சினிமாத்தனம் 2.0: ஜெயம் ரவியின் பூமி விமர்சனம்

தமிழன், தமிழ் இனம் எனக் காட்சிகளிலும் பாடலிலும் உசுப்பேற்றுகிறார்கள்.
சினிமாத்தனம் 2.0: ஜெயம் ரவியின் பூமி விமர்சனம்


நாசாவில் வேலை பார்க்கும் தமிழ்நாட்டு விஞ்ஞானி ஜெயம் ரவி. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை வாழ வைத்து அங்கு மரங்களை வளர்த்து விவசாயமும் செய்யும் திட்டப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது நடுவில் தன் சொந்த மண்ணுக்குத் திரும்புகிறார். அங்கு விவசாயிகளும் விவசாயமும் படும் பாட்டைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். வேலையைக் கைவிட்டு, ஒரு லட்சியத்துடன் சொந்த ஊருக்குத் திரும்புகிறார். பன்னாட்டு நிறுவன முதலாளியுடன் நேரடியாக மோதி தன் நாட்டு வளத்தைக் காப்பாற்றுகிறார்.

இயற்கை விவசாயம், இயற்கை வளத்தைப் பாதுகாப்பது, பன்னாட்டு நிறுவனங்களின் சதி, அவர்களுக்குத் துணை போகும் அரசியல்வாதிகள் என சமகாலப் பிரச்னைகளைக் கொண்டு ஒரு கதை அமைத்து அதை ஆழமான கருத்துகளுடனும் ஆவேசமான வசனங்களுடனும் சொல்ல முயன்றுள்ளார் இயக்குநர் லக்‌ஷ்மண். இந்தக் கதையை ஒரு நல்ல திரைக்கதையாகவும் உணர்வுபூர்வமான, புத்திசாலித்தனமான காட்சிகளாகவும் கொண்ட படமாகவும் மாற்றியிருந்தால் ரசிகர்களுக்குப் புதிய அனுபவம் கிடைத்திருக்கும். பதிலாக செயற்கையான காட்சிகளும் சத்தில்லாத துணைக்கதாபாத்திரங்களும் படத்தைப் பலவீனமாக்கி விடுகின்றன. 

ஒரு உத்வேகத்துடன் ஊருக்குத் திரும்பும் ஜெயம் ரவி, முதல் வேலையாகக் கதாநாயகியுடன் காதலில் ஈடுபடுகிறார். இதனால் கதையின் மீது ஆரம்பத்தில் உண்டான ஆர்வம் இதனாலேயே உடனடியாகக் குறைந்து விடுகிறது. 

ஒருவழியாகக் கதைக்கு மீண்டும் திரும்புகிறார் ஜெயம் ரவி. மரபணு மாற்றப்பட்ட விதைகளால் ஊரில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஃபேக்டரிகள் தண்ணீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் எளிதில் கிடைப்பதில்லை. தண்ணீர் பத்தாமல் பயிர்கள் கருகுவதால் இழப்பீடு கேட்கிறார்கள் விவசாயிகள். விவசாய நிலங்கள் வீட்டு நிலங்களாக மாறுகின்றன. விவசாயிகளின் எண்ணிக்கைகளும் குறைகின்றன. இதையெல்லாம் பார்த்துக் கொதித்துப் போகிறார் ஜெயம் ரவி.

அரசிடம் இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராடுகிறார்கள். தடியடி நடத்தி, வெடி வைத்து காவல்துறை கூட்டத்தைக் கலைக்கிறது. விவசாயத்தை விட்டு வாட்ச்மேன் வேலைக்குப் போகிறேன் என்று கதறுகிறார் விவசாயி தம்பி ராமையா. பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை செய்துகொள்கிறார்.  

தம்பி ராமையாவின் தற்கொலையைக் குடும்பப் பிரச்னைக்கான தற்கொலை என்கிறார் விவசாயத்துறை அமைச்சர் ராதாரவி. துக்க வீட்டில் அமைச்சருடன் விவாதம் செய்கிறார் ஜெயம் ரவி. அதைத் தொலைக்காட்சிகள் நேரலை செய்கின்றன. இளைஞர்கள் செல்போனில் ஜெயம் ரவியின் ஆவேசத்தைப் பார்க்கிறார்கள். 

மரபணு மாற்றப்பட்ட விதைகளால் இயற்கை பாழாகிறது, 15 வருடங்களுக்கு முன்பு 10 அடியில் தண்ணீர் கிடைத்தது. இப்போது 800 அடியில் கூட நீர் கிடைக்கவில்லை என்று குமுறுகிறார் ஜெயம் ரவி. ராப் பாடலின் பின்னணியில் விவசாயம் செய்ய களமிறங்குகிறார்.

ஜெயம் ரவியுடனான மற்றொரு சந்திப்பில் விவசாயிகளால் நாட்டுக்கு நஷ்டம், பன்னாட்டு (வணிக) நிறுவனங்களால் தான் நாட்டுக்கு லாபம் என்கிறார் விவசாயத்துறை அமைச்சர். சொந்த மண்ணையும் விவசாயத்தையும் காக்க நாசா வேலையை உதறுகிறார் ஜெயம் ரவி.

மீண்டும் ஊருக்குத் திரும்பும்போது விமான நிலையத்திலேயே இளைஞர்கள் கைத்தட்டி வரவேற்கிறார்கள். முதல் வேலையாக நாட்டு விதையைத் தேடி முதுமலைக் காட்டுக்குச் செல்கிறார். நாட்டு விதைகளைக் கொண்டு இயற்கை விவசாயம் செய்கிறார்.   

5 மாதங்களில் 2 ஏக்கரில் 6 லட்சத்து 22 ஆயிரம் வருமானம் ஈட்டுகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவசாயிகள் முன்னிலையில் தனது சாதனையை விவரிக்கிறார். சுற்றுச்சூழலையும் பாதிக்காமல் வருமானம் வருவதற்கு விவசாயம் சிறந்தது என்கிறார். ஜெயம் ரவியின் பின்னால் விவசாயிகள் திரள்கிறார்கள். பாரம்பரிய விதைத் திருவிழா நடத்துகிறார். அங்கு ஒரு குளறுபடி செய்கிறார் வில்லன். இதனால் ஜெயம் ரவியைக் காவல்துறை தாக்குகிறது. ஹெலிகாப்டரில் இருந்து வில்லன் ரோனித் ராய் வருகிறார். ஜெயம் ரவியை மிரட்டுகிறார். நீங்கள் எல்லோரும் விவசாயம் செய்தால் என் தொழில் என்னவாவது என்று கேட்கிறார். என்னை உயிருடன் விட்டுவைத்தால் உனக்குத்தான் சிக்கல் என்கிறார் ஜெயம் ரவி. சவாலை ஏற்கிறார் வில்லன். 

இதன்பிறகு கதையில் சினிமாத்தனங்கள் இன்னும் அதிகமாகி ரசிகர்களைச் சோதிக்கின்றன. வில்லனும் ஜெயம் ரவியும் போனிலேயே பேசி உறுமிகிறார்கள். வில்லன் என்ன தடை செய்தாலும் அதை உடைத்துக் காட்டுகிறார் ஜெயம் ரவி. சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, சதீஷ் எனப் பலர் இருந்தும் ஜெயம் ரவியைத் தவிர யாருக்கும் கதையில் பங்களிப்பு இல்லை. இதனால் எல்லாக் காட்சிகளிலும் ஜெயம் ரவியே தோன்றுகிறார் (அவருடைய 25-வது படம்). இடைவேளைக்குப் பிறகு தனியாகக் காட்சிகள் இல்லாத கதாநாயகி நிதி அகர்வால், கும்பலில் ஒருவராக எல்லாக் காட்சிகளிலும் தோன்றுகிறார். படத்தில் நகைச்சுவை இல்லை. ஆனால் தமிழன், தமிழ் இனம் எனக் காட்சிகளிலும் பாடலிலும் உசுப்பேற்றுகிறார்கள். வாட்சப் ஃபார்வேர்டுகள் வசனங்களாக வந்து கொண்டே இருக்கின்றன.  

ஜெயம் ரவி முதலில் விவசாயிகளைத் திருத்துகிறார், பிறகு வேலையிழந்ததால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகப் பேசும் இளைஞர்களின் மனத்தை மாற்றுகிறார், அவர்களையும் விவசாயத்தின் பக்கம் திருப்புகிறார், கடைசியாக ஜெயம் ரவியை நம்பி அனைத்துத் தமிழர்களும் மனமாற்றம் அடைகிறார்கள். படத்தில் ஜெயம் ரவி செய்வது விவசாயம் 2.0 என்றால் பூமி படம் சினிமாத்தனம் 2.0.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com