மெல் கிப்சனின் மறக்க முடியாத படங்கள்! ஹாக்ஸா ரிட்ஜ் 

போரின் கொடுமைகளையும், எதிரியை கொல்வதற்குள் எத்தனை பேரை இழந்து போகிறோம்.
மெல் கிப்சனின் மறக்க முடியாத படங்கள்! ஹாக்ஸா ரிட்ஜ் 

ஹாலிவுட்டில் அதிகம் விரும்பப்படுகின்ற இயக்குநர்களில் ஒருவர் மெல் கிப்சன். தி மேன் வித்தவுட் எ ஃபேஸ், பிரேவ் ஹார்ட், தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட், அபோகலிப்டோ மற்றும் ஹாக்ஸா ரிட்ஜ் ஆகிய ஐந்து படங்களை இதுவரை இயக்கியுள்ளார். அபோகலிப்டோ இயக்கிய பின்னர் பத்து ஆண்டுகள் பிறகுதான் ஹாக்சா ரிட்ஜை மெல் கிப்சன் இயக்கினார். 2016-லம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்திற்கு எடிட்டிங், சவுண்ட் மிக்சிங் ஆகிய பிரிவுகளில் இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன.  

மெல் கிப்சன் இயக்கும் திரைப்படங்களில் வன்முறை சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் வன்முறை, ரத்தம், போர் இவை வேண்டாம் என்று பேசும் திரைப்படம் ஹாக்ஸா ரிட்ஜ். இதுவரை நாம் எத்தனையோ போர் சார்ந்த திரைப்படங்களைப் பார்த்திருப்போம். ஆனால் போரின் கொடூரங்களை இந்தளவுக்கு தத்ரூபமாக, ரத்தமும் சதையுமாக போர்க் காட்சிகளாக பாத்திருக்க முடியாது. போர் நடக்கும் இடத்துக்கே பார்வையாளர்களை அழைத்துச் சென்றுள்ளார் மெல் கிப்சன்.

இப்படத்தின் கதாநாயகனாக ஆண்ட்ரூ க்ராஃபில்ட் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக டெசா பால்மர் நடித்திருக்கிறார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை மிகவும் அழுத்தமாக படமாக்கம் செய்திருக்கிறார் மெல் கிப்சன். ஆயுதம் ஏந்த மறுக்கும் ராணுவ வீரன் ஒருவரின் கதை இது.   இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ராணுவத்தில் போர் மருத்துவராக சேர்ந்து, எவ்வித ஆயுதமும் இல்லாமல் 75 பேரின் உயிரைக் காப்பாற்றிய டெஸ்மன்ட் டாஸ் என்ற ராணுவ மருத்துவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் ஹாக்ஸா ரிட்ஜ்.

டாஸ் சிறு வயதில் தம்பியுடன் சண்டை போடும்போது அவனை ஆக்ரோஷமாகத் தாக்கி ரத்தம் வரும் வரையில் அடித்துவிடுகிறான். அவனது அப்பா அவனை இழுத்து அடிக்க வர, அம்மா காப்பாற்றி அவனை காப்பாற்றுகிறாள்.  அவனுக்கு கடும் குற்றவுணர்ச்சி ஏற்பட, அவனுடைய அம்மா இறைவனிடத்தில் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டால் போதும் என்பதை புரிய வைக்கிறாள். தம்பி குணமான பின் டாஸ் கிறுஸ்துவ மதத்தில் தீவிரமான நம்பிக்கை வைக்கத் தொடங்குகிறான். சர்ச் சார்ந்த வேலைகளில் அதிக ஈடுபாட்டுடன் வாழ்கிறான். டாஸ் ஒரு சமயம் அடிபட்ட ஒருவனை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கையில் இரண்டு விஷயங்களை தனக்காக தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.

ஒன்று அவனது வருங்கால மனைவி அங்கு நர்ஸாக வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறான். இரண்டாவதாக உயிர் காக்கும் தொழிலான மருத்துவத்தை தேர்ந்தெடுக்க முடிவெடிக்கிறான். ராணுவத்தில் மருத்துவராக செயல்பட முடிவெடுத்து காதலியிடமும், முன்னாள் ராணுவ வீரரான தனது தந்தையிடம் விடைபெற்று கிளம்புகிறான்.

ராணுவப் பயிற்சி முகாமில் அவனுக்கு பலவிதமான சோதனைகள் ஏற்பட்டாலும், அவன் தனது கொள்கைகளை ஒருபோதும் யாருக்காக விடவில்லை. வேத புத்தகத்தைத் தொட்ட கரங்களால் ஆயுதத்தைக் கையால் தொட மாட்டேன் என்ற உறுதியான நிலைப்பாடுதான் அது. ஒரு உயிரையும் கொல்ல நமக்கு உரிமை இல்லை என்பதுதான் அவனது கோட்பாடு. இதற்காக அந்த ராணுவ முகாமில் சக வீரர்கள் அவனை பலவாறு இம்சிக்கின்றனர்.

உயரதிகாரிகள் ஆயுதப் பயிற்சி எடுத்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவனை ராணுவ கோர்ட் வரை இழுக்கின்றனர். இந்த வழக்கில் டாஸ் வெற்றி பெற்று ஒருவாறு போரில் கலந்து கொள்கிறான். 

ஜப்பானியர்களுக்கு எதிராக நடந்த அப்போரில் நாலாபக்கம் எதிரிகள் சூழ அடிபட்டு விழும் வீரர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, களத்திலிருந்து அப்புறப்படுத்துவதுதான் டாஸின் வேலை. மனம் பதைபதைக்க அவன் அதைச் செய்கிறான். ஹாக்ஸா ரிட்ஜ் என்று வீரர்கள் பெயரிட்ட குன்றில் நூலேணி அமைத்து அங்கு பதுங்கியுள்ள ஜப்பானியர்களை ஆவேசமாகத் தாக்குகின்றனர். இருதரப்பிலும் பலத்த சேதங்கள். ஒரு மருத்துவராக நம்பிக்கை இழக்காமல் டாஸ் தன் கடமையைச் செய்கிறான்.

இரண்டாவது நாள் போரில் பல வீரர்கள் காயம்பட்டிருக்க, டாஸின் வேலை அதிகரிக்கிறது. கையில் துப்பாக்கி இல்லாமல் போர் நடந்த இடத்தில் ஊர்ந்து சென்றும், துப்பாக்கி, பீரங்கி வெடிகளிலிருந்து தப்பித்தும் அவன் காயம்பட்டவர்களைக் கண்டடைகிறான். நம்பிக்கைச் சொற்கள் கூறி அவர்கள் உயிரைக் காப்பாற்றுகிறான். அன்றைய தினத்தின் கடைசி முற்றுகைக்குப் பிறகு நூலேணியிலிருந்து இறங்கி அவனது படைகள் ராணுவ வாகனத்தில் திரும்பிச் சென்றுவிட டாஸ் மட்டும் அங்கு மிஞ்சியிருக்கும் தனது படையிலிருந்து யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்று பார்க்க, ஹீனமான குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் சில வீரர்களை நூலேணியில் கயிறு கட்டி கீழ் இறக்குகிறான்.

கீழே  பாதுகாப்புக்காக பின் தங்கியிருந்த இரண்டு வீரர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கிறது. ராணுவ வாகனத்தை திரும்ப அழைத்து மேலேயிருந்து தொடர்ந்து கீழ்  வந்து கொண்டிருக்கும் காயம்பட்ட வீரர்களை மருத்துவமனை முகாமிற்கு அனுப்புகின்றனர். இன்னும் ஒருவரை காண்பித்து அவனையும் காப்பாற்ற வைத்துவிடு கடவுளே என்று முணுமுணுத்தபடி ஒவ்வொருவரையும் இழுத்து வந்து கயிறில் இறக்கி காப்பாற்றுகிறான் டாஸ்.

தனது கை வலி, கடுமையான காயம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் கிட்டத்தட்ட 75 வீரர்களை அங்கிருந்து பாதுகாப்பாக கீழே இறக்குகிறான் டாஸ். கடைசி நாளில் அவனுக்கு என்ன நேர்ந்தது, அவனது இச்செயல் மற்றவர்களால் அறியப்பட்டதா என்பதை விளக்கும் காட்சிகளுடன் படம் நிறைவடைகிறது.

போரின் கொடுமைகளையும், எதிரியை கொல்வதற்குள் தமது தரப்பிலிருந்து எத்தனை எத்தனை உயிர்களை இழக்கிறோம். மனித உயிருக்கான மதிப்பு என்ன? இந்த உலகில் அன்புக்கு இடம் உள்ளதா என்பது போன்ற பல ஆதார கேள்விகளுக்கு ரத்தக் கறையுடன் பதில் தேட முயன்றுள்ளார் இயக்குநர் மெல் கிப்சன். அவருக்கு பக்கபலமாக சைமன் டக்கனின் ஒளிப்பதிவு கைகொடுத்து போரின் உக்கிரத்தை உள்ளபடியே காட்சிப்படுத்தியிக்கிறார்.

இந்தப் படத்தை பார்க்கத் தவறியவர்கள் நிச்சயம் ஒருமுறை பார்த்துவிடுங்கள்.  ஆண்ட்ரூ க்ராஃபில்டின் நடிப்பு மறக்க முடியாது. டெஸ்மண்ட் டாஸை ஒவ்வொரு காட்சியிலும் நம் கண் முன் நிறுத்தியிருப்பார். போரில் எதிரியை முறியடிக்க  ஒருவர் ஆயுதம் ஏந்தும்போது அவர் இழப்பது என்ன? அது மனிதம்தான்.

போர்கள் சக மனிதர்களின் மீதான சிறிதளவு கருணையும் மறுக்கும்போது இந்த பூமி ஒரு நாள் சுடுகாடாக மாறிவிடும். அதனைத் தடுக்கவும் இத்தகைய கொடூர மரணங்களிலிருந்து மனிதர்களைத் தப்புவிக்க அமைதியையும் ஆன்மிகத்தையும் பின்பற்றுவதுதான் ஒரே வழி என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்த படம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com