒரு படத்துக்கு அவர் அளித்திருக்கும் ஆதரவு மலையாளத் திரையுலகை இன்னும் பல படிகள் மேலேறிச் செல்ல உதவும். என்னதான் தமிழ்ப் படங்கள் கேரளாவில் நன்கு ஓடினாலும் அதே பாணியில் ஜனரஞ்சமான படங்களை எடுக்க முயலாமல் ஈரான் படங்களின் பாணியில் தனித்துவமான, மண்ணின் கதையை, மக்களின் அசலான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் மலையாளத் திரையுலகம் தனித்து நிற்கிறது. காரணம், அக்கதைக்குப் பெரிய கதாநாயகர்கள் தரும் ஆதரவு.  

குட்டப்பனின் மரணத்தை வெளிப்படுத்தும் காட்சியில் திலீஷ் போத்தனின் பக்குவமான இயக்கம் வெளிப்படுகிறது (ரசிகர்கள் மீதுதான் எவ்வளவு நம்பிக்கை! இயக்குநர் நினைத்திருந்தால் இதை மட்டுமே ஐந்து நிமிடங்களுக்கு இழுத்திருக்கலாம். கூர்மையான படத்தொகுப்பு) ஆரம்பக் காட்சியில் கூரியரில் வரும் பார்சல், குட்டப்பனின் செல்வசாம்ராஜ்ஜியத்தையும் மலைக்கிராமத்தின் தோற்றத்தையும் அழகாகக் காண்பித்துவிடுகிறது. கதாநாயகி இல்லை, காதல் காட்சிகள் இல்லை, பாடல்கள் இல்லை, நகைச்சுவைக் காட்சிகளும் இல்லை.... இப்படிப்பட்ட ஒரு கதை என்பது இயக்குநருக்கும் நடிகர்களுக்கு மட்டுமல்ல ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் என பல்வேறு துறையினருக்கும் புதிய சவால்களைத் தருபவை. அனைவரும் சரியாகச் செய்திருக்கிறார்கள். கதை கோரும் உணர்வுகளுக்குப் பின்னணி இசை பெரும் துணையாக உள்ளது.

த்ரிஷ்யம் படத்தின் இன்னொரு முனை ஜோஜி. அதில் ஒரு கொலை செய்துவிட்டு துல்லியமான திட்டமிடல்களால் இரு பாகங்களாகத் தப்பித்துக்கொண்டிருக்கிறார் ஜார்ஜ்குட்டி, இங்கு ஜோஜி ஒரு சாதாரண ஆள். பெரிய அளவில் முறைகேடுகள் செய்யும் ஆர்வம் இருந்தாலும் அதைச் செயல்படுத்துவதில் சொதப்பி விடுகிறார். ஒரு கொலை செய்கிறோமே, இவ்வளவு பெரிய ஓட்டையை விட்டுச் செல்கிறோமே என யோசிப்பதில்லை. இதனால் அவர் செய்யும் கொலையால் குடும்பத்துக்குப் பலன் இருந்தாலும் அது சைக்கோத்தனமாக மாறும்போது குடும்பமும் கை கழுவி விடுகிறது. கடைசியில் தனி ஆளாக, காவல்துறையின் பிடிக்குள் செல்லும்முன்பு இன்னொரு காரியத்தைச் செய்துபார்க்கிறார் ஜோஜி. அதுவும் கடைசியில் தோல்வியே அடைகிறது. வேலையும் சரியாகச் செய்யத் தெரியவில்லை, கொலையும் சரியாகத் தெரியவில்லை இந்தக் கதாநாயகனுக்கு!

திரைக்கதையை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு ஜோஜி உருவாக்கப்பட்டாலும் சில உறுத்தல்கள் உண்டு. அந்தச் சிறுவன் எதற்காகத் துப்பாக்கியை வாங்குகிறான்? தந்தை மரணப்படுக்கையில் இருக்கும்போது அவரின் சொத்தைப் பறிக்க மகன்கள் இவ்வளவு ஆர்வமாக இருப்பது ஏன்? (மணி ரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் சில இடங்களில் வந்துபோகிறது) அது ஏன் மூன்று மகன்களிடம் தந்தை எப்போதும் உர்ரென்றே இருக்கிறார்? குட்டப்பன் குடும்பத்தைப் பற்றி அரசல்புரசலாக ஊரார் பேசுவது வசனமாகவே வெளிப்படுகிறது, அதற்குரிய காட்சிகள் படத்தில் இல்லை. கதாபாத்திரத்துக்கு மாறானது என்றாலும் ஜோஜி இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று தோன்றாமல் இல்லை. அவர் சட்டென்று மாட்டிக்கொண்டு விடுவதால் படமும் சட்டென்று முடிந்துவிடுகிறது.  

ஒரு நல்ல வேற்றுமொழிப் படத்தைப் பார்க்கும்போது எழும் எண்ணங்கள், மனக்குறைகள் தான் இவை. இந்தப் படம் பார்த்து முடிக்கும்போது இன்னும் அதிகமாகவே ஏற்படுகிறது. 

இந்தக் கதைக்கு பிரபல நடிகரான ஃபஹத் ஃபாசில் ஆதரவளிப்பது போல ஏன் தமிழ் சினிமா நடிகர்கள் நல்ல கதையில் நடிக்க முன்வருவதில்லை? இங்கு நல்ல கதைகளுக்குப் பஞ்சமில்லை, நல்ல படங்களை ரசிப்பதற்கான ரசிகர்களும் நிறையவே இருக்கிறார்கள். அதுபோன்ற படங்களை உருவாக்கும் இயக்குநர்களும் நம்மிடம் இல்லை எனச் சொல்ல முடியாது. ஆனால் அவர்களுக்குத் துணை நிற்கும் நடிகர்களும் இங்குள்ளார்களா? ஜோஜி படத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்திருக்காவிட்டால் எத்தனை பேருக்கு முதல் நாளிலேயே அமேசானில் பார்க்க ஆர்வம் ஏற்பட்டிருக்கும்? இயக்குநர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் இப்படிப்பட்ட ஓர் ஊக்கத்தை தமிழ் சினிமா நடிகர்கள் தருவது எப்போது? இதே படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் காதல் காட்சிகளும் கதாநாயகியும் பாடல்களும் இல்லாத ஆனால் நடிப்புக்குத் தீனி போடும் கதாபாத்திரத்தில் நடிக்க எந்தத் தமிழ் சினிமா பிரபலம் முன்வருவார்? இந்த முயற்சி கூட இல்லாவிட்டால் தமிழ்த் திரையுலகை எப்படி முன்னுக்கு நகர்த்த முடியும்? இன்றைக்கு ஓடிடியில் வெளியாகும் மலையாளப் படங்களுக்கு இந்திய அளவில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் அவர்களுடைய வியாபாரத்துக்குப் பல புதிய கதவுகள் திறந்திருக்கின்றன. மலையாளப் படங்களை சப்டைட்டில் உதவியுடன் பார்க்க ரசிகர்கள் தயாராக உள்ளார்கள். பான் இந்தியா என்கிற பெயரில் தமிழ், தெலுங்குப் படங்கள் எடுக்கப்பட்டாலும் உண்மையில் மலையாளப் படங்களே பான் இந்தியா படங்களாக உள்ளன. குறைந்த செலவில் எடுக்கப்படும் படங்களுக்கு இந்தியாவெங்கும் ரசிகர்கள் பெருகியுள்ளார்கள். இந்த நிலை தமிழ் சினிமாவுக்கும் கிடைக்க வேண்டாமா? தமிழ் சினிமாவில் ஜோஜி போன்ற ஓர் எளிமையான படம் சாத்தியமா? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com