சைக்கிளில் வந்த அதே இடத்தில்...! நெகிழும் ராஜமௌலி

இந்திய சினிமா ரசிகர்களின் ஏக எதிர்பார்ப்புக்குள் இருக்கிறது "பாகுபலி 2.' ஹைதராபாத்தைத் தொடர்ந்து தமிழ் ரசிகர்களுக்காகவும்
சைக்கிளில் வந்த அதே இடத்தில்...! நெகிழும் ராஜமௌலி

இந்திய சினிமா ரசிகர்களின் ஏக எதிர்பார்ப்புக்குள் இருக்கிறது "பாகுபலி 2.' ஹைதராபாத்தைத் தொடர்ந்து தமிழ் ரசிகர்களுக்காகவும் பிரமாண்ட ஆடியோ விழாவை சென்னையில் அரங்கேற்றியுள்ளது படக்குழு. மின்னும் மேடையில், மிளிரும் நட்சத்திரங்கள் பங்கு கொண்ட விழாவின் தொகுப்பு இது...

முதன் முதலாக பேச வந்த நாசர், "பாகுபலி' படக் கதையை ஒன்றரை மணிநேரம் ராஜமௌலி எனக்குச் சொன்னார். சொன்னதை சொன்ன மாதிரி எடுத்தால் தான் படம் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். சொன்ன மாதிரியே படமாக்கி காட்டிவிட்டார்.   ஏனென்றால், தனக்கு நம்பிக்கை வரும் வரைக்கும் கதையை யாருக்கும் சொல்லமாட்டார் ராஜமௌலி. அதுமட்டுமில்லாமல் படம் எடுப்பது ஒருவகையில் சுலபம். அதை மார்க்கெட்டிங் செய்வதுதான் ராஜதந்திரம். அதையும் தெளிவாகச் செய்கிறார் ராஜமௌலி. இன்னும் நிறைய "பாகுபலி' வர வேண்டும்'' என தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார் நாசர். 

அடுத்து வந்த சத்யராஜ், தனக்கே உரிய பாணியில் பேசினார். ""ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை... அந்த மாதிரிதான், ராஜமௌலி கைய வச்சா அது ராங்கா போனதில்லை... ஏனென்றால், இவர் 11 படம் இயக்கியுள்ளார். எல்லாமே ஹிட். வாள் பயிற்சியில் தொடங்கி எல்லாவற்றையும் இயக்குநரே கற்றுக் கொள்வார். இந்தப் படத்தில் நடிப்பது பிக்னிக் போகிற மாதிரிதான். இந்தப் படத்தை ஆங்கிலப் படத்தோடு ஒப்பிட்டு பேசுவது தவறு. இது நம் மண் சார்ந்த படம்'' என்றார் சத்யராஜ். 

"பல வருட உழைப்பு இந்தப் படத்தின் பின் இருக்கிறது. ராஜமௌலி சார் இயக்கம் பற்றிப் பேசுகிற அளவுக்கு நான் பெரிய இயக்குநர் எல்லாம் கிடையாது. டிரெய்லரிலேயே தெரிகிறது இதன் பிரமாண்டம். இந்தப் படத்தை எப்படி இயக்கியிருப்பார் என்று நினைத்தாலே, பைத்தியம் பிடிக்கிறது'' என்று சுருக்கமாக பேசி முடித்தார் தனுஷ். 

பலத்த கைதட்டல்களுக்கு இடையே பேச வந்தார் ரம்யா கிருஷ்ணன். "படையப்பா' படம் என் கேரியரில் ரொம்ப முக்கியம். என்னை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்த படம் அது. அதைத் தாண்டி மிகப்பெரிய படம் வரும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. "பாகுபலி'யின் சிவகாமி, நீலாம்பரியை மறக்கடித்து விட்டது. இந்த மாதிரி வாய்ப்பு எல்லா நடிகைகளுக்கும் கிடைக்காது. "மகேந்திர பாகுபலி...' என்று அவர் உரக்கச் சொல்லவும் அரங்கமே அதிர்ந்தது. 

அடுத்து வந்த தமன்னாவுக்கும் அதே அரங்கம் அதிர கைதட்டல். "பாகுபலி'யின் கதையைக் கேட்கும் போது எனக்குள் ஓர் எண்ணம். இந்தப் படத்துக்காக எனக்கு விருது கிடைக்கவில்லை என்றால், வேறு எந்தப் படத்துக்கு நமக்கு கிடைக்கப் போகிறது என்று நினைத்தேன். ஆனால், இந்தப் படத்தில் நடித்ததே எனக்கு விருது கிடைத்த மாதிரி தான் இப்போது நினைக்கிறேன். விருதுகளை விடப் பெரியது இந்தப் படம். என்றுமே ராஜமௌலி சாரோட மிகப்பெரிய ரசிகை. என் வாழ்க்கையில் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது.'' என்று முடித்தார் தமன்னா. 

"நிச்சயமாக எல்லோருக்குமே இந்தப் படம் பிடிக்கும். தேவசேனா கதாபாத்திரத்தை நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அப்படியொரு வலிமையான பெண் கதாபாத்திரம் கிடைத்ததே ரொம்ப சந்தோஷம். திரைக்கதை மேல் இருக்கிற நம்பிக்கைதான் இதன் பெரிய பலம். உங்களைப் போல் நானும் காத்திருக்கிறேன்'' என நம்பிக்கையுடன் பேசி முடித்தார் அனுஷ்கா.

நினைவுகளை கிளறும் விதமாக இருந்தது ராஜமௌலியின் பேச்சு. "1991 - 92-ஆம் கால கட்டத்தில் சென்னையில்தான் இருந்தேன். கே.கே நகரில் இருந்து இந்த நந்தனம் ஒய்.எம்.சி.ஏ கிரவுண்டுக்கு சைக்கிளில் வருவோம். இவ்வளவு வருஷத்துக்கு பின் இப்போது இதே கிரவுண்ட்டில் இவ்வளவு பேர் முன்பு, என் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது. தேங்க் யூ ராணா அண்ட் தமன்னா. ரம்யா கிருஷ்ணன் மேம், சத்யராஜ் சார், நாசர் சார், அண்ட் ஸ்வீட்டி எல்லோருக்கும் பெரிய பெரிய தேங்க்ஸ். எல்லோருக்கும் நன்றிகள் பல. இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் பற்றி என் அப்பா அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். அந்த சுவாரஸ்யத்தை அப்படியே ரசிகர்களுக்கு கடத்த வேண்டும் என்று நினைத்தேன்'' என நெகிழ்வாகப் பேசி விழாவை முடித்து வைத்தார் ராஜமௌலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com