சூழலியல் நகைச்சுவைக்கு உதாரணம்: 'திங்களாழ்ச்ச நிஷ்ச்சயம்' பட விமர்சனம்

அழகை மிகைப்படுத்திக் காட்டாமல், எதார்த்தத்தை அழகுப்படுத்தி காண்பிக்கும் கேரள சினிமாத் துறையில் முழு நீள சூழலியல் நகைச்சுவைத் திரைப்படமாக வென்று நிற்கிறது 'திங்களாழ்ச்ச நிஷ்ச்சயம்'.
திங்களாழ்ச்ச நிஷ்ச்சயம்' பட விமர்சனம்
திங்களாழ்ச்ச நிஷ்ச்சயம்' பட விமர்சனம்

'திங்களாழ்ச்ச நிஷ்ச்சயம்' அதாவது திங்கள்கிழமை நிச்சயதார்த்தம் என்பது தான் படத்தின் பெயர். படத்தின் பெயருக்கேற்ப எதார்த்தமான திரைக்கதையும், சூழலியல் நகைச்சுவையும் (Situational Comedy) சேர்ந்த கலைவையாக அமைந்துள்ளது இப்படம். 

புஷ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் சென்னா ஹெக்டே இயக்கத்தில் மனோஜ் கே.யூ., அஜிஷா பிரபாகரன், அனகா நாராயணன், அர்ஜூன் அசோகன் உள்ளிட்ட பலர் நடித்து அக்டோபர் 29-ஆம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியானது திங்களாழ்ச்ச நிஷ்ச்சயம்.

மூத்த மகள் காதல் திருமணம் புரிந்துகொண்டதால், இளைய மகளையாவது தான் நினைக்கும் ஆண் மகனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் நிட்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்யும் தந்தை, தனது மகளுக்கு நினைத்தபடி (திங்கள் கிழமை) நிட்சயதார்த்தம் செய்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. ஒரு நாள் நிகழ்வுகள் தான் படத்தின் திரைக்கதை.

வீட்டிற்கு எந்த குறையும் வைக்காத சிறந்த நடுத்தரக் குடும்பத் தலைவனாக தன்னை நினைத்துக்கொள்ளும் தந்தை (விஜயன்) கதாபாத்திரத்தில் மனோஜ் கே.யூ.. வீட்டின் குறைகளுக்கு கணவரிடம் சண்டையிட்டு இன்முகத்துடன் தனது பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் குடும்பத் தலைவி (லலிதா) கதாபாத்திரத்தில் அஜிஷா பிரபாகரன்.

அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். சுரபி, சுஜா, சுஜித். மூத்தவள் காதல் திருமணம் செய்துகொண்டதால், வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு. ஆனால் சொல்லிவைத்தாற்போல இளைய மகள் சுஜாவிற்கும் காதல், அதற்கு அடுத்த கடைக்குட்டி தம்பிக்கும் கல்லூரிப் பருவக் காதல். இந்த கடைக்குட்டியின் காதல் தான் இறுதிக்காட்சிகளின் அதகளம். 

இளைய மகளின் கருத்தையும் கேட்காமல் அவசர அவசரமாக நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்யும் தந்தையிடம், இந்த நிச்சயத்தில் விருப்பமில்லை என்று சொன்ன பிறகும் அதனை பொருட்படுத்தாமல் மகளை அதட்டி அனுப்புவது முதல், ’வீட்டில் உண்பதற்கு தட்டுகள் குறைவாக உள்ளது. அதனை வாங்க வேண்டும்’ என்று மனைவி கேட்கும்போது, ’ஒருவர் உண்ட பிறகு மற்றவர் உண்ணலாம்’ என்று மனைவியை  கட்டுப்படுத்து என்று தென்னிந்தியாவின் பழமைவாத தந்தையை சித்தரிக்க எடுத்துக்கொண்ட காட்சிகள் அற்புதமானவை. 

வீட்டில் பந்தல் போடுவது, சமைக்க பாத்திரங்கள் கொண்டுவருவது, வெளி மாநில வேலையாள்களிடம் வேலை வாங்க மொழி தெரியாமல் அவதியுறுவது என்று எதார்த்தமான காட்சிகள் மென்முறுவலை உண்டாக்குகின்றன. அவையாவும் நம் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்வை நிச்சயம் நியாபகப்படுத்துவதே இப்படத்தின் எதார்த்தமான திரைக்கதைக்கு எடுத்துக்காட்டு.

வீட்டிற்கு ஒவ்வொருவராக வரும் விருந்தினரின் கதாபாத்திரங்களும், அவர்கள் பேசும் வசனங்களும் சூழலியல் நகைச்சுவைக்கான சிறந்த களம். 

நிச்சயதார்த்த ஜாக்கெட்டுக்கு கொக்கி சரிசெய்ய செல்வதாகப் பொய்கூறி பல சவால்களைத் தாண்டிச் சென்றும் காதலனை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பும் காதலி, தனக்கு வேறு யாருடனோ நடைபெறும் நிச்சயதார்த்தத்திற்கு சமைக்க தனது காதலன் விறகு வெட்டிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுறும் காட்சிகள் சூழலியல் நகைச்சுவைக்கு சிறந்த உதாரணம். 

பின்புறமாக வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளலாம் என்று காதலி சொல்லும்போது, காதலியின் தந்தைக்காக காதலன் பயப்படுவது, வீட்டை விட்டு போகும்போது பெண்ணுக்கு ஏற்படும் குற்றவுணர்வு, ஒன்றுமில்லா விஷயத்திற்கு, பழைய சம்பவங்களை மேற்கோள் காட்டி சண்டையைப் பெரிதாக்கும் சொந்தங்களின் அதிங்கபிரசங்கித்தனம் என எதார்த்தம் மாறாத காட்சிகள் படம் முழுக்க நிறைந்துள்ளன. 

காதல் திருமணம் புரிந்தால் சொந்தங்களிடையே மரியாதை இருக்காது. கெளரவம் குறைந்துவிடும் என்ற கட்டமைக்கப்பட்ட சமூக பிம்பத்தை கடைசி 15 நிமிட காட்சிகள் சிரித்தபடியே நகைச்சுவையாக அடித்து நொறுக்குகின்றன. படத்தின் இறுதிக்கட்டம் சூழலியல் நகைச்சுவையின் உச்சகட்டம்.

காலம் மாற மாற நாமும் மாறித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை பிரசங்கமாக இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மெல்லிய இழையாக இயக்குநர் கையாண்டிருப்பது வரவேற்கத்தக்கது.

படத்தின் தொடக்கத்தில் சுஜாவை பெண் பார்க்க வரும் துபை மாப்பிள்ளை கேட்கும் கேள்விகளுக்கு சுஜா அளிக்கும் பதில்களே இயக்குநரின் சமூகப் பார்வையை நமக்கு படத்தின் ஆரம்பத்திலேயே உணர்த்திவிடுகிறது. இந்தக் காட்சி தான் இந்த படத்தின் முன்னோட்டமாகவும் (டிரைலர்) வெளியாகியது. 

ஸ்னீக் பீக் என்ற பெயரில் படத்தின் குறிப்பிட்ட காட்சிகள் வெளியாகி விளம்பரப்படுத்தும் இக்காலகட்டத்தில், ஒரு காட்சியையே டிரைலராக வெளியிட்ட இயக்குநரின் மாற்று சிந்தனைக்கும், தைரியத்திற்கும் பாராட்டுகள்.

படத்தில் பெரும்பாலும் புதிய நடிகர்களே. ஆனால் பாத்திரத்திற்கேற்ப அவர்களைத் தேர்வு செய்திருப்பது பலம். எதார்த்தம் ஒருகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தும். அதில் இந்த படமும் விதிவிலக்கல்ல. உங்கள் பொறுமையை நிச்சயம் சோதித்துப் பார்க்கும். ஆனால் ஒரு நிச்சயதார்த்த நிகழ்விற்கு நிச்சயம் அழைத்துச்செல்லும்.

காசர்கோடு அடுத்த கான்ஹங்காடு  பகுதியின் வட்டார வழக்கில் படம் முழுக்க வரும் வசனங்கள் அனைத்தும் பிளாக் ஹீயூமர் முயற்சிக்கு பலனளித்திருந்தாலும், எல்லா இடங்களிலும் அவை கைக்கொடுக்கவில்லை.

படத்தின் எழுத்துக்கு துணைபுரிந்த ஸ்ரீராஜ் ரவீந்திரன் ஒளிப்பதிவும் செய்ததால், காட்சிகள் அழகாக வடிக்கப்பட்டுள்ளன. இந்தவகை நகைச்சுவைப் படங்களுக்கு பின்னணி இசை முக்கியமானது. எதார்த்தத்தை சீர்குலைக்காத முஜீப் மஸ்ஜீத்தின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிக்க வைத்துள்ளன. 

பெரும்பாலான லாங் ஷாட்கள் இல்லாத இப்படத்தில், ஒரு வீட்டையே அதன் அறைகள் உள்பட முழுக்க உணரவைத்துள்ளார் படத்தொகுப்பாளர் ஹரிலால். இளைய தலைமுறைக்கேற்ப முகநூல் வீடியோ பதிவு மூலம் படத்தை முடித்து, தந்தைமார்களை மனம்கோணாமல் சிந்திக்க வைத்துள்ளார் இயக்குநர் சென்னா ஹெக்டே.

அழகை மிகைப்படுத்திக் காட்டாமல், எதார்த்தத்தை அழகுப்படுத்தி காண்பிக்கும் கேரள சினிமாத் துறையில் முழு நீள சூழலியல் நகைச்சுவைத் திரைப்படமாக வென்று நிற்கிறது 'திங்களாழ்ச்ச நிஷ்ச்சயம்'.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com