காதலைக் கொண்டாடும் ’புரோ டாடி’: திரைவிமரிசனம்

மோகன்லாலின் வயதிற்கேற்ப கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிப்பில் தான் ஒரு இளைஞன் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்துள்ளார்.
காதலைக் கொண்டாடும் ’புரோ டாடி’: திரைவிமரிசனம்

’மனிதன் எந்த அளவிற்கு வன்முறையில் ஈடுபடுகிறானோ அதைவிடக் கூடுதலாக காதலை ஏந்திக் கொள்கிறான்’ என்பதற்கு ஏற்ப மலையாளத்தில் ‘புரோ டாடி’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

படத்தின் ஆரம்பக் காட்சியில் ஜானின்(மோகன்லால்) மகனை குரியனின்(லாலு அலெக்ஸ்) மகளுக்குத் திருமணம் செய்து வைக்க  இரண்டு பெற்றோர்களுக்கும் ஆசை இருந்தாலும் மகன் ஈஷோவுக்கும்(பிரித்விராஜ்) மகளான அன்னாவுக்கும்(கல்யாணி ப்ரியதர்ஷன்) ஒருவர் மீது ஒருவருக்கு பெரிய விருப்பம் இல்லை. இயல்பான பேச்சுவார்த்தைகளுடன் சந்திப்பை முடித்துக் கொள்கிறார்கள்.

பெங்களூருவில் பணிபுரியும் ஈஷோ ஒரு பெண்ணுடன் லிவ்விங் டு கெதரில் இருக்கிறான். ஒருநாள் அப்பெண் கர்ப்பமாக இருப்பது உறுதியாகிறது. வீட்டில் எப்படிச் சொல்வது என இருவரும் குழப்பமடைகிறார்கள். அப்போது, தந்தை ஜானின் அழைப்பு வருகிறது. பயத்துடன் வீட்டிற்குச் செல்லும் ஈஷோவிற்கு ஜான் பெரிய ‘டிவிஸ்ட்’ ஒன்றை வைக்கிறார். 

லிவ்விங்கில் இருந்த பெண் யார்? ஜான் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்ன என்பதுடன் தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் தலைமுறை பிரச்னைகளை, இன்றைய காதலர்கள் வாழ்க்கையை அணுகும் விதத்தை அழகான திரைக்கதையின் மூலம் ‘ப்ரோ டாடி’-யை உருவாக்கியிருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பம் பொறுமையைச் சோதித்தாலும் அடுத்தடுத்த திருப்பங்கள், நகைச்சுவைக் காட்சிகள் மூலம் 2.40 மணி நேர திரைப்படத்தை ரசிக்கவைக்கும்படி உருவாக்கியுள்ளனர். 

படத்தில் நடித்த அனைவரின் கதாப்பாத்திரங்களும் தேவைக்கு அதிகமாக இல்லாமல் சரியாக எழுதப்பட்டுள்ளது. ’ஹாப்பி’ என்கிற கதாப்பாத்திரத்தில் வரும் சௌபின் சாகிர் தன் உடல்மொழியால் சிரிக்க வைக்கிறார். 

மோகன்லாலின் வயதிற்கேற்ப கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிப்பில் தான் ஒரு இளைஞன் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்துள்ளார். குறிப்பாக, மோகன்லால் வெட்கப்படும் காட்சிகள் அனைத்தும் மீண்டும் ஒருமுறை பார்க்கும் அளவிற்கு அழகாக எடுக்கப்பட்டுள்ளது.

மகனாக ஒரு தந்தையுடன் உரையாடும் பிரித்விராஜ் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன.

மோகன்லாலின் ஜோடியாக மீனாவும், நாயகி கல்யாணி பிரியதர்ஷனும் காதல் காட்சிகள் உயிரோட்டமான நடிப்பை வழங்கியிருப்பது படத்தின் பலங்களில் ஒன்று. லாலு அலெக்ஸின்  நடிப்பு எதார்த்தமாக இருக்கிறது.

பெரிய திரைப்படம் என்பதால்  சில இடங்களில் அதற்கே உரிய திரைக்கதை பலவீனங்கள் சோர்வடைய வைக்கின்றன. இருப்பினும் இயக்குநராக பிரித்விராஜ் அடுத்தடுத்த காட்சிகளில் படத்தை திறமையாக கொண்டு சென்றுள்ளார்.

அபிநந்தன் ராமானுஞ்சத்தின் நேர்த்தியான ஒளிப்பதிவு, தீபக் தேவின் பின்னணி இசை படத்தைவிட்டு வெளியேற்றாமல் ஒன்றவைக்கின்றன.

முன்பு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான ‘லூசிஃபர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து  ‘புரோ டாடி’-யில் இணைந்த  இக்கூட்டணி மீண்டும் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளனர்.

புரோ டாடி - ஹாட்ஸ்டார் வெளியீடு

இயக்கம்: பிரித்விராஜ் சுகுமாரன்

தயாரிப்பு: ஆண்டனி பெரும்பாவூர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com