பார்வையாளர்களை ‘சுழல்’ உள் இழுப்பது எவ்வாறு? - குறுந்தொடர் விமர்சனம்

சின்ன கதையாக இருந்தாலும் ஒருகட்டத்திற்கு மேல் நடந்த கொலையை யார் செய்திருப்பார்கள் என  வேறுவேறு  முகங்களை சந்தேகிக்கச் செய்து பின் முற்றிலும் தொடர்பில்லாத....
பார்வையாளர்களை ‘சுழல்’ உள் இழுப்பது எவ்வாறு? - குறுந்தொடர் விமர்சனம்

‘ஓரம் போ’,  ‘வ குவாட்டர் கட்டிங்’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட தனித்துவமான களத்தில் திரைக்கதை அமைத்து வெற்றி பெற்ற இயக்குநர்களான இணையர்கள் புஷ்கர்-காயத்ரி எழுத்தில் உருவாகியிருக்கிறது  ‘சுழல்’ தொடர்.

உதகையில் சாம்பலூர் என்கிற ஊரில் இயங்கிவரும் சிமெண்ட் தொழிற்சாலை திடீரென ஒரு இரவில் தீப்பிடித்து எரிகிறது. விபத்தைப் பார்த்த முதல் ஆளாக பார்த்திபன் (சண்முகம்) இருப்பதாலும் முன்பகை காரணமாகவும் ஆலை முதலாளியின் மகன்  ஹரிஷ் உத்தமன் (திரிலோக் வாட்டே) பார்த்திபனே தீ வைத்திருப்பார் என சந்தேகித்து காவல்துறையிடம் புகார் அளிக்கிறார். இதற்கிடையில் விபத்தில் காயமடைந்தவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு வீடு திரும்பும் பார்த்திபன் தன் மகள்(நிலா) காணாமல் போனதை அறிகிறார்.

பின், விபத்து விசாரணைக்கு காவல் உதவி ஆய்வாளரான நாயகன் கதிர் (சக்கரை) பார்த்திபனை கைது செய்து அழைத்துச் சென்ற சில மணி நேரங்களில் தன் தங்கை காணாமல் போனதை அறிந்த பார்த்திபனின் முதல் மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் சாம்பலூருக்கு வருகிறார். 

அதே நேரம் காவல் ஆய்வாளரான ஷ்ரேயா ரெட்டியின் (ரெஜினா) மகன் நண்பர்களுடன் மூணாறுக்குச் செல்வதாகக் கூறி தான் இருக்கும் இடத்தைப் பற்றிய குறிப்பையும் அனுப்பிவருகிறார். ஒருகட்டத்தில் மகனின் செல்போன் அணைத்து வைக்கப்படுகிறது. காணாமல்போன சண்முகத்தின் மகளுக்கும் ரெஜினாவின் மகனுக்கும் இடையே என்ன தொடர்பு? அவர்கள் எங்கு இருந்தார்கள்? சிமெண்ட் ஆலைக்குத் தீ வைத்தது யார்? என பல முடிச்சுகளுடன் திரைக்கதை நகர்கிறது. 

தொடர் நெடுகிலும் தமிழகத்தின் முக்கிய திருவிழாக்களின் ஒன்றான அங்காள பரமேஸ்வரிக்கு நடத்தப்படும் மயானக் கொள்ளைக் காட்சிகளைத் தத்ரூபமாக காட்சிப்படுத்தியதில் இயக்குநர்களின் ஈடுபாடு தெரிகிறது. படுத்த நிலையிலிருக்கும் அம்மன் உருவத்தை செய்து இறுதிநாளில் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட உடல்களின் எலும்புகளைத் தோண்டியெடுத்து சாமிக்கு படைப்பது வழக்கம். இந்தத் தொடரிலும்   மயானக் கொள்ளையை பிரதானமாக வைத்து யாரும் யாரைப் பற்றியும் முழுமையாக அறிந்து வைத்திருக்க முடியாது என்பதைச் சொல்லும் விதமாக  ‘சுழல்’ ஒரே ஊரிலிருக்கும் மனிதர்களின் குணங்களில் சுற்றிவருவதைப் போன்ற திரைக்கதையை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். தொடர் முழுவதும் - முடிவு வரையிலும் மயானக் கொள்ளைத் திருவிழாவும் தொடருகிறது. 

ஊகிக்கக்கூடிய கதையாக இருந்தாலும்  நடந்த கொலையை யார் செய்திருப்பார்கள் என  வேறுவேறு  முகங்களைக் சந்தேகிக்கச் செய்து அதற்கு முற்றிலும் தொடர்பில்லாத கதாபாத்திரத்தைக் காட்டி திருப்புமுனையை ஏற்படுத்தியதில் வென்றிருக்கிறார்கள். குறிப்பாக, புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் கலைக்குழுவின் தெருக்கூத்து காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

தொடரில் ஒவ்வொரு பாகத்தின் நீளத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் மீது கதிர் காதல் கொள்ளும் காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம்.

எல்லாவற்றையும் தாண்டி நம் குழந்தைகள் நெருங்கிய உறவுகளால்தான் மோசமான பாதிப்புகளையும் கொடுமைகளையும் சந்திக்கிறார்கள் என்பதை உணர்த்துவதுதான் இத்தொடரின் இலக்காக இருந்துள்ளது. அதை இயக்குநர்கள் பிரம்மா - அனுசரண் கூட்டணி மிகச் சரியாகக் கடத்தியிருக்கிறார்கள்.

நல்ல கதாபாத்திரங்களில் நடித்துவந்த இளங்கோ குமரவேலை (குணா) இத்தொடரின் திருப்பத்திற்கு சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர். நிலாவாக நடித்துள்ள கோபிகா ரமேஷ்,  ஃபெட்ரிக் ஜான்சன் (அதிசயம்), ஹரிஷ் உத்தமன் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.  சில காட்சிகளிலேயே தோன்றினாலும் தொடர்ந்து வரும் இயக்குநர் சந்தான பாரதி (கோதண்டராமன்) மனதில் நிற்கிறார்.  தன்னுடைய நக்கல் முகத்தைத் தவிர்த்து புதிய பரிணாமத்தில் கோபமும் இழப்பும் கொண்ட தந்தையாக பார்த்திபனும் பெண் காவல் அதிகாரிக்கான மிடுக்கான தோற்றத்தில் ஷ்ரேயா ரெட்டியும் ஒட்டுமொத்தக் கதையும் சுமந்துள்ளனர். இனி ஷ்ரேயா தமிழ் சினிமாவில் மீண்டும் வலம் வருவார் என எதிர்பார்க்கலாம்.

சுழல் தொடருக்கு திரைக்கதை மட்டுமே பெரிய பலம் எனக் கூறிவிட முடியாதபடி முருகேஸ்வரனின் ஒளிப்பதிவும் சாம் சி.எஸ்.ஸின் இசையமைப்பும் பெரிய துணையாக உள்ளன. அம்மன் ஊர்வலம், மயானக் கொள்ளை மற்றும் தெருக்கூத்துக் காட்சிகளில் ஒளிப்பதிவு அபாரம்.

‘குற்றம் கடிதல்’ போன்ற இயல்பான திரைப்படத்தை எடுத்த பிரம்மா, கிருமி பட இயக்குநர் அனுசரண் இருவரும் தங்களால் நெடுங்கதைப் படங்களையும் சிறப்பாக இயக்க முடியும் என முத்திரை பதித்திருக்கிறார்கள்.

தொடக்கத்தில் மெதுவாக நகர்வதைப் போலத் தோன்றினாலும் பின்னர் பார்வையாளர்களைத் தன்வயப்படுத்தி முழுவதுமாக உள்ளே இழுத்துக்கொண்டுவிடுகிறது சுழல்!

‘சுழல் - தி வெர்டக்ஸ்’ அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com