முகப்பு சினிமா திரை விமரிசனம்
பிரியா பவானி சங்கரின்' பிளட் மணி' படம் எப்படி இருக்கிறது ?
By கார்த்திகேயன் எஸ் | Published On : 21st December 2021 10:37 PM | Last Updated : 21st December 2021 10:38 PM | அ+அ அ- |

குவைத்தில் தமிழர்கள் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. இருவரது தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இடையில் ஒருநாள்தான் இருக்கிறது. இருவரையும் காப்பாற்ற அவர்களது குடும்பத்தினரின் விடியோ மூலம் கோரிக்கை விடுக்கின்றனர். அந்த விடியோ செய்தி தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராக பணியாற்றும் பிரியா பவானி சங்கருக்கு கிடைக்கிறது. இருவரையும் காப்பாற்ற ஊடகத்தைப் பயன்படுத்த முடிவெடுக்கிறார் பிரியா பவானி ஷங்கர். அவர்களைக் காப்பாற்றினாரா இல்லையா என்பது தான் பிளட் மணி படத்தின் கதை.
பிரியா பவானி ஷங்கர், கிஷோர், மெட்ரோ சிரிஷ், சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். சர்ஜூன் கேஎம் இயக்கியுள்ள இந்தப் படம் நேரடியாக ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
28 மணி நேரத்தில் நடக்கும் கதை. குவைத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையில் குற்றம் செய்தார்களா? அவர்களை எப்படி பிரியா பவானி ஷங்கர் மீட்கிறார் என்று திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
குவைத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எப்படி தண்டிக்கப்படுவார்கள், அங்குள்ள சட்டத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து படத்தில் விரிவாக பேசியிருப்பது படத்தை சுவாரசியப்படுத்தியது. படத்தில் நம்பகத்தன்மையுடன் சொல்லக்கூடிய வாய்ப்பு இருந்தும் பெரும்பாலும் நாடகத்தன்மையுடன் நகர்கிறது.
ஒரு செய்தி தொலைக்காட்சி ஒரு குறிப்பிட்ட செய்திக்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்களா என்பது நம்பும்படியாக இல்லை. குறிப்பாக செய்தி தொலைக்காட்சியின் உரிமையாளர் சொல்லியும் ஆசிரியர் உறுதியாக நிற்பதற்கான காரணம் வலுவாக இல்லை.
சிறிய வயதில் அப்பாவை இழந்த பிரியா பவானி சங்கர், தன்னைப் போல ஒரு குழந்தை அப்பா இல்லாமல் வளரக் கூடாது எனக் களமிறங்குவது புரிகிறது. ஆனால் அவர் இந்த அளவுக்கு ஆபத்து நிறைந்த பணியை ஏற்பார் என்பதை நம்புவதற்கான காரணிகள் படத்தில் இடம்பெறவில்லை.
தமிழுக்குக் கொஞ்சம் புதுமையான கதை. அந்தக் கதையை முடிந்த அளவுக்கு சுவாரசியமுடன் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் காட்சிகளுக்கு பின்னணியில் இருக்கும் லாஜிக் மீறல்கள் பெரிய குறையாக இருக்கிறது.
பிரியா பவானி ஷங்கருக்கு உதவுகிறார் மெட்ரோ சிரிஷ். இருவருக்கும் பெரிதாக பழக்கமில்லாதது போல் காட்டப்படுகிறது. பிரியா பவானி ஷங்கர் துணிச்சலான முடிவுகளை எடுக்கிறார் என்பதைக் கூட ஒரு வகையில் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் சிரிஷ் ஏன் முயற்சிக்கிறார் என்பது ரசிகர்களுக்குக் கடத்தப்படவில்லையோ என்று தோன்றுகிறது. மேலும் இலங்கை போன்ற நாடுகளில் இவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியுமா எனவும் கேள்வி எழுகிறது.
லாஜிக் மீறல்களை ஒதுக்கி வைத்துப் பார்த்தால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீட்கப்பட்டார்களா இல்லையா என்ற பதற்றம் கடைசி வரை பார்வையாளர்களுக்கு நீடித்திருப்பது படத்தை சுவாரசியப்படுத்தியிருக்கிறது.
இது ஒன்றரை மணி நேர படம் என்பது கூடுதல் சிறப்பு.