காஜல் அகர்வால் தயாரித்து நடிக்கும் படம்!

ஸ்ரீதேவி மறைந்து ஒரு வருடம் ஆகி விட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி, துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் குளியலறையில் நீரில் மூழ்கி ஸ்ரீதேவி இறந்தார்.
காஜல் அகர்வால் தயாரித்து நடிக்கும் படம்!

ஸ்ரீதேவி மறைந்து ஒரு வருடம் ஆகி விட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி, துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் குளியலறையில் நீரில் மூழ்கி ஸ்ரீதேவி இறந்தார். அப்போது மும்பையில் படப்பிடிப்பில் இருந்தார் அவரது மூத்த மகள் ஜான்வி கபூர். அதுதான் அவர் நடித்து வந்த முதல் படம். மகளின் சினிமா பிரவேசத்தை பார்க்காமலே ஸ்ரீதேவி மறைந்தார். இந்நிலையில் கடந்த வாரத்தில் ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையிலுள்ள அவரது வீட்டில் அஞ்சலி கூட்டம் நடந்தது. அன்றைய தினம் தாயின் நினைவு நாளில் தனது சுட்டுரையில் அவர் கூறும்போது, "எனது இதயம் கனமாகிப் போயுள்ளது. ஆனால் அதில் அம்மா நீ இருப்பதால் நான் சிரித்தபடி வாழ்ந்துகொண்டிருக்கிறேன்' என தெரிவித்துள்ளார். இந்த டிவிட், ரசிகர்களை உருகச் செய்துள்ளது.

**

சிகிச்சை முடிந்து, சென்னை திரும்பியுள்ளார் விஜயகாந்த். மக்களவைத் தேர்தல் கூட்டணி சூடு பிடித்திருக்கும் வேளையில், அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார் ரஜினி. 

"இப்போது அமெரிக்கா சென்றுவிட்டு நல்ல ஆரோக்கியத்துடன் வந்திருக்கிறார். பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. நல்ல மனிதர். அவர் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்தச் சந்திப்பில் துளி கூட அரசியல் இல்லை'' என்று விஜயகாந்த் உடனான சந்திப்பு குறித்து ரஜினி தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரஜினி - விஜயகாந்த் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விஜயகாந்தின் கன்னத்தில் தட்டிக் கொடுத்து, வணக்கம் வைத்துக் கிளம்புவது போல் அந்த வீடியோ இருந்தது. 

இந்த வீடியோ பதிவு குறித்து இயக்குநர் சேரன் கூறியிருப்பதாவது: "இந்த மனிதநேயம்தான் ரஜினியிடம் எனக்குப் பிடித்த முதல் விஷயம். அவரின் தழுவலும் அவர் விஜயகாந்தின் கன்னத்தில் தொடும் உணர்வும் ஆயிரம் அர்த்தங்களைச் சொல்கின்றன. கண்ணீர் வரவைக்கும் வீடியோ. தூர இருந்து உங்களை ரசிக்கிறேன் மதிக்கிறேன். அரசியல் தாண்டி... நீங்கள் நீடூழி வாழ்க'' என்று தெரிவித்துள்ளார் சேரன். 

**

நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. மன்மோகன் சிங் வாழ்க்கை படத்தையடுத்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை படம் உருவாகி வருகிறது. அதே போல் எம்ஜிஆர் வாழ்க்கை படமாகிறது. அந்த வரிசையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம் உருவாகிறது. இப்படத்தை உருவாக்குவதில் இயக்குநர்கள் விஜய், பிரியதர்ஷனி, பாரதிராஜா, ஆகியோருக்கிடையே போட்டி எழுந்துள்ளது.

பாரதிராஜா படத்திற்கான ஸ்கிரிப்ட் உருவாக்கி வரும் நிலையில் விஜய், பிரியதர்ஷினி படங்களை தொடங்கிவிட்டனர். பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை படத்துக்கு "தி அயர்ன் லேடி' என பெயரிடப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா 71-வது பிறந்த நாளையொட்டி தொடக்க விழா நடந்தது. விஜய் இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை சரித்திர படத்துக்கு "தலைவி' என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிக்காக 9 மாதம் ஆராய்ச்சி பணிகளை இயக்குநர் விஜய் மேற்கொண்டதுடன் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்கிடம் நோ அப்ஜெக்ஷன் சான்று பெற்றிருக்கிறாராம் இயக்குநர்.

தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த "பொம்மலாட்டம்' படத்தின் மூலம் திரையுலகுக்கு வந்தவர் காஜல் அகர்வால். தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி இடத்தில் உள்ளார். தற்போது இவர் முதல் முறையாக படம் தயாரிக்கிறார். பிரசாந்த் வர்மா இயக்குகிறார். நானி, காஜல் அகர்வால் நடித்த "ஆ' என்ற படத்தை இயக்கிய அவர், தற்போது தெலுங்கில் "தட் இஸ் மகாலட்சுமி என்ற குயின்' இந்திபட ரீமேக்கை இயக்கி வருகிறார். இதில் தமன்னா நடிக்கிறார். காஜல் அகர்வால் தயாரித்து நடிக்கும் படமும் தெலுங்கில் உருவாகிறது. ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பில் இருக்கும் அவர், இந்தியா திரும்பியவுடன் இப்படம் குறித்து அறிவிக்க உள்ளார். 

**

முண்டாசுப்பட்டி' ராம் இயக்கத்தில் வெளியான படம் "ராட்சசன்'. விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இப்படத்தின் ரீமேக் உரிமைகளைப் பெற தயாரிப்பு நிறுவனங்களிடையே பெரும் போட்டி நிலவியது. முதல் ரீமேக் தெலுங்கில் உருவாகவுள்ளது. இந்த படத்தை ரமேஷ் வர்மா இயக்குகிறார். விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்கிறார். அமலாபால் வேடத்தில் அவரே நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் தமிழில் "ஆடை', "அதோ அந்த பறவை' போல, ஹிந்தியில் ஒரு படத்தில் அவர் நடித்து வருகிறார். 

இதனால் இதில் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து கொடி படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் இதில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். குறுகிய கால தயாரிப்பாக இந்த படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com