லிவ்-இன் உறவு, நீதிமன்றம் சென்றால்? : ஜி.வி. பிரகாஷின் 'பேச்சுலர்' திரை விமர்சனம்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள பேச்சுலர் படத்தின் திரை விமர்சனம்
லிவ்-இன் உறவு, நீதிமன்றம் சென்றால்? : ஜி.வி. பிரகாஷின் 'பேச்சுலர்' திரை விமர்சனம்

சதிஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பேச்சுலர்.

ஐ.டி. வேலைக்காக கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு வருகிறார் டார்லிங். அங்கு கோவை நண்பர்களுடன் மேன்சனில் தங்கியிருக்கிறார். ஒரு நண்பர்  மூலம் அறிமுகமாகும் சுப்பு என்ற பெண்ணுடன் நட்பு ஏற்படுகிறது. 

ஒருகட்டத்தில் இருவரும் லின்-இன் உறவுமுறையில் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் சுப்பு கருவுறுகிறார். கருவைக் கலைத்துவிடலாம் என்று டார்லிங் சொல்ல, சுப்புவுக்கு அதில் விருப்பமில்லை. இதன் காரணமாக இருவருக்குள்ளும் பிரச்னை உருவாக அது நீதிமன்றம் வரை செல்கிறது. இந்த பிரச்னையிலிருந்து டார்லிங் (ஜி.வி. பிரகாஷ்) எப்படி விலகுகிறார், அவருக்கும் சுப்பு (திவ்ய பாரதி)க்குமான உறவு என்ன ஆனது என்பதே பேச்சுலர் படத்தின் கதை. 

டார்லிங் என்ற இளைஞராக வரும் ஜி.வி. பிரகாஷுக்கு நடுத்தர குடும்பத்து இளைஞன் வேடம். அந்த வேடத்துக்கு அவர் மிகச் சரியாகப் பொருந்துகிறார். முதல் படத்திலேயே மிக அழுத்தமான வேடம் கதாநாயகி திவ்யபாரதிக்கு. வசனம் பேசும்போது திணறுவது தெரிந்தாலும் முடிந்தவரை தனது வேடத்தை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். 

பெங்களூரு மாநகரத்தில் ஐடி துறையில் பணிபுரியும் இளைஞர்களின்  வாழ்க்கை எனப் படம் மிக இயல்பாக துவங்குகிறது. அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் மிக தத்ரூபமாக இருந்தது. அதுவரை இயல்பாக சென்றுகொண்டிருந்த படம் திவ்யபாரதியும் ஜி.வி.பிரகாஷும் உறவில் இணையும்போது படம் தொய்வடைகிறது.  

திவ்ய பாரதியை ஜி.வி.பிரகாஷ் பார்க்கும் பார்வையிலேயே அவரது நோக்கம் என்ன என்று தெரிந்துவிடுகிறது. அதே போல ஜி.வி.பிரகாஷிடம், ''என்னை காதலிக்கிறாயா? ஊர்ப் பக்கமிருந்து வருகிறவர்கள் காதலை ரொமாண்டிசைஸ் பண்ணுவாங்க'' என பயந்த தொனியில் திவ்யபாரதி கேட்பார். இது  காதல் என்பதில் இருவருக்குள்ளும் உடன்பாடு இல்லை என்பது உணர்த்தப்பட்டு விடுகிறது. 

பின்னர் ஜி.வி. பிரகாஷ் ஊருக்குச் செல்லும் காட்சியில், அவர் சாதாரணமாக விடைபெற்றுச் செல்ல, ''மிஸ் யூ சொல்றேன். நீ கண்டுக்காம போற'' என திவ்யபாரதி கண்டிப்பார்  அந்தக் காட்சியிலேயே திவ்யபாரதிக்கு ஜி.வி. பிரகாஷ் மீது ஈர்ப்பு உருவானதும், ஆனால் ஜி.வி. பிரகாஷுக்கு அவர் மீது எந்தப் பிரியமும் இல்லை என்பதும் தெரியவந்து விடுகிறது.

இந்த காட்சிகளிலேயே இயக்குநர் சொல்ல வந்தது நமக்குத் தெளிவாக புரிந்துவிடுகிறது. இடையில் ஒரே பாடலில் அவர்கள் எவ்வாறு உறவில் இருக்கிறார்கள் என சொல்லிவிட்டு நேரடியாக பிரச்னைக்கு வந்திருந்தாலும் பெரிய வித்தியாசம் இருந்திருக்காது. 

இது ஒரு உண்மைக் கதை என்பதாகச் சொல்லப்படுகிறது. சம்பவங்களைக் காட்சிகளாக வரிசைப்படுத்துகிறார் இயக்குநர். ஆனால் அவை சுவாரசியமாக சொல்லப்படவில்லை. இரண்டாம் பாதியில் முனீஷ்காந்த்தின் வருகைக்கு பிறகு வரும் நகைச்சுவைக் காட்சிகள் மட்டும் படத்தை சுவாரஸியப்படுத்தின. இயக்குநர் மிஷ்கினின் வருகையும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. படம் 3 மணி நேரம் ஓடக் கூடியதாக இருக்கிறது. ஒரு எளிய கதைக்கு இந்த நீளம் அவசியம் தானா என்று தோன்றியது. 

இந்த மாதிரியான படங்களில் பார்வையாளர்களான நாம் யார் பக்கம் நிற்கிறோம் என்பது மிக முக்கியம். சுயநலமானவராகக் காட்டப்படும் ஜி.வி. பிரகாஷ் மீது வெறுப்பும், திவ்ய பாரதி மீது நமக்கு அனுதாபம் பிறக்கிறது. ஆனால் படமோ ஜி.வி. பிரகாஷ் கதாபாத்திரத்தை மையப்படுத்தியே இரண்டாம் பாதி படம் நகர்கிறது.

இந்த பிரச்னையில் இருந்து ஜி.வி.பிரகாஷ்  வெளியே வரவேண்டும் என்ற எண்ணம் ரசிகர்களுக்குத் துளியும் இல்லை. ஆனால், அவர் இந்த பிரச்னையில் இருந்து எவ்வாறு வெளியே வருகிறார் என்று தொடர்ந்து காட்டப்படுவது சலிப்பை ஏற்படுத்துகிறது.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு காட்சிகளை மிக இயல்பாக படமாக்கிய விதத்தில் நாம் நேரடியாக அங்கிருந்து பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். இசையமைப்பாளர் சித்து குமார் தனது பின்னணி இசையின் மூலம் தொய்வாக நகரும் காட்சிகளுக்கு உயிர்கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

இயக்குநர் சதிஷ் செல்வகுமார் காட்சிகளை வித்தியாசமாக படமாக்கும் விதத்தில் காட்டிய அக்கறையை திரைக்கதையில் காட்டியிருந்தால், ஒரு சுவாரசியமான படமாக இருந்திருக்கும் இந்த பேச்சுலர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com