சர்வதேச மேடைகளை அலங்கரிக்கும் இரண்டு தமிழ் படங்கள்!

கமர்ஷியல், காதல் கதைகளில் தொடர்ந்து நடித்து வந்தவர் மாதவன். ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கியவர்
சர்வதேச மேடைகளை அலங்கரிக்கும் இரண்டு தமிழ் படங்கள்!

கமர்ஷியல், காதல் கதைகளில் தொடர்ந்து நடித்து வந்தவர் மாதவன். ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கியவர், மீண்டும் திரும்பிய போது திரைக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக இவருக்கு ஹிந்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தநிலையில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் படத்தை இயக்கி வருகிறார். இதில் நம்பி நாராயணனாக நடித்தும் வருகிறார். சில காட்சிகளின் படப்பிடிப்பு பாரீஸில் நடைபெற்று வருகிறது. இதில் சிம்ரன், மாதவனுடன் கைகோர்த்துள்ளார். சிறுவயது மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறார் சிம்ரன். மேலும், இதுபற்றி மாதவன் தனது இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் அவர், திரு மற்றும் இந்திரா இருவரும் இப்போது மிஸ் அண்ட் மிஸஸ் நம்பி நாராயணனாக என்று பதிவு இட்டிருக்கிறார். இப்படத்தில் இவர்கள் நடிக்கும் கதாபாத்திரப் பெயரைக் குறிப்பிட்டு இந்தப் பதிவை மாதவன் இட்டிருக்கிறார். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் மாதவன் மற்றும் சிம்ரன் இருவரும் சேர்ந்து கடைசியாக நடித்தனர். 15 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் இருவரும் சேர்ந்துள்ளனர். தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் உருவாகி வருகிறது. 

***

சிந்துபாத்', "மாமனிதன்', "லாபம்', "துக்ளக்' என அடுத்தடுத்த படங்களில் இயங்கி வருகிறார் விஜய் சேதுபதி. சிந்துபாத் வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், மற்ற படங்களின் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் முதன் முறையாக இப்படத்தை இயக்குகிறார். நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார். இந்தக் கதையின் மையமாக சர்வதேச அளவிலான பிரச்னை ஒன்றும் பேசப்படவிருக்கிறது. மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக இசக்கி துரை தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பழனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் முதல் காட்சியை கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. 

சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த "சூப்பர் டீலக்ஸ்', "சர்வம் தாளமயம்' இந்த இரு படங்களும் சர்வ தேச மேடைகளை அலங்கரிக்க இருக்கிறது. திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி நடித்த "சூப்பர் டீலக்ஸ்', கடந்த மார்ச் மாதம் வெளியானது. தியாகராஜன் குமாரராஜா இயக்கிய இப்படம், விரைவில் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதை தியாகராஜன் குமாரராஜா இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கனடாவில் மான்ட்ரீல் நகரில் நடக்கும் சர்வதேசப் பட விழாவில் திரையிட "சூப்பர் டீலக்ஸ்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதே போல் இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஜி வி பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த படம் "சர்வம் தாளமயம்'.இப்படம் "சர்வதேச பனோரமா' பிரிவில், 2019-ஆம் ஆண்டுக்கான 22-ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

இரண்டு வருடத்துக்கு முன் வெளியான "சிங்கம் 3' படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த ஸ்ருதிஹாசன் அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை. அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வந்த நிலையில், திடீரென்று காதலரைப் பிரிந்து இருக்கிறார். இதையடுத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார் ஸ்ருதி. எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் "லாபம்' படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ரீஎன்ட்ரி ஆகிறார். மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருக்கும் நிலையில் அவருக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. டோலிவுட் ஹீரோ ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதியைக் கேட்டனர். இப்படத்தை கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். சம்பளமாக ஒன்றரை கோடி தர வேண்டும் என்று ஸ்ருதி கேட்டதால் தயாரிப்பாளர் அதிர்ச்சி ஆகிவிட்டாராம். அவ்வளவு சம்பளம் கட்டுபடியாகாது; வேறு ஹீரோயினை பாருங்கள் என தயாரிப்பாளர் சொல்லிவிட்டார். ஆனால் ஸ்ருதிதான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறாராம் ஹீரோ ரவி தேஜா.

அமலாபால் நடிப்பில் ரத்னகுமார் இயக்கியுள்ள படம் "ஆடை'. இந்த படத்துக்கு வெளியிடப்பட்ட முதல் பார்வை போஸ்டரே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆடைக்குப் பதிலாக பேப்பரைச் சுற்றிக் கொண்டு ஆபாசமான வகையில் அமலாபால் போஸ் தரும் காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் படத்தினை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பியதாகவும் அங்கு படத்துக்கு பெரிதும் எதிர்ப்பு கிளம்பியதாகவும் கூறப்படுகிறது. படத்தில் ஆபாசக் காட்சிகள் இருப்பதாலும் குறிப்பிட்ட சில வசனங்களுக்காகவும் "ஏ' சான்றிதழ் தான் தர முடியும் என தணிக்கைக் குழு கூறியிருக்கிறது. யு/ஏ சான்றிதழ் பெற தயாரிப்பு தரப்பு முயன்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் படத்திற்கு "ஏ' சான்றுதான் கிடைக்கும் என தெரிகிறது. நினைத்தது நடக்கவில்லை என்பதால் படக்குழு சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com